கவிஞரின் நினைவுமலர் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

ஈழத்து கவிதை மூலவர்களில் ஒருவரான‌ கவிஞர் தா. இராமலிங்கம் அவர்கள் 1988 இல் இயற்கை எய்தினார். அவ்வேளையில் எழுதப்பட்ட அவர்சார்ந்த நினைவுமலரில் சில பகுதிகள் இல்லாமல் போய்விட்டன. ஆயினும் அந்நினைவு மலரின் மூலப் பதிவுகளிலிருந்து ஒரு தொகுதி உள்ளடக்கங்கள் பிரதி செய்யப்பட்டு, அவரது முழுமையான கவிதைகளை முன்னிறுத்திய ZOOM வழியிலான உலகம் தழுவிய‌ கலந்துரையாடல் நடைபெறவுள்ள‌ வேளையில் 34 ஆண்டுகளின் பின்னர் புதுப்பிக்கப்படுகின்றது.







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



மானாவளை வலைப்பதிவின் அறிவிப்ப ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி! சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்து வந்தார். மல்லாவி துணுக்காய் பகுதிகள் அரசபடைகளால் சுற்றிவளைக்கப்படும் வேளையில் கிளிநொச்சிக்குப் இடம்பெயர்ந்து வந்த சில தினங்களில் சுகவீனமுற்று இயற்கை எய்தினார். தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார். இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. அடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. தமிழ் சமூகத்துள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் போலியான சம்பிரதாயங்களையும் மிகுந்த எள்ளலோடு கவிதையாக்கியவர். தமிழ்த் தேசியத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் செயலாற்றி, எழுதிவந்த இராமலிங்கம் அவர்களது மறைவு ஈழத்தமிழ் உலகுக்கும், இலக்கியத்துக்கும் பேரிழப்பு ஆகும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நவீன கவிதைகளூடாக இலக்கியப்பணியாற்றி வந்த இராமலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்! 26.08.2008.




கவிஞர் கால்நூற்றாண்டு பணிபுரிந்த மன்றம் வீரசிங்கம் மகாவித்தியாலய வரலாறு ஸ்ரீமான் வீரசிங்கம் அவர்கள் மீசாலை வடக்குப் பகுதியில் 1840ம் ஆண்டிற்கும் 1915ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீவித்திருந்தார்கள். இவர் மீசாலை வடக்கில் இருந்த வேதாரணியரின் மகன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றவர். நியாய துரந்தரராவற்கான படிப்பும் படித்தவர். அவர் சீவித்திருந்த காலத்தில் இப்பகுதியிலுள்ளவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருந்தார்கள். தம் இளமைப்பருவத்திலிருந்தே இப்பகுதி யிலுள்ளவர்களைக் கல்வி அறிவு உள்ளவர்களாக்க முயன்றார். அந்தக்காலத்தில் அமெரிக்க மிஷனரிமார் அரசினர் உதவியோடு கிராமங்களில் பாடசாலைகளை உண்டாக்கிக் கல்வி கற்பித்து வந்தார்கள். அவர்களுக்கு மீசாலையில் இருந்து புத்தூருக்குப் போகும்தெரு - கண்டித் தெருவைச் சந்திக்கும் இடத்தில் தன்னுடைய காணியைப் பாடசாலை வைத்து நடாத்துவதற்குக் கொடுத்தார். அந்தப் பாடாசாலை மீசாலை முச்சந்திப் பாடசாலை எனக் கிறீஸ்தவ மிஷனறிமாரின் பாடசாலை ஆக 1924ம் ஆண்டு ஆவணி மாதம் முடிய நடைபெற்று வந்தது. கிறீஸ்தவ மிஷனரிமார் ஆரம்ப கல்வி கற்பிப்பதன் மூலம் கிறீஸ்தவ சமயத்தையும் போதிப்பதையும் அவர் கண்டார். இப்பகுதியிலுள்ளவர்கள் அடிஅடியாகக் கைக்கொண்டுவந்த சைவசமயப்பற்று, கிறீஸ்தவர்களின் கல்வியால் பாதிக்கப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருந்தது. 'தான் வசிக்கும் ஊரவர்களும், தன் பிறந்த வம்சத்தில் உள்ளவர்களும் கல்வியறிவோடு சைவசமயப்பற்று பண்பாடு உடையவர்களாக வரவேண்டும்" என்பது ஒன்றே அவருடைய நோக்கமாக இருந்தது. மகா பராதத்தில் வந்த வீட்டுமா போலத் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் ' விவாகம் செய்வதில்லை" எனவும் விரதம் பூண்டுளார். இப்படியாகச் சைவசமயப் பற்றும், அதை வளர்ப்பதில் அயராத சேவையும் அவருக்கு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமானின் முன்மாதிரியால் வந்தது எனலாம். மரணமாகும் வரை நித்தியப் பிரமசாரியாகவும் கல்விச் சேவையையே முழு நோக்கமாகவும் கொண்டு சேவை செய்து வந்தார். நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 1860ம் ஆண்டளவில் மீசாலை வடக்குப் பகுதியில் உள்ள வேம்பிராய்க் குறிச்சியில் தன்னுடைய ஆதனத்தில் ஓர் சைவப் பாடசாலையை ஆரம்பித்து நடத்தினார். அப்பாடசாலையை தான் தலைமை ஆசிரியராக இருந்து வேறு ஆசிரியர்களையும் நியமித்து நடத்தினார். ஆசிரியர்களுக்கான வேதனத்தை தன் சொந்தச் செலவாகவே செய்து வந்தார். அந்தப் பாடசாலை மீசாலைக் கிராமத்தில் முதலில் வந்த சைவப் பாடசாலை ஆகும். அதில் கல்வி கற்றவர் சிலர் இப்பொழுதும் சீவந்தர்களாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கிறிஸ்தவ மிஷனறிமாருக்கு அரசினர் பணஉதவி கொடுப்பதை அவர் கண்டார். தன்னுடைய வைச சமயப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அரசினர் உதவி பெறப் பாடுபட்டார். அக்காலம் நல்லூர் ஆறுமுக நாவலப் பெருமானின் சைவப் பாடசாலைகள் அரசினர் உதவி பெற்றுவந்தன. அது போலச் சாவகச்சேரியில் விசுவநாதர் தாமோதரம் பிள்ளை சைவசமயப் பாடசாலை உண்டாக்கி அரசினர் உதவியும் பெற்று நடத்திவந்தார். தாமோதரம் பிள்ளை அவர்களது பாடசாலை சைவாங்கில் கலாசாலை ஆக நடந்து வந்தது. 'வீரசிங்கத்தாரும் சாவகச்சேரிச் சங்கத்தானையில் நடைபெறும் தாமோதரம் பிள்ளை அவர்களின் சைவாங்கில் கலாசாலையைப் போல ஒன்று மீசாலையில் நடத்த முயற்சித்தார். மீசாலை முற்சந்தியில் நடந்துகொண்டிருந்த கிறீஸ்தவ பாடசாலைக்கு அருகில் உள்ள தன்னுடைய வேறொரு ஆதனத்தில் ஓர் உறுதியான கற்கட்டிடம் அமைப்பித்தார். அதில் மீசாலை சைவாங்கில் கலாசாலை என ஒரு பாடசாலையைத் தொடங்கினார். அப்பாடசாலைக்குத் தான் தலைமை ஆசிரியராக இருந்து மீசாலைப் பண்டிதர் ஏகாம்பரநாதன் அவர்களைத் தமிழ்ப்பண்டிதர் ஆகவும் சாவகச்சேரியில் உள்ள செல்லத்துரை என்பவரையும், மீசாலை கனகசபை என்பவரையும் ஆங்கில ஆசிரியர் களாகவும் நியமித்தார். இவர்கள் எல்லாருக்கும் வேதனம் அவராலேயே கொடுக்கப்பட்டது. இந்த, வீரசிங்கத்தாருடைய சைவாங்கில கலாசாலை அவர் மரணபரியந்தம் அரசினர் உதவி யின்றியே நடைபெற்றது. இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் மீசாலை, அல்லாரை, கச்சாய், மந்துவில் கிராமங்களில் இப்போதும் சீவந்தர்களாய் இருக்கிறார்கள். 1965ல் இலங்கை சாகித்திய மண்டலத்தாரின் இலக்கியப் பரிசு பெற்ற கச்சாயூர்ப் புலவர் சினனையா அவர்கள் இப் பாடசாலையின் பழைய மாணாக்கர் ஆவர். இப் பாடசாலைக்கு அரசினர் உதவிப் பணம் பெற அவர் பலவாறு முயன்றார். அரசினரின் அக்காலக் கொள்கை கிறிஸ்தவ மிஷனறிமாருக்கு உதவியாய் இருந்தது, 1915ம் ஆண்டளவில் சாவகச்சேரிச் சங்கத்தானையில் நடைபெற்ற சைவாங்கில கலாசாலையிலும் ஆங்கிலப் பிரிவை அரசினர் மூடச் செய்தார்கள். அதன் பின்னர் அப்பாடசாலையும் தமிழ்ப்பாடசாலை ஆகவே நடைபெற்றது. வீரசிங்கத்தார் தன்னுடைய வயோதிபத்தை உணர்ந்தார். தனக்குப் பின்பும் இந்தப் பாடசாலை சைவத்தையும் கல்வியையும் வளர்க்கத்தான் ஏற்பாடு செய்தார். அவர் தன்னுடைய ஆதனங்களின் வரும்படிகளிலிருந்தே இப்பாடசாலையை நடத்தி வந்தார். அந்த ஆதனங்களை யெல்லாம் இப்பாடசாலைக்குத் தரும சாதனஞ்செய்தார். அவற்றைப் பராமரித்துப் பாடசாலையை நடத்த ஓர் பரிபாலன சபையையும் சட்ட திட்டங்களுடன் நியமித்தார். 'மீசாலையில் தன்னுடைய பாடசாலை எக்காலமும் நன்கு நடைபெற்று அயல் கிராமவாசிகள் யாவரையும் சைவப் பண்பாடு உடையவர்கள் ஆகவும், கல்வி அறிவு உடையவர்கள் ஆகவும் ஆக்குதல் வேண்டும்." என்னும் ஒரே தியானத்துடன் 1916ம் ஆண்டு அளவில் சிவபதம் அடைந்தார். அவர் கண்டது கனவாகவில்லை. அவரது உறுதியான நினைவே வீரசிங்கம் வித்தியாசாலை. (யாழ். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது பற்றிய தகவல்கள் இங்குமறுபிரசுரமாகிறது.)



இக்கவிதை 22 ஆண்டுகளின் முன் அமரரால் எழுதப்பட்டது

உங்களுக்குக் கேட்கவில்லையா?

சிறீலங்காச் சிறைகளிலே எமது இளைஞர் உண்ணாமல் நோன்பிருந்து உடல்வற்றி உலர்ந்து ஒடுங்க உள்ளம் மினுங்கி உதித்த நிலவொளியில் விழித்து எழுங்கோ என்று கூவி அழைத்த குரல் இங்கு எம்மைத் தட்டி எழுப்புகுதே! உங்களுக்குக் கேட்கவில்லையா? முற்றுகை சுட்டெரிப்பு சிறைபிடிப்பு எல்லாம் தமிழ் இனத்தை முடமாக்கி இருந்து அரக்க வைக்கும் திட்டமிட்ட சூழ்ச்சிச் செயற்பாடு அல்லவோ? அவர்கள் கேட்கிறார்கள்: "எங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா எங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று. உங்களுக்குக் கேட்கவில்லையா? மரணதேவதைகள் சூழ்ந்து மலர்தூவி மங்களம் பாடி வாழ்த்த சிறைக்கம்பி பாடி வாழ்த்த சிறைக்கம்பி தாவிச் சிறகடித்து வந்த குரல் எமைஇங்கு தட்டி எழுப்புகுதே! அவர்கள் கேட்கிறார்கள்: "உங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா? உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று. உங்களுக்குப் புரியவில்லையா? ஏரிவளர்ந்த இளங்காளை மாடுகள் பாரம் இழுத்து வருவதைப் பாருங்கோ! லாடன் கட்டிய கால்களைத் தூக்கி வேகமாய் நடப்பதைப் பாருங்கோ! கப்புகள் வளைகள் கம்புகள் திடுகுகள் முன்வந்து உதவிடும் மக்களைப் பாருங்கோ அவர்கள் அழைக்கிறார்கள்: "வாருங்கள் மாண்டுபோன எம் மண்ணினை மீட்டிட உழைப்பு யாவையும் ஒருமுகப் படுத்துவோம்." (அலை புரட்டாதி 1986இதழ்)



இனி ஏது?

எங்கிருந்து வந்ததுவோ இந்தக் காற்று

தழுவிநிற்கும் மூங்கில் இரண்டு உராய்ந்து

பறக்கிறது சினப் பொறிகள் தீப்பொறியாய்!

காய்ந்த சருகு சுள்ளி விறகுகளைப் பற்றி,

எரியுது பட்ட மரங்களிலும் சேர்ந்து

பெருகு நெருப்பு! தளிர்ச் சிரிப்பால்

குளிர்விக்கும் செடிகொடிகள், கொத்துக்

கொத்தாய்க் பூத்துத் துலங்குகிற செம்மலர்கள்

இன்னும் பலவகைகள், குலைகுலையாக்

காய்த்துத் தூங்குகிற காய்வகைகள் கனிவகைகள்

எல்லாம்வெம்பிவெதும்புவதோ?

கருவண்டு முகந்தெரியும் முதுகோட்டுச்

சிறகு ஊதி வந்து தேன்

உறிஞ்ச.... இனி ஏது?

கூர்ச் சொண்டுச் சிறுபறவை

கூட்டமாய் வந்து கனிகொத்த.....

இனி ஏது?



மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் 4 Oct 2008 சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிறந்த தா. இராமலிங்கம் அவர்களின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது. இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள்(1964) காணிக்கை(1965) நூல்கள் மூலம் கிடைக்கிறது. 1960ல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ.யேசுராசா, திரு. பத்மநாபஐயர் போன்றோர் தொகுத்த 'மரணத்துள் வாழ்வோம்" தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர் பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூகநோக்கு, ஆழ்ந்தபுலமை, மனிதநேயம், இவற்றிற்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதிக அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான். 'ஞாபகமறதி" நோயினால் தன்னை மறந்த நிலையில் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது, இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப்படித்தல் வேண்டும். 25.08.2008 அமரத்துவம் அடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழீழம்) மண்ணில் 26.08.2008 தகனம் செய்யப்பட்டுள்ளது. மரணம் நிஜம் எனினும் வாழ்த்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில் அவரின் மரணம் பல செய்திகளை சொல்லிச் செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவது தான் இலக்கிய உலகம். அவருக்குச் செய்யும் சமர்ப்பணமாகும். முல்லை அமுதன், லண்டன்



நினைவுத்துளி அதிபர் தா. இராமலிங்கம் அவர்கள் எனக்கு மாமனார் முறை. மிகவும்கண்டிப்பு மிக்கவர். நானும் இவருடைய இளைய மகன் முருகனும் உறவுடன் கூடிய நண்பர்கள். 1986ம் ஆண்டு என நினைக்கின்றேன். மாணவர் போராட்டத்தின் எழுச்சிக்கட்டம், திடீர்திடீரென கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள், நாட்டுக்கூத்துக்கள் நடக்கும் காலம். ஒரு சனிக்கிழமை பின்னேரம் வீரசிங்கம் பள்ளிக்கூடத்தில் நாட்டுக்கூத்து என்று கேள்விப்பட்டோம். அந்த வயதிற்குரிய துடிப்பு,ஆவல் மதியமே நானும் முருகனும் என்தம்பி பரனும்அங்கு சென்றுவிட்டோம். இரண்டு மணி இருக்கும் மாமனார் வந்து இந்த அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். பூட்டிவிட்டு நில்லுங்கள் யாரும் தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் திறவுங்கள். நான் இன்னமும்10நிமிடங்களில் வந்து விடுவேன் என்று கூறிவிட்டு போய்விட்டார். யாரும் இல்லாது அலுவலகத்துள் நின்ற எம் கண்களின் தேடல்களிற்கு நெல்லிரசப் போத்தல் ஒன்று தென்பட்டது. அதை எடுத்த ஒவ்வொருவரும் ஒரு மிடறு குடித்தோம். சண்டை தொடங்கியது. ஒருவர் கூடக்குடித்ததாகவும், மற்றவர்கள் இன்னும் கூடக்குடிக்க வேண்டும் என்றும் வாக்கு வாதப்பட்டோம். போட்டி போட்டுக் கொண்டு இருந்த எமது கண்களிற்கு சீனி, GLASS என்பன வேறு தென்பட்டன. எல்லாவற்றையும், எடுத்து கரைத்து போட்டியை தொடர்ந்தோம். 3/4பங்கு போத்தலை வெகு இலகுவாக முடித்து விட்டோம். நாம் பிடிபடாமல் இருக்க ஒருவரை அலுவலக வாயிலில் காவலில் வைத்து விட்டு, மற்றவர்கள் குடித்தோம். ஒவ்வொருவரும் மாறி மாறி காவலில் நின்றோம். போட்டி தொடர்ந்தது. திடீரென கதவு மட்டும் சத்தம் கேட்டது. காவலுக்கு நின்ற பரன் ஓடிவந்து மாமா திரும்பி வந்துவிட்டதாகக் கூறினான். சீனி, GLASS, நெல்லிரசம் என்பனவற்றை வேகமாக இருந்த இடத்தில் வைத்துவிட்டு கதவை திறந்தோம். மாமா உள்ளே வந்தார். நாங்கள் மூவரும் நெளிந்து கொண்டு வெளியே சென்றோம். மனதுக்குள்பயம். ஆனாலும் பூசி மெழுகிவிட்டோம் என்ற நம்பிக் கையில் இருந்தோம். கலை நிகழ்ச்சி தொடங்கியது. 3 பேரும்இருந்துபார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓடிவந்து முருகனை அழைத்துச் சென்றார். ஏதோ அலுவலாக்கும்என்று நாம் கலை நிகழ்ச்சியுடன் ஒன்றிப் போயிருந்தோம். 10 நிமிடம் கழித்து முருகன்அழுது கொண்டு கன்னத்தைப் பொத்திக் கொண்டு வந்தார். எம் அருகில் வந்து அப்பா உங்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னதாக கூறினான். 3 பேருமாகபோனோம். வரிசையில் நிற்பாட்டி சணல்பேச்சு. பாடசாலை பணத்தில் வாங்கிய நெல்லி இரசத்தை தான் குடிக்ககூடாது என்று நினைத்துத்தான், தான் தன் வீட்டிற்கு TEA குடிக்க சென்று வந்ததாகவும், நீங்கள் பாடசாலை பணத்தில் வாங்கியதை எந்த யோசனையும் இல்லாது குடித்திருக்கிறீர்களே என்று பேசினார். கலைநிகழ்ச்சி முடிந்து மாமாவும் என் அப்பாவும் கதைத்துக் கொண்டு நின்றார்கள். எமது திருவிளையாடல் பற்றிதான் கதைக்கிறார்களோ? என்று ஓட்டுக்கேட்க முயற்சித்து, ஏன் அங்கே அடி வேண்டவேண்டும் என முடிவெடுத்து வீடு வந்து சேர்ந்து விட்டேன். பயம் தெளிய சில கிழமைகள் எடுத்தன. எனினும் இறுதிவரை என் அப்பாற்குச் சொல்லவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடையவனாவேன். பாரத் அருணாசலம்



அஸ்தமனம் உதயத்துக்காக கல்வயலிற் பிறந்து பருவத்தே கலை பெற்று கல்வியிலே கலை மாணியாகி முன்னர் செய் நல் வினையால் அருள் பெற்று தமிழ் தலை நிமிர நின் கடன் செய்து இசை அகத்திலே இன்புற வாழ்ந்து - ஈற்றில் மனை மறந்து மக்கட் செல்வங்கள் மறந்து தமிழிலில் நீ படைத்த கவிதை வரியும் மறந்து துணைவியாம் மகேஸ்வரியும் உலகும் மறந்து கதிரின் ஒளியிலேயே கண் அயர்ந்தனையே - குகரூபன்



MY GRANDFATHER My grandfather lived with us till my age of five. I called him as appathaththa. He taught me Tamil. I still can remember some stories and songs he used to tell me. When my parents were at work I used to stay with my appathaththa and appamma. Myself and my little brother Karthe liked him very much. He had been a wonderful grandfather. Grandson Udhishtran Arudchelvam OUR DEAR APPAPA I have known my grandfather from my childhood. I wanted to visit my grandfather in the summer vacation but I couldn't go because of the war. I was his first granddaughter. My grandfather called me poonchelvi, it is combined with my parent's name. I will always remember when he carried me around. I am very sad that he passed away. Granddaughter, Kasthoori Thamilchelvan I MISSED YOU We planed to meet him during last summer. But we could not visit to Sri Lanka because of war. He was a famous writer in Tamil. He wrote stories and poems. I will try to understand those, when I grow up. Granddaughter Karveri Thamilchelvan



மறக்கமுடியவில்லை வீட்டிற்கு குடும்பத்தலைவனாய் அன்பு காட்டும் நாயகனாய் கண்டிப்பு, கருணை உள்ளம் கொண்ட தந்தையாய் கதைகள், பாட்டுகள்சொல்லிக் கொடுக்கும் தாத்தாவாய் மருமக்களை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் மாமனாராய் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியவில்லை. வேண்டும் பொழுதில் சமையல் வேலைக்கு உதவி செய்திடும்சேவகனாய் நோயுற்ற வேளையில் இருகரம் தாங்கிடும் அன்புத்தாதியாய் வாழ்ந்த நாட்கள் மறக்க முடியவில்லை எப்படியும் வாழலாம் என்று வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று கோடு போட்டு வரவுக்குள் செலவு செய்து வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியவில்லை தலைமகனை இழந்து வீடே ஒளியிழந்து இருள்சூழ்ந்த போது நம்பிக்கை ஒளி ஏற்றி வாழ்வில் வெற்றி பெற்றதை மறக்க முடியவில்லை சைவ ஆசாரப்படி ஒழுகி அறநெறிப்படி வாழ்ந்ததை நேரம்கிடைக்கின்ற போதெல்லாம் 'பகவத்கீதை"யின்தத்துவப்பொருளில் 'உபநிடத்தின்"ஆழ்பொருளில் மூழ்கி இருந்ததை தியானத்தில் இறைவனுடன் ஒன்றியிருந்ததை இப்போது இறைவனுடன் இரண்டறக்கலந்துவிட்டதனை நம்பமுடியவில்லையே. --மனைவி--



நின்பணி தொடர்வ ம் கற்க கசடறக்கற்பவை கற்றபின்நிற்க அதற்குத்தக" என்ற வள்ளுவர்வாக்குக்கமைய நூல் களை கற்றுத்தெளிந்து,அதன்வழி ஒழுக்க நெறியில் வாழ்ந்தவர்கள் நீங்கள். "மங்கலம்என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம்நன்மக்கட்பேறு" என்ற குறளுக்கமைய நற்பண்புடைய மனையாளைப்பெற்று,நல்ல மக்களைபபெற்று இல்லறத்தை நல்லறமாக வழிநடத்தினீர்கள். "தந்தை மகற்கு ஆற்றும்நன்றி அவையத்து முந்தி இருப்பச்செயல்" என்ற வளளுவர்குறளுக்கமைய எம்மை எல்லாம்கல்விகேள்விகளில்துலங்கச்செய்தீர்கள். அதுமட்டுமல்ல கல்வியில் ஏழ்மையாய் இருந்த எத்தனையோ மாணவர்களை நல்வழிப்படுத்தினீர்கள். மாணவனொடு மாணவனாக கீழிறங்கிகற்பிக்கும் ஆற்றல்உங்களுக்கே உரித்தான தனிப்பண்பு. "நன்றி மறப்பது நனறன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற குறளில் கூறப்பட்டதற்கமைய நீங்களும் வாழவேண்டும் என்றுஅறிவுரை அளித்தீர்கள். உங்களிடம்இருந்து கற்றவை பெற்றவை ஏராளமப்பா. அன்புக் கணவனாய், தந்தையாய், மாமனாய், பேரனாய் இருந்துசெய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் செவ்வனே செய்து முடித்த உங்களிற்கு வெளிநாட்டில் இருந்த எம்மால் இறுதிக்கடன் செய்யமுடியாமல்போன சோகம் என்றும் எம்மை வருத்தும் அப்பா. உங்கள்அன்பு மனையாளும், இளையமகன் குடும்பமும் தம்கடன் செவ்வனே செய்து முடித்தார்கள் என்ற செய்தி கேட்டோம். "குடம்பை தணிந்து ஒழிய புன்பறந்தற்ற உடம்பொடு உயிரிடை நட்பு" எனும்வள்ளுவர் வாக்கை நினைத்து தேறுதல் பெறுகின்றோம். பி ள் ளை க ள், ம ரு ம க் க ள்



4 Oct 2008 மங்கா உயிரோவியம் அடுத்த வீட்டு நிகழ்வு , அடுத்த கண்டம் அவுஸ்திரேலியாவிலிருந்து அறிந்த போது, தகவல் பரிமாற்ற நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியாது. செய்தியறிந்து செய்வதறியாது நின்றோம். துயர்தோய்ந்த அச்செய்தி ஒரு முடிவின்ஆரம்பம்.(BIGINNING OF AN END) நிழலை நிஜமென்று மயக்க நிலையில் மிகவேகமாகச் சுழலும் பூம்பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மெய் எனும் பொய்த் தோற்றத்தை மெய்யாக நினைத்து எத்தனை செயற்பாடு. இந்த அரங்கில் நில்லாதனவற்றை நிலை என நினைப்பு. அழகிய ஒவியம்போன்றது அவரது வாழ்வு மங்குவாரின்றி மறையார் செயல்வீரர். (THEY SIMPLY FADE AWAY)தன்னைத்தான் காதலன் ஆவார். ஆகையால் அவரது வாழ்க்கை பிறருக்கு மனத்தாலும் தீங்கறியாது. ஆய்ந்தோய்ந்து எடுத்த கருமத்தைக் கச்சிதமாக முடிக்கும்ஆற்றல்அவருக்கு கைவந்த கலை. தான் சரியென உணர்ந்ததை எந்த சந்தர்ப்பத்திலும் காய்தல், உவத்தல் இன்றி துணிந்து சொல்பவர், செய்பவர். தான் பிழையெனக் கண்டதைச் செய்யவே மாட்டார். ஆதனால் அவரோடுநன்றாகப் பழகியவர்கள் கூட பிழையானதைச் செய்யுமாறு கேட்கத் தயங்குவர். நான் அவருடன் 34 ஆண்டுகள் பழகியும் அவரை முற்றுமுழுதாக அறிய முடிய வில்லை. “தோள்கண்டார் தோளேகண்டார்” அவர் ஒரு பல்பக்க பட்டை தீட்டப்பட்ட வைரம். ஓவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அழகு. அவரது வாழ்வும் அவ்வண்ணமே.(MULTIFACETED LIFE)அவர் எத்தனையோ பேருக்குப் படிப்பித்தார்.ஆயினும் அவர் வாழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்களோ அதிகம். எங்கள் குடும்பத்திற்கு மதிப்பு மிகு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். நல்லது செய்தோரை நேரில் பாராட்டும் பண்பு இவரிடம் உண்டு. அப்படிப் பாராட்டப்பட்ட ஆசிரியை ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த அந்நிகழ்ச்சியை என்னிடம்கூறி மட்டிலா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இவரது வாழ்வு ஒரு பற்றற்ற துறவியினது போன்று தூயது. இவர் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். பிறர் இவருக்குத் துன்பம்செய்த போதெல்லாம் தானே வருந்துவார். பிறர்நோய் தன்நோய்போல் உணர்ந்தவர். இவர் பொறுப்புணர்ச்சி மிக்க தந்தை கணவர், நண்பர், ஆசிரியர், அதிபர், முகாமையாளர், கவிதாவிலாசம்மிக்க கவிஞர் ஆகிய பல பாத்திரங்களை இந்நாடக உலகில் ஏற்று திறம்பட அவற்றிற்கு நியாயம் வழங்கி உள்ளார். இவர் ஒரு பிறவிக்கவிஞர். இவரது வெளிவந்த இரண்டு கவிதைநூல்கள் இதற்குச் சான்று. இவருடன் பழகிய இனிய நிகழ்வுகள் மீட்பது துக்கத்துள் எல்லாந்தலை. “SORROWS´ CROWN OF SORROWS IS THE REMEMBRANCE OF HAPPIER THINGS" பிறருக்கு விழுந்து விழுந்து உதவி செய்யும் இவரது எச்சங்கள்-பிள்ளைகள். தந்தையார் எத்தகைய தக்கார் என்பதற்கு வாழும் உதாரணங்கள். கலையருள் தமிழிசையொடு கவின்பெறு முருகென குழவிகள் ஐந்தும் அருமைமிகு இல்லக்கிழத்தியும் அமையப் பெற்றோன், பலரும் உவந்தேத்தும் பல்கலை மருமக்கள் அவர்தம் கண்மணி பத்துடன் நல் சுற்றத்துடனும் “ங” போல்வளைந்து வாழ்ந்தே நின்நாமம் நிலமிசை நீடு வாழ்க. ஓம்சாந்தி ! சாந்தி ! சாந்தி ! க.நாகலிங்கம், திருகோணமலை வடக்கு, கிழக்கு மாகாணசபை, தலைமைச்செயலாளர் அலுவலகத்து முன்னாள் நிருவாக அலுவலரும் அரசாங்க அதிபரின்அந்தரங்க செயலாளரும்.



ஆத்ம சாந்தி காலை எழுந்தவுடன்படிப்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு உன்னை வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்னும் பாரதிதாசன் கனவை நனவாக்கிட நல்லாசான் எனும் பெயர்தனைத்தாங்கி வீரசிங்கம்மகா வித்தியாலயம்தனில் பாரதியின் கனவே முழுமூச்சாய் முயன்ற முதல்வன் எங்கள் இராமலிங்கம் காலம் எதுவும் கருதாது கண்ணும் கருத்துமாய் மாணவர் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு மகிழ்வுடன்மற்றவர் மனம் கோணாது சலனமில்லாதுழைத்த முதல்வன் எங்கள் இராமலிங்கம் மலையது எதிரே வந்திடினும் மகிழ்வுடன்எதிர்த்தே வென்றிடணும்- என மாணவர்ஸ்டம் அத்தனையும் களைப்பின்றி களைந்த முதல்வன் எங்கள் இராமலிங்கம் ஒழுக்கம் விழுப்பம் தருமென்று ஒழுக்கம் அதனை மாணவருக்கு ஒழுங்காய் அதனை எடுத்தியம்பி ஒழுக்கசீலராக்கிய முதல்வன் எங்கள் இராமலிங்கம் எங்கள் நல்எதிர்காலம ஒன்றே குறிக்கோளாய் தங்கள் வாழ்நாள் அதனை அர்ப்பணித்து தங்கள் காலம் முழுதும்சேவை செய்த தவசீலன் முதல்வன் எங்கள் இராமலிங்கம் ஆசான என்னும் அழகுமொழி கொண்டு அன்புடன் அழைத்த எங்கள் இராமலிங்கம் ஆசான் இன்று எமைவிட்டு பிரிந்த செய்தி மடுத்து துன்பக்கடலில் துவண்டு நிற்கின்றோம் காலம்அது செய்த விதிதானோ காலம் அதை வென்றார் உலகிலுண்டோ காலத்தால் நீவீர்செய்த உதவி தனை நம்காலம்உள்ளளவும் மறக்கமாட்டோம் சுக்கிலம்அது மறைந்தாலும் நீவீர்செய் நல்தருமத்தால் சூட்சுமம் என்னும் உனதருமை ஆத்மாவை இறைவன் தன்வயப்படுத்திடவே இறைவனை நாமும் இறைஞ்சுகின்றோம் ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!! வீரசிங்கம்பழைய மாணவர் சங்கம் - கனடா



மீளும்நினைவுகள் எம்இனிய அத்தானே! காலமே கனிவாகி கவிதையே மொழியாகி ஞாலத்தில் வாழ்ந்தவரே! மௌனமாய் விழிசிந்தும் நீருடன் நீள்தொலைவில் இருந்து எழுதுகின்றோம்! அந்த இனிய நாட்கள் இன்றும் எம்மனதில்! மணவாள கோலத்தில் உன்மிடுக்கான தோற்றம் உதிரான உன்அன்புப்புன்னகை வற்றாத உன் அறிவுக்கடல் உதவத்துடித்திடும் உன்இரு கரங்கள் பாசமான இளகிய மனம் இன்னும் எத்தனை எத்தனை……………… அத்தனையும் பசுமரத்தாணியாக எம்நினைவில்! உலகனந்த பெருமாளுக்கே தசாவதாரம் ஆனால்…….. உனக்கெத்தனை அவதாரங்கள்ஐயா! அன்புக் கணவனாய் அறிவுத் தந்தையாய் பார்போற்றும் பாவலனாய் அறிவூட்டும் ஆசானாய் நல்லதிபராய் எமக்கெல்லாம் ஆசை அத்தானாய் இல்லை, இல்லை உடன்பிறவா அண்ணனாய் வாழ்ந்து காட்டிய கலங்கரை விளக்கு நீ! விதி சொன்ன கதை கேட்டு விழிவற்றிப் போனோம்நாம் அத்தான், அத்தான் என்று நாளுக்கு நாற்பது தடவை உச்சரித்த நா வரண்டு கிடக்கிறது இன்று நீவிர்நடந்த வழி முழுவதும் நீஎங்கே என கேட்கவிழிசிந்தும் நீருடன் உன் இருப்பிடம் தேடுகின்றோம் எம்இதய அறையுள்இரண்டற கலந்தவரே எம்இனிய அத்தானே மண்ணும் விண்ணும் உள்ளவரை அழியாது உன்நாமம் மறவோம் நாம் உம்மை. -மைத்துனிமார் கல்வயலின்சொல்லேர்உழவா!



மூத்தவனாய் வந்தெங்கள் குடும்ப முதுசொத்தே அத்தானென்ற சொத்தான வார்த்தையின் ஆண்டவனே எத்தாலும் மறவாது மனதுள் நினைக்கவைத்து சத்தான கல்வி கேள்விகளில் எம்மை நிறைக்க நித்தம் எங்கள் வாழ்வின் நிழல்மரமாய் வையத்துள் எமையெல்லாம் வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே இராமலிங்க ஐயனே அழவைத்து எம்மை விட்டு ஏன்அகன்றாய் சப்பிரகமுவா மாகாணத்தலை நகராம் இரத்தினபுரியிலே ஆசானாய்சேவை செய்தீர் சிவனொளிபாத மலை முகட்டில்சூரியனை எமக்கெல்லாம் காட்டி மகிழ்வித்தீர் அன்பால் ஆசையாய் அள்ளி அணைத்து பண்பால் பாசத்தால் பகுத்தறிவால் நிறைத்து இன்பமாய் நீங்கள் எம்மோடு வாழ்ந்த நாளினை துன்பம் மறக்க துணையாக கொள்வோமே மறக்க முடியலையே ஓடி மறைகிறதே உறக்கம் எல்லாம் உன்நினைவால் கடல்கடந்து வாழ்ந்தாலும் கலக்கம் அடையும் உடலுணர்வில் எம்தேச உறவுக்குள் வேறுபாடில்லை ஓடிவந்து பார்க்கவும் உன்முகத்தில் விழிக்கவும் தேடி வழிபார்த்தோம் தேசநிலை மாறவில்லை போரின்பிடிக்குள் போக்கிடமற்று மக்கள் போக்கு வரவில்லா ஏக்கம்தடுக்கிறது கல்வயலின் சொல்லேர் உழவா கால்காட்டும் நிலத்தை கவி காட்டும் தரத்தை இலக்கியத்தின் பெரும்பரப்பில் உன்புதுக்கவிதை இலங்கும்ஈழத்தின் தமிழ்புதுக்கவிதை நாயகனே மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய ஆசானே, அதிபனே, கவிஞனே, கருத்தாளனே சீராளா சிவதமிழ்தொண்டா சமயப் பேராளாபெரு அருளாள பெறுவாய்முத்தி மைத்துனர் விஜயபாலன்குடும்பம், லண்டன்



ஆத்ம இசை அரசியலையும் ஆத்மீகத்தையும் இணைத்துப் பார்த்தவர் - இராமலிங்கனார் ஈதல் இசைபட வாழ்தல் உயிர்க்கு ஊதியம் என்றே கருதி வாழ்ந்தவர் எல்லா உயிரும் தன்னுயிர் போன்றே ஏற்றி மகிழ்ந்தவர் ஒற்றுமை ஒன்றே நமது பலம் என்று ஓதியே தெரிந்தவர் ஒளவை சொல் மந்திரம் - மற்றவை தலை பிய்க்கும் தந்திரம் என்ற அன்றே சொன்னவர் அத்தி பூத்தார் பேசுவதும் சிரிப்பதும் அவரியல்பு – அவரை அறிந்தோர் இதனை அறிவர் செல்வச்சந்நிதி அமர்ந்த அருளொளி கடவுள் சுவாமியின் திருவடி நிழலிடை ஆத்ம சாந்தி அடையப்பெறுக பிரார்த்திப்போம் நாமே …. கடவுள் சுவாமியின் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்



5 Oct 2008 தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு என்.கே. மகாலிங்கம் அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத, தொடத் தயங்கிய கருப் பொருளையும் தன் கவிதைகளில் கையாண்டதும் தான். அவரின் கவிதைகளில் மூன்று குணாம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று, காமம். இரண்டாது, ஆசாரம் அல்லது ஒழுக்கம் அல்லது பண்பாடு. அதாவது, யாழ்ப்பாணக் கலாசாரத்தின் போலி ஒழுக்கம். குறிப்பாக, காமம் சார்ந்தது. மூன்றாவது, அடக்குமுறையைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட இனவுணர்வு. நாலாவது ஒன்றும் உள்ளது. அது சரியாக வெளிவரவில்லை. அதாவது, அவருடைய ஆன்ம விசாரமும் அனுபவமும். சிறுகதை, நாவல்களில் காமம் சார்ந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கருப்பொருளாகக் கையாண்டவர்கள் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், கே.டானியல், பவானி ஆழ்வாப்பிள்ளை என்றால் கவிதையில், அதுவும் புதுக் கவிதையில், காமத்தை கருப்பொருளாக பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுத்தியவர் தா.இராமலிங்கம். அவர் கடந்த மாதம் தன் எழுபத்து ஐந்தாவது வயதில் கிளிநொச்சியில் காலமாகி உள்ளார். அவர் இலை மறை கனியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது இருந்தவர். அவர் பிறந்த இடத்திலோ கற்பித்த, அதிபராகக் கடமையாற்றிய பாடசாலையிலோ கூட அவர் ஒரு கவிஞர் என்று கூடத் தன்னை அறிவிக்காதவர், காட்டிக் கொள்ளாதவர். ஆனால், மறைவாகவும் குறைவாகவும் எழுதி கவிதை உலகு ஒன்றில் தனித்தன்மையுடன் சஞ்சரித்தவர். ஆரம்பத்தில் 1964, 65 இல் முறையே ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ என்று இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவை அக்காலத்தில் அதிகம் கவனிக்கப் படாதவை. ஆனால், இரண்டிற்கும் முன்னுரைகள் வழங்கியவர்கள் இரண்டு முக்கிய இலக்கிய ஆளுமைகள். ‘புதுமெய்க் கவிதை’ தொகுதிக்கு அறிமுக உரை அளித்தவர், கவிஞரும் கவிதை விமர்சகருமான இ.முருகையன். ‘காணிக்கை’ தொகுதிப் பிரதியை அண்ணளவாகக் கவனித்து விமர்சனத்துக்கு உட்படுத்தி முன்னுரை அளித்தவர், விமர்சகர் மு.தளையசிங்கம். அந்த இரண்டு தொகுதிகளுக்குப் பிறகு தா.இராமலிங்கம் கவிதைத் தொகுதிகள் எதையும் வெளியிடாவிட்டாலும் அவரின் கவிதைகள் சிலவற்றை ‘அலை’ போன்ற இலக்கியச் சஞ்சிகைகள் வாங்கிப் பிரசுரித்தன. அத்துடன் சில கவிதைகள், ‘ஈழத்துப் பதினொரு கவிஞர்கள்’ என்ற தொகுப்பில் வெளியிடப் பட்டுமுள்ளன. தா.இராமலிங்கத்தின் கவிதை உருவம், சங்க காலக் கவிதைளின் யாப்பைப் போன்றது என்று கூறுகின்றார், கவிஞர் இ.முருகையன். சங்கக் கவிதைகள் உருவத்திற்கு பின் வந்த ஐவகைப் பாக்களிலில் ஏற்பட்ட ஓசை நயமும் மரபு ரீதியான யாப்பிலக்கண அமைப்பும் இவர் கவிதைகளில் இல்லை என்றும் குறைபடுகிறார். புதுக் கவிதை, ஓசை நயம், யாப்புத் தளைகள் ஆகியவற்றை வேண்டுமென்றே கைவிட்டது. செவியின்பத்திற்கு உணவளித்த காலம் போய் ஆறுதலாக தனித்திருந்து கண்ணால் வாசித்து, அமைதியாக படிமங்கள், உருவகங்கள் போன்றவற்றைக் கிரகித்து அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது. நவீன காலத்திற்கு ஏற்ப மேற்குலகில் வளர்ந்த கவிதை உருவம் அது. அதை vers libre or free verse என்பர். அதை வளர்த்தெடுத்தவர்கள், வோல்ற் விற்மன், டி.எஸ்.எலியற், எர்சா பவுண்ட், டபிள்யு.எச்.ஆடன் போன்றவர்கள். தமிழில் முன்னோடிகளாக, பாரதியையும் ந.பிச்சமூர்த்தியையும் சொல்வார்கள். பாரதியின் வசன கவிதைகள் வோல்ற் விற்மனின் கவிதைகளை அடி ஒற்றியவை. புதுக் கவிதைகளின் முக்கிய பண்பு உருவரீதியான பழைய யாப்புத் தளைகளை மீறியதே. அதனால் அதற்காக ஏற்பட்ட எதுகை, மோனைகளும், கவிதையை அனுபவிக்க முடியாமல் தளைகளாக கட்டிப் போட்டு இறுகப் பிடித்த, யாப்பிலக்கணமும் கைவிடப்பட்டன. இருப்பினும், புதுக் கவிதையும் அதற்கேயுரிய ஓசை அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மையே. ஆனால், அது மரபுரீதியான யாப்பிலக்கண ஓசைகளும் அல்ல. இவ்விடத்தில் ‘கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே, பட்டாங்கிலுள்ள படி’ என்ற புதுமைப்பித்தனின் பிரபல்யமான கவிதை அடிகள் இருமுனையும் கூர்மையான, மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் எதிரான கத்தியாகப் பாவிக்கக் கூடியது. உண்மையில் கவிதை உள்ளதா என்று பார்க்க வேண்டுமே அன்றி பிற கருத்துக்கள் கவிதை அனுபவத்திற்;குப் புறம்பானவை, தேவையற்றவை. உண்மையான கவிஞனுக்கு கவிதை மனமும் எழுச்சியும் வெளிப்பாடும் தான் முக்கியமே தவிர, அசைகள், தளைகள் அல்ல. அதுவும், நவீன காலத்தில், ஊற்றெடுக்கும் அடிமனத்திலிருந்து மேலேழுந்து வரும் சுயமான மேனியிலேயே எழுதப் படுவதே கவிதை. 2 காமம், காற்றைப் போல நீக்கமற இராமலிங்கத்தின் ஆரம்ப கவிதைகள் பலவற்றில் வெளிப்படுவது கண்கூடு. அந்தக் காமம், நிறைவான காமத்திலும் பார்க்கக் குறைபட்ட காமம். கள்ளக் காமம். ஓரிடத்தில் கிடைக்காத காமத்தை பிறிதொரு இடத்தில் கிடைக்கும் காமம். பிற இடங்களில் தேடும் காமம். அதற்காக மரணத்தைக் கூடத் துச்சமாக மதிக்கும் காமம். கலாசாரம் என்ற போலிக் கட்டுப்பாட்டை எதிர்க்கும் காமம். தூக்கில் தொங்கவும் தயாராகும் காமம். இப்படிப் காமத்தின் பல பக்கங்களைக் காட்டுகிறார். பின் வரும் பாடல் வரிகள் அவற்றை ஓரளவு காட்டுவதைக் காணலாம்: ‘நான் படுத்த சுடலையிலே, கள்ளமாய்க் காமம், உறவாடும் மனிதனைப் பார்’ ‘ஈர விறகு தந்தார், புகைக் குடித்து அடுப்பூதி, புகைச் சூண்ட பால் குடித்தன்,’ ‘அரை வெறியில் வந்திடுவார், சுடுகுது சுடுகுது, மடியைப் பிடி என்பார், மீன்னூகூது போலிருக்கும் பாட்டம் ஓய்ந்து, சிலுநீரும் சிந்திவிடும், போய் விடுவார்,’ ‘நரைக்குப் பசை பூச மண்டையிலும் மயிர் கொட்டுகுது! காமம் கொழுந்தெழுந்து ஊனை உருக்கி உறிஞ்சி எரிகிறது’ ‘பூட்டித் திறப்பதற்குத் திறப்பினை தேர்ந்தெடுக்கான் இடித்துப் பிளந்து விட்டான் இரத்தம் கசிந்ததம்மா’ ‘கொளுத்தக் கொளுத்த விளக்கும் நூருகுது பெட்டியிலே குச்சியில்லை ஆராய்ந்து என்ன பயன்? கிலுக்கினால்... வெறும் பெட்டி தடவினால் குறங்குச்சி’ போலி ஆசாரத்தை மறுத்தும் எதிர்த்தும் பேசுதல்: ‘ஆசார முட்டையிலும், கறுப்பு மயிர் கண்டேன்’ ‘ஆசைக்குச் சாதியில்லை’, ‘கற்புக்கரசியாய், வாழ் என்று வாழ்த்தி, சிலப்பதிகாரமும் தந்தார்’ ‘உண்மை உணராமல் மூன்றுகுறி பூசி முணுமுணுத்து ஆவதென்ன?’ ‘என்தன் பிணிநீங்க இறைவன் வழிபட்டு கற்பைக் கொளுத்திவிடக் கற்பூரமாய் எரிந்து காணிக்கை ஆனதென்றேன்’ காமம் கிடைக்காதபோது, முற்றுப் பெறாதபோது, அதற்குப் பங்கம் வந்தபோது, ‘ஓடிவந்தயல் விளக்குப் பிடித்து வேலியால் பார்த்தது விலக்குப் பிடிக்க எவருமே வந்திலர்’ ‘உலக்கை கிடந்தது வலக்கை துடித்தது உச்சந்தலை அடி ஓங்கி ஒரே அடி’ அவன் கட்டிய தாலியை அறுத்தெறுந்தேன்’ ‘தூக்கட்டும் தூக்கட்டும் தூய்மை துலங்க –ஒரு யுகம் பிறக்கும்’ 3 தா.இராமலிங்கத்தின் கவிதைகள், பொதுவாக அனைத்துமே, குறியீடுகளும், படிமங்களும் நிறைந்தவை. கவிதைகளுக்கு அணி சேர்க்காமல் அவையே கவிதைகளாக நிற்பவை. அவற்றைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. வெளிப்படையாகச் சில சொற்கள், சொற்கூட்டம் உள்ளன. அவ்வளவுந்தான். உணர்ச்சி, உருவம், உள்ளடக்கம், கற்பனை என்று ஒன்றை ஒன்று வெட்டி ஒட்டியும் தன் போக்கில் தன் எல்லையைக் கண்டடைகின்றன. ஈழத்துப் பதினொரு கவிதைகள் தொகுதிலுள்ள கவிதைகள் எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதப் பெற்றவை. அவற்றின் கரு எமது இனப் பிரச்சினையினால் ஏற்பட்ட துன்பங்கள். ‘மாரி மிகுந்து நிலம் கசிந்து ஒட்டுகுது ஓடு கசிந்து சிந்த ஒளியும் அணைகிறது! கோழி குளறுகுதே!! மரணாய்தான்! மரணாய்தான்! குழறக் குழறக் கொண்டு போகுது!! ‘கதவைத் திறப்பம் என்றால் நெஞ்சு பதறுகுது!’ என்றும், பாட்டம் பாட்டமாய் மழை கொட்ப் போவதனை மூடிக் கிடக்கும் முகிற் கூட்டம் காட்டுகுது எமக்கு ஓலைக் குடிசை என்றாலும் ஒதுங்கி இருக்க இடம் வேண்டும் வாருங்கள்.. என்றும், கேணி சிதறி விட்டது இளைஞரை இதனுள் கொணர்ந்து நிறுத்தி குண்டால் தகர்த்து படிக்கட்டு எல்லாம் பாறிப் பிளந்தன இரத்தப் பெருக்கில் தீர்த்தம் சிவந்தது’ இராமலிங்கம் தன் கவிதை மொழிக்கு யாழ்ப்பாண வட்டார மொழியையே தேர்ந்தெடுத்திருக்கிறார். அதை மிக இலாவமாகவும் அதற்கேயுரிய இழுப்புக்களுடனும் அளபெடைகளுடனும் உபயோகிக்கிறார், அவை கவிதைகளுக்கு ஒரு பின்னணியையும் மொழியையும் தாக்கத்தையும் கொடுக்கின்றன. தா.இராமலிங்கம் தன் கவிதைகளை யாரையும் தேடிப் போய்; பிரசுரித்தவர் அல்ல. அதனால் அவர் கவிதைகளில் பல பிரசுர வெளிச்சத்தை எட்டிப் பார்க்காமல் இருட்டறைகளிலும் நிலத்திற்கடியிலும் மூட்டை கட்டி புதைத்து வைத்திருப்பதாக அவருடைய மகள் செல்வி என்னிடம் சொன்னார். அந்தப் புதையல்கள் யார் கையில் அகப்படுமோ அல்லது அகப்படாமல் போய் விடுமோ என்ற பயம் எனக்குண்டு. அவை வெளி வரவேண்டும். அவருக்கு இன்னொரு பக்கம் இருந்ததை சக பயணியாகவும், அவரின் தமிழ் மாணவனாகவும் இருந்த நான் அறிவேன். அப்பக்கம் அவர் வெளியிட்ட கவிதைகளில் எதிலுமே சரிவர வெளிவரவில்லை என்பது என் ஆதங்கம். அது அவருடைய ஆன்ம விசாரமும், அனுபவமும். அவர் ஒரு சித்தரைப் போன்று வாழ்ந்தவர். தன்னை அழுத்தாதவர். பிரபல்யம் வேண்டாதவர். தன்னுள் ஒடுங்கிச் சுகம் கண்டவர். அவரின் கவிதைகள் பேசும் அளவு கூட அவர் பேசாதவர். அவரைக் கண்டு பிடிப்பது தமிழ்க் கவிதையின் ஆன்மாவைக் கண்டு பிடிப்பது போன்றது. 12



Oct 2008 கவிஞர் குடும்பம் / வம்சாவழி



23.Oct.2008 எளிமைமிகு படைப்பாளி எங்கள் கவிஞர் நான் மாணவனாக இருந்த காலங்களில் திரு. தா. இராமலிங்கம் அவர்களது சில கவிதைகளைப் படித்தமை காரணமாக ஒரு கவிஞர் என்றவகையில் என்னால் அறியப்பட்டவராக அவர் இருந்தார். எனது மாணவப்பருவத்திலேயே அவரது இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துவிட்டிருந்தன. தாயகத்தில் அவர் எனது அயலூரான கல்வயலில் பிறந்து வளர்ந்தவர். ஆயினும் அவரை நான் நேர்முகமாகச் சந்தித்திருக்கவில்லை. எங்களது முதல் சந்திப்பு மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திற்கு நான் மாற்றம் பெற்றுச் சென்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. ஒன்பது ஆண்டுகள் வரையில் அவருடன் ஆசிரியப்பணியினை அங்கு நான் மேற்கொண்டிருந்தேன். எனதிருபதாண்டுகால ஆசிரிய பணியில் எனது மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மனிதராக, அதிபராக அவரை இன்றுவரை என் நினைவுகளில் கொண்டிருக்கின்றேன். ஒரு சிறந்த ஆசிரியராக, தகை சார்ந்த நிர்வாகியாக, சக ஆசிரியர்களுடன் மிக நல்லுறவு கொண்ட அதிபராக அவர் விளங்கினார். அவரது எளிமையான வாழ்க்கைமுறை அவர் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் நிலைபெற்றிருந்தது. நடையுடை பாவனையிலும் உரையிலும் எழுத்திலும் கவிதைவரிகளிலும் எளிமையான, இதமான நடைமுறையினை அவர் பேணி வந்தார். திரு. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளை படித்திருந்தமையினால் மிகப் பரிச்சயமான நண்பர் போன்ற உணர்வு முதலில் சந்தித்த போதில் மேலோங்கியிருந்தது. பின்னாளில் அவரது கவிதைகளை எனது ஓய்வு நேரங்களில் தட்டச்சில் பல பிரதிகளாகப் பொறித்து ஆவணப்படுத்தும் பணியினையும் செய்திருந்தேனாகையால் அவரது கவிதைகளில் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தேன். அவரது கவிதைகளின் மீது ஆர்வம் கொண்ட ஒரு வாசகன் என்பதனைத் தவிர அவரது கவிதைகள் பற்றி கருத்துச்சொல்ல, விமர்சனம் எழுத எனக்குப் பக்குவம் போதாது. ஆயினும் அவரின் கவிதைகள் பற்றிய எனது சில மனப்பதிவுகளையும் கிளர்ச்சிகளையும் சொல்வதன் மூலமாக அவர் பற்றிய என் புரிதல்களை ஒருசில வரிகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன். பாரம்பரிய கவிதை இலக்கணங்களுக்குள் அகப்படாமல் சமுதாயம் சார்ந்த தன் பார்வைகளையும் சமூகத்தின் போலித்தனங்களையும் எளிமையான வார்த்தைகளில் நவீன கவிதைகளாக அவர் வடித்தார். ஒருவர் தனது வாழ்வில் இளமைப்பருவத்திலிருந்து முதுமைவரை பலவிதமான சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த மாற்றங்களை காண்பது வழக்கமானது. அமரர் அவர்களும் தான் அவ்வப்போது எதிர்கொண்ட மாற்றங்களை உள்வாங்கி, அவை அவருள் ஏற்படுத்திய சிந்தனைகளை கவிதைகளாக பிரதிபலித்தார். மாற்றங்கள் வேண்டும் என்கிற அவா அவரின் வரிகளில் இளையோடுகின்றது. மலைகளை, வனப்புமிகு காட்சிகளை மங்கையரை என கற்பனை விஞ்சிய, யதார்த்தத்துக்கு பொருத்தமற்ற ரசனைகளில் திரு. இராமலிங்கம் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. தமிழரின் வாழ்வியலின் பிரச்சனைகளை உயிர்ப்புடன் அணுகியதால் அவரின் கவிதைவரிகள் எம்முள் ஆழமான உணர்வுகளை உருவாக்குகின்றன. அவரது வரிகளை தட்டச்சிடுகையில் அவை சொல்லும் அர்த்தங்களால் பலதடவை செயலற்று இருந்துள்ளேன். சிங்கள இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு தமிழ்மகன் உயிர்விடும் தருணத்தில் தண்ணீருக்காக ஓலமிட்டபோது மனித நேயமிக்க இன்னொரு சிங்கள் இராணுவத்தினன் தன் இரும்பு தொப்பிக்குள் நீரேந்தி வந்து பருகக்கொடுத்த செய்தியைப்படித்த கவிஞர் எழுதிய கவிதையின் சாரம் இன்றுவரை என்னால் மறக்கப்பட இயலாததாக இருக்கின்றது. தமிழ்மக்களின் விடிவுக்காக தமிழ்த்தேசியத்தின் மீது அவர்கொண்டிருந்த நம்பிக்கையை கவிதைகளில் மட்டுமன்றி செயல்வழிகளில் அவர் வெளிப்படுத்தினார். பாடசாலை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பல்வேறுவழிகளில் தமிழ்த்தேசியத்தின் பாலான பல ஒத்துழைப்புக்களை அவர் தயக்கமின்றி வழங்கினார். அவ்வகை சார்ந்த எனது செயற்பாடுகளுக்கு அவர் மிகுந்த ஒத்தாசைகள் புரிந்தார். ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை பல நிலைகளில் வழங்கிய அந்த பெருமனிதர் இயற்கை எய்தியமை பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் சுற்றிவளைக்கப்படும் வன்னிமண்ணில். தற்போதைய இடப்பெயர்வு அவலங்களின் போதில் மல்லாவியிலிருந்து துணைவியார், இளையமகனாகிய மருத்துவக்கலாநிதி கதிர்ச்செல்வன் குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தவேளையில் அவர் இயற்கை எய்தினார். அமரரின் உயரிய சேவையால் வளம்பெற்ற கல்விநிலையமும் தென்மராட்சி மீசாலைச் சமூகமும் அவருக்கு நேர்முகமாகத் தமது அஞ்சலியை செலுத்தக்கூட இயலாதவாறு நிலைமைகள் அமைந்து போயின என்பது கவலையை அதிகரிக்கின்றது. இராமலிங்கம் அவர்கள் மக்களை நேசித்த ஓர் உன்னத படைப்பாளி. அவர் மறக்கப்பட முடியாதவர். தன் சேவைகள் வாயிலாக தென்மராட்சி மக்களின், மாணவர்களின் உள்ளங்களிலும் எழுதிய நவீன கவிதைகள் ஊடாக ஈழத்தமிழர் நெஞ்சங்களிலும்என்றும் நிலைத்திருப்பார். கனத்த மனவுணர்வுகளுடன் அவரது கவிதை ஒன்றில் இளைஞர்களுக்கு அவர்சொன்ன சிலவரிகளை இங்கே பதிவதுடன் இந்நினைவுக் குறிப்பினை முடிக்கின்றேன். இளைஞர்களே எச்சரிக்கை புயல் எழுந்து வீசிடலாம் உயர்மரங்கள் முறிந்திடலாம் குடியிருக்கும் வீட்டுக் கூரை பறந்திடலாம் வீணாகச் சக்தியினை விழலுக்கிறையாமல் வாருங்கள் இளைஞர்களே வந்தொன்று சேருங்கள்! காற்றடிக்கும் காலமிது கைவிளக்கை நம்பி இனி இருட்டில் போகாதீர் ! க.பொன்னுத்துரை கனோவர். யேர்மனி


> புகழ் பூத்த நண்ப கல்வி அறிவுமிக்க சான்றோர்கள் வாழும் கல்வயல் மண்ணில் பிறந்த பெருமைக்குரியவர் நீங்கள். நல்லவரையும், நல்லனவற்றையும் நன்கு தெரிந்தவர். கடமையும் சேவையும் உங்களது இரு கண்கள். வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் புகழ்பூத்த அதிபர்களில் நீங்களும் ஒருவர். எமது சமயத்தில் ~சாதி என்ற அரக்கனைத் துரத்தி அடிக்கவேண்டும் என்று கூறுவீர்கள். சொல்லிலும், செயலிலும் வாழ்ந்து காடடியவர் நீங்கள். உங்கள் கல்விக் குடும்பம் உங்கள் பண்பிற்கும், சேவைக்கும் இறைவன் அளித்த பரிசில். உங்கள் நலனே தங்கள் நலன் என்ற சுயநலமில்லாத தாயின் அன்பை நான் நன்கு அறிவேன். 'பொன்னும் பொருளும் வேண்டாம். தான் விரும்பிய பெண்ணே மேல்" என்ற தாயாரும் சகோதரர்களும் போற்றுதற்குரியவர்கள். இவர்களின் மேலான அன்பே தங்கள் வாழ்வின் ஆணிவேராகப் பரந்து, அன்பு மனைவியைப் பெற்று, நல்லதோர் குடும்பத்தை உருவாக்கி, பெரும் கல்விவிருட்சமாக வளர்ந்து உலகில் ஓங்கி உயர வைத்ததெனலாம். இவை மட்டுமன்றி நல்லாசான்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், பெற்றமை மேலும் உங்கள் வளர்ச்சிக்கு உரமூட்டியதெனலாம். நண்பரே! எமது பட்டப்படிப்புக் காலம் பச்சைப்பசேலென, இன்று போல் மனதில் பதிந்துள்ளது. இருவரது 16, 18 வயதுப்பருவம் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. நாம் நண்பர்களாக இருந்த பொற்காலம். எமது பாதுகாவலர் போலவும், சகோதரர் போலவும்இருந்து எமக்கு உதவி செய்த திரு. ஆ. சின்னையா(நியாயதுரந்தரர்) அவர்கள் அப்போது செரம்பர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தார். அவர்தான் எங்களிற்கு கல்கத்தா'சிற்றிக்கொலிஜ்" இல் இடம் எடுத்து தந்துதவினார். 1952-1957 வரை எமது பட்டப்படிப்புக்காலம். ஓய்வு வேளையில் எமது தாய் தந்தையர், எமது சமயம், சமூகம் பற்றி சிந்தித்த காலம். உங்கள் பகுத்தறிவுக் கொள்கை வளர்ந்த காலம். கவிதை உங்களிற்குள் உதயமான காலம். எமது நட்பும் வளர்ந்த காலம். 1955 இல் நீங்கள் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு B.A.(Final) படிக்கசென்றீர்கள். நான் கல்கத்தாவில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். ஆனாலும் நம் நட்பு வளர்ந்தது. கல்லூரி விடுமுறை நாட்களில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். எனது சகோதரியை காதலித்து கரம்பிடித்தபின் நட்பு ஒருபடி உயர்ந்து, உறவை பலமாக்கிக் கொண்டதெனலாம். சுயநலமான, தனக்கு மிஞ்சிய ஆசைகளால் துரத்தப்பட்டு சறுக்கி விழுந்த பல குடும்பங்களை நாம் அறிவோம். சரியானதைப் பற்றிப் பிடித்து ஒங்கி வளர்ந்த பல குடும்பங்களையும் அறிவோம். எல்லாமிருந்தும் ஒன்றும் எஞ்சாமல் அழிந்த நாடுகளைப் பாருங்கள். தெய்வ அன்பை நன்கு புரிந்து கொள்ளாத மனிதர்களும், சமயங்களும் எப்படி அழிந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இன்றைய உலகம் சுயநலவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இறைவன்மேல் கொண்ட பக்தியும், சரியானவற்றை புரிந்து கொண்ட அறிவும், பகுத்தறிவும் உங்களை மேன்மையுறச் செய்தது என்றால் மிகையாகாது. நீங்கள் தியான வாயிலாக ஞானத்தை தேடினீர்கள். இறுதியில் இறைவனே உங்களை யோகத்தில் பல நாட்களாக அமர்த்தி, உலக வாழ்வின் அநித்தியத்தை நன்கு புரிய வைத்து, இறுதியில் உங்களை நீங்காத் துயிலில் வைத்தார் போலும். வாழ்க உங்கள் நாமம். உங்கள் ஆத்மா இறைவனுடன் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். தங்கள் அன்பன், ம. அருணாசலம், இளைப்பாறிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி துணைஅதிபர், சிலாபம் சர்வதேசப் பாடசாலை அதிபர்.



மதிப்புடன் வாழ்ந்த பெரியார் சமூகத்தை உயர்நிலைக்கு உருவாக்கும் கல்விக்கூடங்களை முகாமைத்துவம் செய்யும் அதிபர் பணியானது ஏனைய பணிகளிலும் பார்க்க மிகவும் சிறப்பானது. உரிய கல்வி இலக்கை நோக்கிப் பாடசாலைச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் அதிபர் எல்லோரினதும் பாராட்டுதலுக்கு உரியவராகின்றார். இந்த வகையில் யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக, உப அதிபராக 14 ஆண்டுகளும் அதிபராக 11 ஆண்டுகளும் பணியாற்றி அமரத்துவம் அடைந்த திரு. தா. இராமலிங்கம் அவர்களின் சேவையை மக்களும், கல்விச் சமூகமும் நன்கு அறியும். கல்வயலைப் பிறப்பிடமாகவும் மீசாலையை வதிப்பிடமாகவும் கொண்ட இவர் அதிபராகக் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தி அதிபர் பணியைச் சிறக்கச் செய்தவர். பல்வேறு கஷ்டங்கள், வசதியீனங்கள் என்பவற்றை எல்லாம் எதிர்கொண்டு, பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல காரணமாகத் திகழ்ந்தவர். இவருடைய காலத்தில் கல்வி கற்ற பலர் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உயர்வான பதவிகளை வகிக்கின்றனர். இவரின் காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றது. அமரர் திரு. தா. இராமலிங்கம் அதிபராக இருந்த காலத்தில் நான் பிரதி அதிபராகக் கடமையாற்றியுள்ளேன். பாடசாலை தொடங்கு முன் 7:30 மணிக்கே பாடசாலைக்கு வந்துவிடுவார். பாடசாலை விட்ட பின் மாலை வேளைகளிலும், விடுமுறைதினங்களிலும், பாடசாலைக்கு வந்து பணியாற்றி தன் நேரத்தை அர்ப்பணித்து, பாடசாலையின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர். போர்ச் சூழல் காரணமாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்த வேளைகளில் பாடசாலையை திறம்பட நிர்வகித்து பாடசாலையின் தரத்தைப் பேணிய பெருமைக்குரியவர். நிறைந்த இறைபக்தியும், சேவை மனப்பாங்கும் உள்ளவர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்” என்பது வள்ளுவர் வாக்கு. இவருடைய நற்பணிகளால் இவரின் பிள்ளைகள், மருமக்கள், யாவரும் கல்வியில் உயர்ந்து பெரும் பதவிகளை வகிக்கின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அன்னாரின் மறைவினால் துயருற்றுக் கலங்கி நிற்கும் அன்னாரது குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை வேண்டிக்கொள்கின்றேன். திரு. வே. நாகராசா J.P. ஓய்வு பெற்ற பிரதி அதிபர், யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் .



கல்விப்பணி புரிந்த ஏற்றமிகு நல்லாசான் அமரர் தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் மரணச்செய்தியை அறிந்து, நாங்கள் பெரிதும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். அன்னாரின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு 1982ம் ஆண்டு முதல் எங்களுக்குக் கிடைத்தது, இத்தொடர்பு இன்றுவரை தொடர்வதை இட்டு நாங்கள் பெருமை அடைகின்றோம். அமரர் இராமலிங்கம் அவர்கள் சாவகச்சேரியில் உள்ள, கல்வயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தைச் சேர்ந்த பலர், கல்வித்துறையில் முன்னேறி, அளப்பரிய பணி புரிந்துள்ளார்கள். இவர் ஒரு நல்லாசிரியனாக, சிறந்த அதிபராக, கவிஞராக, எழுத்தாளராக, குடும்பத் தலைவனாக், தந்தையாக, ஆலோசகனாக விளங்கினார். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் பல வருடங்கள் அதிபராக இருந்து, பணி ஆற்றி, இவ் வித்தியாலயத்தின் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மத்தியில் ஒரு நல்லுறவைப் பேணி வளர்த்தவர். இவ்வித்தியாலயத்தில் இருந்து, பல மாணவர்கள் உயர்தர வகுப்பில் படித்துப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர். இவருக்கு கவிதை இயற்றும் ஆற்றல், இயல்பாகவே இருந்தது. தமிழ், சமயம், தமிழர் பண்பாடு முதலியவற்றில் ஊறித்திளைத்தவர். தனது மாணவர்களும், ஆசிரியர்களும், இப்பிரதேசமக்களும், இத்தமிழ் பாரம்பரியத்தினைப் பின்பற்றவேண்டும் என்று விரும்பியவர். பவணந்தி முனிவரால் கூறப்பட்ட நல்லாசிரியனுக்கு உரிய பண்புகள் எல்லாம் இவரிடம் காணப்பட்டது. இவரது நேர்மையையும், சிறந்த பண்புகளையும் உயர்ந்த நோக்கங்களையும் நம்மால் மறக்கமுடியாது. இவர் மீசாலை வடக்கைச் சேர்ந்த, ஆறுமுகம் தம்பதிகளின் மகளை மணந்து, நடத்திய சிறந்த இல்லறவாழ்வின் எச்சங்களாக, அவருடைய பிள்ளைகள் விளங்குகின்றனர். 'பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற" என்ற வள்ளுவர் பெருமானின் குறளுக்கு இலக்கணமாக இவரது பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்குகின்றனர். இவரோடு உரையாடும்போது அவர் முதிர்ந்த அறிவு, ஞானம் நிறைந்தவர் என்பதை அறியக்கூடியதாக இருந்தது. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை வேதனையுடன் தெரிவித்து அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். புலவர்மணி, பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம், கொழும்பு



என் தமிழ் ஆசான், கவிஞர் தா.இராமலிங்கம் இப்பொழுது அடிக்கடி அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதும்படியாகி விட்ட காலமிது. மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. இருந்தும் எனக்குத் தெரிந்தவர்கள், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்கள்அதிகமானோர் இறந்து கொண்டிருப்பது இப்பொழுது அடிக்கடி நிகழுகின்றது போலும். மரணச் செய்திகள் என்னை நெருங்கி என் கதவைத் தட்டி அடிக்கடி காற்று வாக்கில் சொல்லிச் செல்கின்றன. மரணம் நித்யம் என்ற உண்மையிலிருந்தே ஆழ்ந்த தத்துவங்கள் எழுந்தன. அவற்றை எழுதுவதால் மரணத்தின் ஒரே பக்கத்தையே திரும்பத் திரும்ப எழுதுகின்றோம் என்ற உணர்வும் வந்து கொண்டிருக் கின்றது. அப்படி வந்து சேர்ந்த செய்திதான் ஆசிரியர் தா.இராமலிங்கத்தின் மரணச் செய்தியும். இறுதியாக, கிளிநொச்சியில் வாழ்ந்திருக்கிறார். அவரும் ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார். அது எல்லா ஈழத் தமிழருக்கும் ஏதோ ஒருவகையில் ஏற்பட்டிருக்கும் பொது விதி. மறதி நோய் என்றும் கேள்வி. பயங்கர நினைவுகளை மறக்க முதியோர்க்குக் வசதியாகக் கிடைத்த பாதுகாப்பு மன அரண் –defense mechanism–போலும் அது. தா.இராமலிங்கம் கவிஞராக முகிழ்ப்பதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், முகிழ்த்த போதும் எனக்கு அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரத்தினபுரியில் புனித லூக்கா கல்லூரியில் அவர் கற்பித்துக் கொண்டிருந்த போது, அவரிடம் படித்துக் கொண்டிருந்த மாணவன் சுப்பிரமணியம் என்னை அவரிடம் கூட்டிச் சென்றார். அப்பொழுது தா.இராமலிங்கம் ஆசிரியர் திருமணமாகிய புதிது. இளைஞர். முப்பது வயது மட்டில் இருக்கும். இரத்தினபுரிக்கு அவர் கற்பிக்க வந்தும் கொஞ்சக் காலம் தான். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரி. கணிதவியல் கற்றவர். அதையே கல்லூரியில் கற்பித்துக் கொண்டும் இருந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, மேசையில் திருக்குறள் நூல், சுவரில் வள்ளுவர், பெரியார், அண்ணாத்துரை படங்கள். அவர் சைவஉணவுக்காரர், நாத்திகர் என்றும், திருமணம் கூட அப்படித்தான் நடந்தது என்றும், திராவிடக் கொள்கைகள் கொண்டவர் என்றும் அவரைப் பற்றி சுப்பிரமணியம் எனக்கு ஏற்கெனவே சொல்லியிருந்தார். மிகவும் அடக்கமான, அமைதியான, கூச்ச சுபாவம் கொண்ட, நளினமும் மென்மையும் கொண்டவர். எனக்குத் தெரிந்த, திராவிடக் கருத்துக்களால் கவரப்பட்ட மாணவர்கள் அதிகம் பேசுபவர்கள், தங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் உரத்துச் சொல்பவர்கள். வேகமும் தீவிரமும் கொண்டவர்கள். பாடசாலையில் தேவாரம் படிக்கும் போது, கும்பிடாமல் கைகட்டிக் கொண்டு நிற்பவர்கள். இவரோ மிகவும் அமைதியாக இருந்தார். பழந் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராகத் தெரிந்தார். தமிழில் எம்.ஏ. பட்டம் எடுப்பதற்கு படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருந்தார் சுப்ரமணியம். அது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது. சில மாதங்களுக்குப் பிறகு அவர் கற்பித்த அதே பாடசாலையில் நானும் மேல் வகுப்பு மாணவனாகச் சேருவேன் என்பதோ அவர் எங்களுக்குத் தமிழ் கற்பிப்பார் என்பதோ அப்பொழுது எனக்குத் தெரியாது. அந்தப் பாடசாலையில் அதற்கு முன்னர் எச்.எஸ்.சி வகுப்பு இருக்கவில்லை. எங்கள் நாலு பேருக்காகத் தொடங்கப்பட்டதே அந்த வகுப்பு என்றும் கொள்ளலாம். நாங்கள் சித்தியடைந்து சென்றவுடன் அந்த வகுப்பும் மூடப்பட்டது சோகம். அதுவே, மலையகத்தில் இயல்பான நிகழ்வு. மலையகத்தில் அப்படிப் பட்ட நிகழ்வுகள் நடைபெற்றதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. காரணம், மேல் வகுப்புப் படிக்கும் மாணவர்களும் குறைவு. ஆசிரியர்களும் வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி அங்கு சேவை செய்ய வரும் பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாகாணங்களில் வேலை கிடைக்காதவர்கள். முதல் நியமனம் பெறுபவர்கள். வெளி மாகாணங்களில் சில ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற திணைக்களத்தின் நிர்ப்பந்தத்தினால் வந்தவர்கள். பின்னது, பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கும் பொருந்தும். தா.இராமலிங்கம் தமிழ் ஆசானாக எங்களுக்குக் கிடைத்தது எனது பாக்கியம் என்றே சொல்வேன். கற்பிப்போர் பலர் மேலும் மேலும் கற்பவர்கள் அல்ல. ஆனால், ஆசிரியர் இராமலிங்கம் மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கற்கும் இயல்புள்ளவர். வேகமாகக் கற்று பல்கலைக் கழகத்திற்குச் செல்ல எண்ணி, பல மணி நேரம் உழைத்த என் போன்ற மாணவர்களுக்கு சளைக்காமல் அவரும் கற்றார். கற்பிப்பதற்காக மட்டும் கற்காமல் அறிவுத்தாகம் கொண்டும் கற்றார், கற்பித்தார் என்றே சொல்ல வேண்டும். மாணவர்களுக்குக் கற்பிப்பதற்குத் தேவையான நூல்களை கொழும்பு சென்று வாங்கி வந்தார். அப்படி வாங்கி வந்த நூல்களால் எங்கள் வகுப்பு நிரம்பி, நூலகம் ஒன்றே ஏற்பட்டது. எல்லாம் புதுப் புத்தகங்கள். நாங்கள் அதுவரை பார்க்காத சங்க நூல்கள் பலவும் அங்கே கிடைத்தன. தொல்காப்பியம், நன்னூல், இலக்கணச் சுருக்கம் போன்றவை கிடைத்தன. இலக்கணத்தை அவற்றிலிருந்தே எங்களுக்குக் கசடறக் கற்பித்தார். திருக்குறள், நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாஞ்சாலி சபதம், இலக்கிய வரலாறு, சங்கப் பாடல்கள், புதுமைப்பித்தன் கதைகள் என்று பலவற்றை எங்களுடன் கூடவே கற்றார். ஆழமாகக் கற்பித்தார். கற்பித்தல் கூட, மாணவர்களுக்கு வழிகாட்டியாகவே. கலந்துரையாடல் முறை. மாணவர் மையம் கொண்ட முறை. ஆழமாக கற்றோம். இரண்டு வருடங்கள் செறிவான, ஆழமும் விரிவும் கொண்ட கற்றல். பல்கலைக் கழகத்தில் நான் கற்ற தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை ஏற்கெனவே இவரிடம் கற்ற அடிப்படையில் எழுப்பப்பட்டதே. இப்பொழுது நினைக்கும்போதும் அது பிரமிப்பாக இருக்கிறது. அதற்கு முன் அவருடைய நவீன இலக்கிய அறிவு அண்ணாத்துரை, மு.வரதராசன் போன்றவர்களுடன் நின்றிருந்தது என்றே நினைக்கிறேன். எங்களுக்கு இலக்கிய வரலாறு கற்பிக்க வெளிக்கிட்டவுடன் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன்,ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் அவருடைய வாசிப்புப் பரப்பில் சேர்ந்து கொண்டார்கள். ஆனால், புதுக் கவிதைகள் அவருக்கு அறிமுகமாகவில்லை. அத்துடன் அக்காலத்தில் தான் புதுக் கவிதைகள் அறிமுகமாகி பெரும் அலையாக தமிழ் நாட்டில் வேரூன்றத் துவங்கியது. என்னுடன் நெருக்கமாகப் பழகிய கவிஞர் மு.பொன்னம்பலத்தினால் எனக்கு புதுக் கவிதை அறிமுகம் கிடைத்தது. மு.தளையசிங்கத்திற்கு 'எழுத்து' சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் மு.பொ. கவிதை எழுதியிருந்தார். அதை ஆசிரியர் இராமலிங்கத்திற்குக் கொண்டு வந்து காட்டினேன். அவற்றை வாசித்து புதுக் கவிதைகளில் ஆர்வம் கொண்டார். 'அக்கினிக்குஞ்சொன்றை பொந்திடை வைத்தது' போன்றதே அந்த நிகழ்வு. அதில் தீவிரமாக ஈடுபட்டார். ஒவ்வொரு நாளும் பல கவிதைகள் எழுதிக் கொண்டு வந்து எங்களுக்கு கரும்பலகையில் எழுதியும், வாசித்தும் காட்டினார். நாங்கள் பல்கலைக் கழகத் தேர்வு எழுதிய பின்னர் பல மாதங்கள் வகுப்பில் சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த காலம் அது என்று நினைக்கிறேன். ஒரு ஆறு மாதத்திற்குள் பல கவிதைகள் சேர்ந்திருக்க வேண்டும். (அக்காலத்தில் அப்படியான கவிதைகள் இலங்கைப் பத்திரிகையில் வெளிவராத காலம். எமதுகவிஞர்கள் மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள். திறனாய்வாளர்கள் புதுக் கவிதைளுக்கெதிராக விமர்சனம் வைத்துக்கொண்டிருந்தார்கள்.) அது 1964 என்று நினைக்கிறேன். அவற்றைக் கொழும்புக்கு கொண்டு போய் அவர் கிராமத்தைச் சேர்ந்தவரும் அவருக்குத் தெரிந்தவருமான கவிஞர் இ.முருகையனிடம் காட்டி, முன்னுரை வாங்கி அதை அவரே –தா.இராமலிங்கம்- தன் செலவில் வெளியிட்டார். அப்படித் தன் செலவில் வெளியிடுவதும் அப்படியொன்றும் அக்காலத்தில் -இக்காலத்திலும் -புதிய விசயமல்ல. அதுவே 'புதுமெய்க் கவிதைகள்' என்ற தொகுப்பு. யாழ்ப்பாண வாழ்க்கையில் காணப்படும் போலிப் பண்பாடு, சாதியப் போலித்தனங்கள் ஆகியவற்றை, இதுவரை ஈழத்து இலக்கியங்களில் காணப் பெறாத யாழ்ப்பாணக் கிராமிய மொழியில், இலக்கண விதிகளைப் பின்பற்றாமல், வித்தியாசமான, புதிய புதுக் கவிதை நடையில் எழுதப்பெற்ற கவிதைகளை உள்ளடக்கியது அது. அதில் ஒன்று 'ஆசைக்குச் சாதியில்லை' என்ற கவிதை. வேளாளர் குடிப்பிறந்து பிறர் ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் மேற்சாதி நான் என்றாலும் மருந்துக்கு நல்லதென்றால் கள் அருந்துவதில் என்ன குற்றம்? ... இன்றுங் கூட, அப்படியான புதுக்கவிதைகள் தனித்துவமானவை. மரபார்ந்த செய்யுள் யாப்பை உடைத்த புதுக் கவிதைகள் தாம் அவை. ஆனால், புதுக் கவிதைகள் போல் புரியாத் தன்மையோ சூக்குமமானதோ, படிமங்கள் நிரம்பியதோ, ஓங்கி விழும் சொல் அடுக்குகளோ, பொய்யான சோடிப்புகளோ இல்லாத, மெய்யான உள்ளுறைகளுடன் இயல்பாகவே வெளிப்பட்டவை அவை. அவருடைய கவிதைகள் நகல் எடுக்க முடியாதவை. அதற்கு முயன்றால் போலியாகவே ஆகி விடும் ஆபத்து ஏற்படும். அதன் தனித்தன்மை அவை அவர் அகத்திலிருந்து வருபவை. போலியானவை அல்ல. அவருடைய அகம் அவருடையதே. அவர் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் சமூக ஏற்றத் தாழ்வுகளையே மையமாகக் கொண்டவை. யாழ்ப்பாணத்தவரின் போலிப் பண்பாடுகளையே சாடியவை. அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'காணிக்கை' அடுத்த ஆண்டே வந்தது. அதற்கு மு.தளையசிங்கம் முன்னுரை அளித்தார். அக்காலத்தில் அவருக்கு மு.த., மு.பொ. ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களும் அக்காலத்தில் இரத்தினபுரியில் இருந்தவர்கள். அக்காலத்தில் தா.இராமலிங்கம் மிக மும்முரமாகத் தன் ஞானத்தேடலை ஆரம்பித்தும் விட்டார். மு.த.,மு.பொ, நான் என்று ஏழு பேர் ஞான குருவிடம் தீட்ஷைபெற்றோம். தியானம், சத் சங்கக் கூட்டம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இயங்கத் துவங்கினோம். அதில் தியானத்தில் மிக வேகமாகவும் ஆழமாகவும் நீண்ட பல மணித்தியாலங்கள் ஆழ்ந்தவர் இவரே. இயல்பாகவே தீவிரமான உழைப்பாளி. கல் பூமியையே தன் புய வலியாலும் அலவாங்காலும் உடைத்து கிணறு வெட்டி காய்ந்த, வரண்ட பூமியையே செழுமையாக்கி பயிர் உண்டாக்கி வாழ்ந்த யாழ்ப்பாணக் கமக்காரனின் உழைப்புப் போன்றதே அவருடைய ஞானத் தேடலும். கண் துஞ்சாத, கருமமே கண்ணானவர். பகுதி நேர ஞானத் தேடல் அவருடையது அல்ல. தியானத்தில் ஒடுங்கி ஆழ்ந்து இருந்து விடுவார். அவருக்குள் இருந்த தேடலை அவர் வெளிக்காட்டியது சில கவிதைகளாலும், அவர் எழுதிய சில குறிப்புக்களாலும் என்றே நினைக்கின்றேன். அக்குறிப்புக்களை அவர் தனக்காகவே எழுதி வைத்தார். அவற்றை அவர் வெளியிட்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அவரை அதன் பிறகு ஒருமுறை சந்தித்தபோது, ரமணரின்'நான் யார்?' என்ற விசாரத்தில் ஆழ்ந்து போயிருந்தார். ரமணரைப் போலவே அவரும் தனியாக தன்னிலை உணர்ந்தவராக இருந்தார். அக்காலத்தில் அவர் ஆரம்ப ஞான குருவின் செயல்களில் ஏமாற்றமடைந்து தன்னுள் ஆழ்ந்து போய் இருந்தார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகிச் சென்று விட்டார். அவர் அக்காலத்தில் எழுதினாலும் கூட, வெளியிடுவதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. அவரிடம் தேடிச் சென்று சில கவிதைகளை வாங்கிப் பிரசுரித்தவர் 'அலை' ஆசிரியர் அ.யேசுராசா. அவருடைய சில கவிதைகள் அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் தொகுத்த 'பதினொருஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பிலும், 'மரணத்துள் வாழ்வோம்'தொகுப்பிலும் வெளிவந்தன. அவருடைய இன்னொரு கவிதைத் தொகுப்பை வெளிக் கொணர பத்பநாப ஐயர் சில முன்னெடுப்புக்கள் செய்ததாகவும், அது வெளிவரவில்லை என்றும் அறிகிறேன். பிற்காலத்தில் அவர் கவிதை எழுதியது அவரின் உள்ளார்ந்த உந்துதலாலேயே. அவை அவரின் தேடலின் வெளிப்பாடுகள் அல்ல. மற்றவர்களின் தேவைக்காகவோ பிரசுரத்திற்காகவோ அவர் எழுதியவர் அல்ல. அவருடைய மனநிலை பின்னர் இயல்பாகி விட்ட யோக நிலையில் அப்படி எழுத முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் பின்னர் வெளிவந்த அவருடைய கவிதைகளில், அசுரர்களின் யுத்தத்தின் பாதிப்பும் காரணங்களும் தூக்கலாகவே உள்ளன. ஆனால் அதுவல்ல அவருடைய உள்மனத் தேடலின் படைப்புக்கள் என்றே நினைக்கின்றேன். அவருடைய உண்மை ஒளியிலிருந்து எழுதியவை வெளிவந்தால் அவர் வேறு ஒளியில் கணிக்கப்படுவார். மு.த.வின் மரண செய்தி அறிந்து அந்த நிகழ்வுக்கு அவர் வந்திருந்தார். (1973) அப்போது அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'தளையசிங்கம், மரணத்திற்கு மிக அருகாமையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நன்றாகவே உணர்ந்தவர்' என்று எங்கோ ஆழத்திலிருந்து தனக்குத் தானே சொல்வது போல மெதுவாகச் சொன்னார். அவர் எக்காலமுமே அணிந்திருந்த ஆழமான கண்ணாடி அவருள் ஆழ்ந்து போயிருந்த அகத்தைக் காட்டும் பளிங்கு போல காலை வெளிச்சத்தில் மின்னியது. பசுமையான உயர்ந்த மலைகளால் சூழப்பெற்ற இரத்தினபுரி நகரிலுள்ள பாடசாலையில் அவரிடம் படித்த காலம், சில நண்பர்களுடன் சத் சங்கத்தில் இணைந்து, ஞானத் தேடலில் அவருடன் ஒரே தடத்தில் நடந்த கடந்த காலம், தீவிரம் நிறைந்த இனிமையான நிகழ்வுகள், அவரை நினைத்தபோது, நினைவில் மீண்டும் மீண்டும் அலை மோதுகின்றன. நித்ய யோகத்தில் நின்ற என்ஆசிரியர் தா.இராமலிங்கம் கேவல ஞானத்தை –பூரண ஞானத்தை- தேடிச் சென்று கொண்டிருந்த சாதகர். அவருக்கு மரணம் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு வாய்த்தவர் அவர். என். கே. மகாலிங்கம், பழைய மாணவன், சென்லூக்கா கல்லூரி.



கூடத்துக் கவி விளக்கு 'கவிதை எழுத்தாளர் காலமானார்' என்ற 'வலம்புரி' பத்திரிகைச் செய்தித்தலைப்பு என்னிடத்தில் ஏற்படுத்திய உணர்ச்சிகள் பல. தா.இராமலிங்கம் கிளிநொச்சியில் காலமான செய்தி அதன் மூலமாகவே முதல் அறியக்கூடியதாக இருந்தது. இருவருமே பிறந்த இடம் கல்வயல் தான் அதனால் அவர் பற்றி என்னால் நிறையவே கூற முடியும். தலைசிறந்த ஆசிரியராகவும் அதிபராகவுமே பலரும் அவரை அறிவார்கள். அவர் ஓர் அற்புதமான – தனித்துவம் மிக்க கவிஞன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகில் அறிந்தவர் கூட மிகமிகச் சிலரே. 'அலை' என்ற ஏடு மட்டும் அதனைச் சரியாக அளந்து அடையாளம் கண்டு கொண்டது. அமைதியும் அடக்கமும் நிறைந்த பண்பாளர். புதுமெய்க் கவிதைகள், காணிக்கை ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் மூலம் தன்னை இனங்காண வைத்தார். தத்துவ ஆழத்தையும் சூழலையும், சூழல் பாதிப்பையும், கலை வடிவத்தையும் மிகமிருதுவாக இழைத்து நிழலாடும் அர்த்த மிகு அழகோடு சுயமான மொழி உருவில் பிறப்பெடுக்க வைக்கும் ஆற்றல் அவரிடத்தே காணப்பட்ட தனிச்சிறப்பு. சமூகவியல் சிந்தனையும், தமிழ்தேசிய விடுதலைச் சிந்தனையும் அவர் எண்ணக் கருக்களாக விளங்கிய அதே வேளை அவை கவித்துவ வீச்சு மிக்கனவாகவும் விளங்கின. “குடத்து விளக்கு” என்று அவரைச் சொல்வதை விட “கூடத்துக் கவி விளக்கு” என்றால் மிகையன்று. விமர்சகர்களால் அவர் பற்றிய மதிப்பீடு சரியாக முன்வைக்கப் படவில்லை. அவரது படைப்புக்கள் அனைத்தும் ஒரு முழுமையான தொகுப்பாக்கப்பட வேண்டும். அவர் பிரிவால் கலங்கும் குடும்பத்தார்க்குக் கூறக்கூடிய ஆறுதலும் அசல் உண்மையும் இது தான். அவரது எழுத்துக்கள் அவரை நிச்சயம் வாழவைக்கும். வே. குமாரசாமி. பெரிய அரசடி, கல்வயல், சாவகச்சேரி,



பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில் யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய இன்றைய அதிபரின் விதப்புரை முன்னாள் அதிபர் திருவாளர் தா.இராமலிங்கம் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மீசாலையூர் மக்களுக்கு மட்டுமல்ல தென்மராட்சி மக்களுக்கே பயன்பெறும் கல்விமானாக விளங்கினார். 1968ம் ஆண்டு வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் நான் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம், எனது குருவாக கணித பாட ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். இளமைத்துடிப்பும்,கற்பித்தலில் உள்ள ஆற்றலும், அக்கறையும், திறமையும் எல்லோர்மனத்தையும் தொட்டுக் கொண்டது. தனியார் கல்வி நிலையங்கள் அற்ற அந்தக்காலத்தில் ஊர்ப்பிள்ளைகளை மட்டுமன்றி என்னையும் தனது வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்து, எல்லோரையும் சித்திபெறவைத்து இன்பம் கண்ட பெருமகனார். கலைப்பட்டதாரியாகிய இவர் தமிழறிவு, சமயறிவு நிரம்பப் பெற்றவராக விளங்கி உயர்தர வகுப்புக்களில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து உயர் சித்திகளையும் பெறவைத்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் நல்லறிவு பெற்றவர்களாகவும், உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும், மேன்நிலை யடைந்தவர் களாகவும் விளங்குகின்றனர். அந்தவரிசையில் நானும் ஒருவனாவேன். இவரது நற்பணிக்குச் சான்றாக அவரதுபிள்ளைகள் டாக்டர்களாக, பொறியியலாளராக, கலைத்துறை விற்பன்னராக, கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களாக விளங்குவதுடன் தகுதியான பங்காளர்களையும் கொண்ட நல்லதொரு குடும்பமாக விளங்குகின்றார்கள். இவர் யா/வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் 14 ஆண்டுகள் ஆசிரியராக, உப அதிபராக அரிய பணியாற்றியமையால் தொடர்ந்து 11 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றும் பாக்கியத்தைப் பெற்று ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் இப் பாடசாலையில் சிறந்த கல்விப் பணியை ஆற்றியுள்ளார். இவர் அதிபராக கடமையாற்றிய காலத்திலும், பல இராணுவ நடவடிக்கையால் பாடசாலை பாதிக்கப்பட்ட போதிலும், இவரது அயராத முயற்சியால் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு மேன்மைப் படுத்திய பெருமை என்றும் இவருக்குண்டு. இவரது காலத்தில் பாடசாலையானது கல்விப் பெறுபேற்றில் உயர்ந்து இருந்ததுடன் ஏனைய எல்லா இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலையின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். எந்த வேளையிலும் பாடசாலை உயர்ச்சியையே சிந்தனையாகக் கொண்டு செயற்பட்டமையை நாம் நன்கு அறிவோம். இவரது கடமையுணர்வால் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி கல்வி அதிகாரிகளிடையேயும் ஏனைய சக அதிபர்களிடையேயும், கல்விமான்களிடையேயும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தார். நேரம் தவறாமை, லீவு பெற்றுக் கொள்ளாமை, சட்ட திட்டங்கள் தவறாது ஒழுங்கு முறையாக நடந்து கொள்ளல் போன்றவற்றால் சிறந்த ஓர் நிர்வாகியாக, உணர்வாளராக, சிந்தனையாளராக, மகத்தான பணிசெய்த ஒருவராக விளங்கியதுடன் ஓர் ஆத்மீகவாதியாகவும், சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும் (நவீன கவிதை) விளங்கி இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது ஆத்மா அமைதியடைய இறைவனை இறைஞ்சுகின்றேன். திரு.கு.சிவானந்தம், முதல்வர். யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம். (இவரது வழி நின்ற மாணவன்)



மறக்க முடியாத நினைவுகள் திரு. தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அமரத்துவ செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன். பிறப்புண்டேல் இறப்புமுண்டு என்ற உண்மையை யாவரும் அறிந்திருந்தாலும் எம்முடன் நீண்ட நாட்கள் அன்பாகப் பேசிப்பழகிய ஓர் உறவு எம்மை விட்டும், இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றதும் எம்மைத் துன்பம் சூழ்ந்து வாட்டுவதும் இயல்பே! அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்கள் பற்றிய நினைவுகள் என் எண்ணத்திலே அலைமோத, அவர்பற்றி அறிந்த சில குறிப்புகளை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 1967ம் ஆண்டு நான் இரத்தினபுரியில் பர்குசன் மகளிர் உயர்தர பாடசாலையில் உதவி ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில், அதன் அருகே இருந்த பிரபல்யமான ஒரு கல்லூரியில் திரு. தா. இராமலிங்கம் அவர்களும் உதவி ஆசிரியராகக் கடமைபுரிந்து வந்ததை அறிவேன். பின்னர் 1978ம் ஆண்டு தைமாதம் யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகிச் சென்றபோது, அங்கு ஆசிரியர் குழுவில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பாடசாலையில் உதவி ஆசிரியையாகவும், பின் அமரர் அவர்கள் அதிபராகச் சேவையாற்றிய காலத்தில் உப அதிபராகவும் கடமையாற்றியமையால் ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகள் அவருடன் பழகியதைக் கொண்டு, அவர் பற்றி நேரிலேயே அறிந்துகொண்ட விடயங்களைக் குறிப்பிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. தென்மராட்சியிலேயே ஒரு பிரபல்யமான பாடசாலையாக வளர்ச்சி பெற்ற இப் பாடசாலைக்கு ஓர் இருள் சூழ்ந்த காலம்ஏற்பட்டது. 1978ல் இப்பாடசாலைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஓர் அதிபருக்கெதிராக, ஓர் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. அங்கிருந்த ஆசிரியர் குழுவில் சிலரே தாம் பின்னணியில் நின்று, மாணவர்களைக் கருவியாகக் கொண்டு பாடசாலைப் புறக்கணிப்பை செயற்படுத்தினர். மாணவர் வருகை குறைந்தது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் திடீர் என வீழ்ச்சி ஏற்பட்டது. ஆசிரியர் ஓய்வறையில் தங்கியிருக்கும் வேளைகளில், இவ்விடயம் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இதுபற்றித் திருவாளர் இராமலிங்கம் அவர்களின் கொள்கை பற்றி அறிய முடியவில்லை. அவர் அங்கு அமைதியாகவே இருப்பார். அப்பொழுது அவர் ஓர் உதவி ஆசிரியர். உயர்தர வகுப்புகளில் தமிழ், இந்து நாகரிகம், சைவசமயம், கணிதம் ஆகிய பாடங்களே கற்பிப்பார். தனது ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் வாசித்துக்கொண்டே இருப்பார். காலச்சக்கரத்தின் வேகம் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஓடிமறைந்தன. திரு இராமலிங்கம் அவர்கள் உதவி அதிபராக நியமிக்கப்பட்டு, பின் அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டார் என்று கூறுவதைவிட மீண்டும் இப்பாடசாலையைக்கட்டி எழுப்பி, அதன் வளர்ச்சியைக் கவனிக்கும் பொறுப்பும் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டது என்றே கூறவேண்டும். வெளியிலிருந்து பலர் இவ்வதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர். ஆனால் திரு. இராமலிங்கம் அவர்கள் மௌனமாகவே, ஒதுங்கியிருந்தார். ஆனால் பெற்றார் ஆசிரிய சங்கமும், கிராமமக்களும் எடுத்துக்கொண்டமுயற்சியினால், இவர் இப்பதவியை ஏற்றுக்கொண்டார். "அன்று இப்பாடசாலையின் தரம் வீழ்ச்சியடைவதை என் கண்களாலே பார்த்துக்கொண்டிருந்தேனே! இன்று இதன்வளர்ச்சிக்குரிய பொறுப்பை என் தலையில் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே!" என்று அவர் கூறிய வார்த்தைகளை மறக்கமுடியவிலை. ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் அவர் அதிபராக இருந்து எடுத்துக்கொண்ட முயற்சியின் பயன், நாளடைவில் பாடசாலையின் உயர்ச்சியை நாம் காணக் கூடியதாக இருந்தது. அவருடைய தளரா முயற்சி பற்றிய சிந்தனைகளே, மேற்கூறிய கசப்பான நிகழ்வுகளையும் நினைவு கூரவைத்தது. அமரர் இராமலிங்கம் அவர்கள் மிக எளிமையான தோற்றமுடையவர். பாடசாலைக்கும் உத்தியோக பூர்வ வைபவங்களுக்கும், அவர் அணிவது கறுப்புநிறக் கால்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையுமே (Black Pants & White Shirts). மற்றும் ஏனைய வைபவங்களுக்குத் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளை மேற்சட்டையுமே அணிவார். இதுவே அவரின் எளிமையானதோற்றத்தைத் தெரிவித்து நின்றது. அவர் அமைதி, நேர்மை, அன்பு, செயற்திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பனவற்றையே அணிகலன்களாகக் கொண்டிருந்தார். எனவே தான் நிர்வாகத்தில் திறமை கொண்டவராகவிளங்கினார். தன்னுடன் சேவை புரிந்த உதவி ஆசிரியர்களின் கல்வித் தராதரத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் திறன்களுக்கும் மதிப்பளித்து, அவர்களுக்கேற்ற பொறுப்பைக் கொடுத்து, நிர்வாகத்திற்குரிய பணிகளை புரிய வைத்தார். அதன் பயன் பாடசாலையும் வளர்ச்சிப் பாதையில் சென்றது. தனக்கும் ஆசிரியர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்த்துக் கொள்ளும் திறன் கொண்டவர். மாணவர்களுடன் கண்டிப்புடன், ஆனால் அன்புடன் பழகி அவர்களை வழி நடாத்தியவர். "சமய வாழ்விலிருந்து ஒதுங்கி இருந்தமையால் எனது வாழ்வில் ஆறு வருடங்களை வீணடித்துவிட்டேன்." என்று அவர் கூறிக் கவலைப்பட்டதை அறிவேன். ஆனால் பின்னர் அவர் ஆன்மீகம் பற்றி விளக்கம் தரும் சிறந்த சமய அறிஞராக விளங்கினார். தத்துவ மேதை டாக்டர் இராதா கிருஷ்ணனின் தத்துவக் கருத்துகளை அடிக்கடி கூறுவார். அமரர் இராமலிங்கம் அவர்கள் சிறந்த சிந்தனையாளர். தமிழ்மொழிப்பற்றாளர். சிறந்த சொற்பொழிவாளர். அடுக்குமொழி பேசி அல்லல் படுத்தமாட்டார். சிறந்த ஆழ்ந்த கருத்துக்களை மெதுவாகவே அள்ளித் தந்து கேட்போர் மனதில் பதியவைப்பார். நாடகம், கவிதை கட்டுரைகள் என ஆக்கங்கள் பல அவரின் முயற்சியில் வெளி வந்தவையே. பாடசாலையில் இடம்பெற்ற விழாக்களில் மேடை ஏறிய நாடகங்களின் நெறியாள்கையில் மிகக் கூடிய கவனம் செலுத்துவார். கலை நிகழ்ச்சிகளை பல முறை ஒத்திகை பார்த்தபின்பே மேடை ஏற அனுமதிப்பார். பரிசளிப்பு விழாவில் பரிசுகள் பெறும் மாணவர்கள் ஒழுங்காக மேடை ஏறி பரிசில்கள் வாங்குவதிலும், பின் இறங்கித் தம் இருக்கைக்கு சென்று அமர்வதிலும் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று கண்டிப்பாக இருப்பார். விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நிறைவேறியதும், ஆசிரியர் கூட்டத்தில் தனக்கு ஒத்துழைப்புத் தந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறுவார். நேரக் கட்டுப்பாட்டில் மிகக் கண்டிப்பானவர். எந்த வைபவமானாலும், பிரதம விருந்தினர் வருகை தருவதற்குப் பிந்தினாலும் இவர் வைபவத்தை தொடங்கி வைத்து நடாத்தும் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் குடும்பப் பின்னணியில் சில துன்பங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கேற்ப சில சலுகைகளை வழங்கி அனுசரித்து நடந்த ஒரு சிறந்த அதிபர். அவர் தம் குடும்பத்தில் முற்கோபக்காரர் என்று கணிக்கப்பட்டார். அங்கும் ஒரு தேவையுடனேயே செயற்பட்டார் என்றே கூற வேண்டும். தனது பிள்ளைகளை நல்ல பாதையில் நெறிப்படுத்தியமையால், பிள்ளைகளைக் கல்வியில் பட்டங்கள் பெற வைத்தார். சமுதாயத்திற்கு நற் பிரசைகளைக் கொடுத்த நல்லதொரு தந்தை என்ற பெயரையும் பெற்றுக்கொண்டார். அவர் ஒரு தேசப்பற்றாளர். தன்னை விளம்பரப்படுத்தாமலே அமைதியாகத் தன் கருத்துக்களை கவிதைகளாக வெளியிட்டவர். அந்த வகையிலேயே 1985இல் வெளியான 'மரணத்துள் வாழ்வோம்" என்ற கவிதைத் தொகுதியில் அவர் எழுதிய கவிதைகள் மூலம் அவர் ஈழத்தின் நவீன கவிதை படைக்கும் கவிஞர்களில் ஒருவராக, இன்று போற்றப்படுகின்றார். அதோ யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் அதன் காரியாலத்தின் முன்பு இருக்கும் முற்றத்தில் அடர்ந்த கிளைகளையுடைய ஒரு பலாமரம். அதன் அருகே ஒரு தேக்கமரம், இவற்றின் நிழலின் கீழ் ஒரு மெலிந்த தோற்றம் தெரிகிறதே! கறுப்பு வெள்ளை ஆடை, முகத்தில் கண்ணாடி, முன்னே கைகள் மடித்து கட்டியபடியே, புன்சிரிப்புடன் நிற்கின்றாரே அவர் யார்? ஆம் அதுவே அதிபர் அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்கள். அதிபர் அவர்கள் பாடசாலை நாட்களில் தினமும் காலையில் அம்முற்றத்தில் புன்சிரிப்புடன் நிற்கும் காட்சி, அத்தோற்றம் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. மறக்க முடியவில்லை. அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!! திருமதி சுந்தரா சிவபாதசுந்தரம். ஓய்வுபெற்ற உபஅதிபர், வீரசிங்கம் மகாவித்தியாலயம்.



நினைவில் நீடு வாழ்வார் அமரர் தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் “குரு” எனும் பதத்தின் இலக்கணத்துக்கு உதாரணமாக வாழ்ந்த உத்தமர் ஆவார். அறிவும் ஆற்றலும் ஆழ்ந்த புலமையும், அறிவினைத் தொடர்ந்து தேடும் நாட்டமும் கொண்ட பெருந்தகையாக விளங்கினார். நூலொன்று அவர் கரங்களை அலங்கரிக்காத பொழுதினை நாம் கண்டதில்லை. ஆறுதலாக நடந்து அமைதியாகச் செயற்பட்டு, காலத்தைக் கருத்திற் கொண்டு, நோக்கக் கட்டுப்பாட்டிற்கமைய கடமையாற்றிய கர்மவீரன். அவசரம் ஆரவாரம் என்ற சொற்கள் அவரது அகராதியில் இல்லை. இவர் ஒரு வகுப்பில் கற்பிக்கும் வேளை அயல் வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லாதபோதும் வழக்கமான குழப்பநிலையின்றி எல்லா வகுப்புக்களும் அமைதியாக இருப்பது கண்டு நாம் ஆச்சரியப்பட்டதுண்டு. அவர் குரலை உயர்த்திப்பேசுவதோ அன்றிக் கடிந்து கொள்வதோ இல்லையாயினும், மாணாக்கர் அனைவரும் பயபக்தியடன் நடந்து கொண்டனர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தின் இன்றைய உயர்நிலைக்கு அடித்தளமிட்ட சிற்பிகளில் அமரர் இராமலிங்கம் அவர்கள் முன்னிடம் வகிக்கின்றார். கடமையே கண்னெனும் கொள்கைப் பிடிப்புடன், சமத்துவ அணுகுமுறையை அனுசரித்து செயற்பட்டு வந்தமையினால் நன்றி மிக்கதொரு நல்ல மாணவர் பரம்பரையை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் உருவாக்கினார். அதிபருக்குரிய தமது கடமைக் கூறுகளைத் தீர்க்கமாகச் சிந்தித்து செவ்வனே திட்டமிட்டு, பதற்றமின்றிப், பணியாற்றிய பாங்கு பாராட்டுக்குரியது. பல்வேறு காரணங்களை முன்னிட்டு அதிபர்கள் கடமை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் போக்கு நிலவுகின்ற போதும், இவர் அத்தகைய நடவடிக்கையை அறவே தவிர்த்து வந்தார். வளங்களைத் தேடி அவர் கல்வித் திணைக்களத்துக்கு அவர் சென்றதில்லை. கிடைக்கும் வளங்களை கிடைக்கும் போது ஏற்றுக் கொள்வோம். உள்ள வளங்களின் உச்ச பயன்பாட்டினை ஊக்குவித்து மாணவ சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைப்போம் எனும் கொள்கையைக கடைப்பிடித்து வந்தார். பல்லாண்டு காலமாக மீசாலைப் பிரதேசத்தின் கல்விச் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து நல்லாசிரியராகவும் சிறந்த அதிபராகவும், பல்லோரும் போற்ற வாழ்ந்த அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்தாலும் தென்மராட்சி மக்களின் மனதில் நீடு வாழ்வார் என்பது உறுதி. அவரது பிரிவால் துயருறும் உற்றாருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அமரரின் ஆத்ம சாந்திக்காய் எனது பிரார்த்தனைகள். திருமதி. புஸ்பவதி கணேசலிங்கம். முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்,



இன்புற்று வாழ்க இறைவனிடம் ஈழத்திருநாட்டின் பசுமை நிறைந்த தென்மராட்சியில் தீந்தமிழும் சைவமும் இசையும் தழைத்தோங்கும் கல்வயல் ஊரில் பிறந்தவர் திரு.இராமலிங்கம் ஆசிரியர். நான் அறிந்தளவில் 1948ம் ஆண்டு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் என்னுடன் 6ம் வகுப்பில் படித்தவர். பின்பு அவர் விஞ்ஞான பீடத்திலும் நான் கலைப்பீடத்திலும் கல்வியைத் தொடர்ந்தோம். பின்பு வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமை ஆற்றும் பொழுதுதான் இவருடன் பழகநேர்ந்தது. இவர் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் உயர்தர மாணவருக்கு இந்து நாகரீகம், தமிழ், கணிதம், முதலிய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின்பு உப அதிபராகவும், பின் அதிபராகவும் இனிதே கடமையாற்றினார். பாடசாலையின் வளர்ச்சிக்காவும், நாட்டின் நலனுக்காகவும் அரும் பாடுபட்டவர். பாடசாலையில் நடக்கும் என்ன விழாவாக இருந்தாலும் ஆசிரியர்களை ஒன்றுகூட்டி ஆலோசனை செய்து மிகவும் சிறப்பாக நடாத்தும் திறமை கொண்டவர். பாடசாலை களுக்கிடையில் போட்டிகள் நடந்தால் பாட்டுக்கள், நாடகங்களுக்கு கவிதைகள் எல்லாம் மிக அழகாக எழுதி உடனே தரும் ஆற்றல் கொண்டவர். ஓய்வு பெற்ற பின்பும் ஓயாது தமிழையும், சைவத்தையும் ஆய்ந்தவோர் ஒப்பற்ற சிந்தனையாளன். தமிழையும் சைவத்தையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றைக் கடைப்பிடித்து, வீரசிங்கம் மகாவித்தியாலயத்தை வளர்த்த பெரியார்களின் வரிசையில் இவரும் ஒருவராவர். இவர் அமைதியான சுபாவம் உள்ளவர். அன்பின் உறைவிடமாய் பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் இருப்பிடமாய் குடும்ப அகல்விளக்காய் தரணி போற்றும் தந்தையாய் தரணி போற்றும் ஆசிரியனாய் தரணி போற்றும் நல்அதிபராய் தரணி போற்றும் சமூக சேவையாளனாய் திகழ்ந்த ஓர் நல்ல மனிதரை இழந்து தவிக்கும் மனைவிக்கும் அன்புப் பிள்ளைகளுக்கும் உற்றார், உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சாவு என்பதுதான் நிஜமான வாழ்வு. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி திருமதி ஆச்சிப்பிள்ளை குமாரசுவாமி ஓய்வு பெற்ற இசையாசிரியர், வீரசிங்கம் மகாவித்தியாலயம், மீசாலை



இயற்கையின் நியதி. நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக, அதிபராக திரு இராமலிங்கம் அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவருடைய ஒரே ஒரு முகம் என் கண்களுக்கு இன்றும் தெரிகிறது. உன் நண்பனாவதற்கு உன் எதிரிக்கு ஆயிரம் சந்தர்ப்பத்தைக் கொடு, ஆனால் உன் நண்பனுக்கு எதிரியாவதற்கு ஒரு சந்தர்ப்பமேனும் கொடுக்காதே. இதுவே அவரிடம் நான் பார்த்த முகம். நண்பனாக தோழமையுடன் பழகுவார். உறவினனாக பாசத்துடன் பழகுவார். ஆசிரியனாக ஆழுமையுடன் பழகுவார். அதிபராக ஆற்றல் மிக்கவராக மிக அன்பாகவும் எளிமையாகவும் ஆசிரியர்களுடனும் மாணவர்களிடம் பண்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்வார். திரு இராமலிங்கம் அவர்கள் கல்வயலில் பிறந்து வளர்ந்ததால் அந்த ஊருக்கே சிறப்பான சமயப்பற்றும் சைவசமயப் பழக்கவழக்கங்கழும் கொண்டவர். அதுவே இந்துவின் மாணவனானதும் சிறப்புற்று விளங்கிற்று. சென்னைப் பல்கலைக்கழகம் அவரைப் பகுத்தறிவாளன் ஆக்கிற்று. யார் எவர் என்று பார்க்காது எந்த உதவி கேட்டாலும் தயங்காது மறுக்காது மனமுவந்து செய்வார். கேட்டுவிட்டார்களே என்று யாரையும் தப்பான பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டார். தெளிவு படுத்தும் வல்லமை கொண்டவர். மனித நேயம் மிக்கவர், பண்பாளன், தமிழ் ஆர்வமும் ஆழமான தமிழ் சமய அறிவும் கொண்டவர், அறிவாளி, ஆற்றல்மிக்க பகுத்தறிவாளன். மாணவர்களுக்கு பெருமை மிக்க கணித ஆசிரியர். நண்பர்களுக்கு அறிவான ஆலோசகர். பிள்ளைகளுக்கு அன்பாக நெறிப்படுத்தும் தந்தை. மனைவிக்கு சிறப்பான கணவன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50) என்ற குறளுக்கமைய வாழ்ந்து காட்டி புகழ் பெற்று விட்டார் இராமலிங்கம் என்னும் பெரும்தகையோன். எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்து வாழ்ந்து காட்டியவர். இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம், குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, மனைவிக்கு ஆற்ற முடியாத துன்பம், எதுவும் எம் கையில் இல்லையே, இதுவே இயற்கையின் நியதி. நட்புமுறையாலும் உறவு முறையாலும் தொழில் துறையாலும் துன்பத்தில் பங்குகொள்ளும், திருமதி செல்லையா யோகரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியை



இராமலிங்க வள்ளலே புதுமெய்க் கவிதைகள் எழுதிய புலவனாய் பதமாய்ப் பாடம் சொல்நல் ஆசிரியனாய் பின்னாள் வீரசிங்கத்து நல்ல அதிபனாய் தன்னாலே பணி செய்தாய் யோகியாய், ஞானியாய். உமைத்தினம் வாழ்த்தும் உமது மாணவர்கள் தமையறியா பணி செய்யும் ஆசிரியர் அதிபர்கள் எத்தனை பேர் இன்றும் வீரசிங்கத்தில் சத்தியத்தை நீ விதைத்தே தத்துவமாய் ஒளிர்ந்தாய். அதிபர் லாச்சியில் ஆயிரமாய் குவிந்திருக்கும் அவையெல்லாம் வசதிக் கட்டணங்கள் அல்லவா? தொடமாட்டாய் ஐந்துரூபா ஆசிரியர் சந்தாவப்போ அதனையும் மதியத்தில் வீட்டிருந்து தருவாயே. அடக்கமாக எத்தனையோ விழாக்கள் முன்னெடுத்தாய் அவை சிறக்க அறிவுடைப் பெரியோர் பலர்வந்தே அருந்துவார் சிற்றுண்டி மூக்கைத் துளைத்தெடுக்கும் ஆனாலும் நீ யாவுமே தவிர்ப்பாய் உப்பு உறைப்பு எண்ணெய் இல்லா உண்டி உளமறிந்து செய்தால் அதனை ஏற்பாய். அறுபதாம் வயதில் பரிசளிப்பு இறுதி விழா அரங்கத்தை நாம் வர்ணம் தீட்டவா? ஆசிரியர் நாம் சேர்ந்து கேட்டோம் உம்மிடம் ஆசிரியர் பண நிலை எனக்குத்தான் தெரியும் ஐந்து சதமும் செலவழிக்க விடமாட்டேன் அடம்பிடித்தே வெற்றி பெற்றாய் நீ பெரியன்! அந்த மாதிரி விழாவின் நிகழ்ச்சிகள் அருமையாய் அமைந்தன கலை நிகழ்வுகள் அடுத்தநாள் நீ சொன்ன வார்த்தைகள் பெருமனதாய் எடுத்திடக் குறைவிலா இன்பமாய் நிறையுதடா. அன்பனாய், அதிபனாய், அறிஞனாய், அண்ணனாய், அத்தனையும் என் சித்தத்துள் நிறைந்ததடா ஏழு பிறப்புக்கள் மனிதருக்கு உரியதாம் ஏழாவதுக்குள் இணைந்திட வேண்டுமாம் இதுதான் இரகசியம் இதுதான் உண்மையும் அதனால் இங்கு மீதம் இன்றியே அத்தனை அல்லலும் அனுபவித்தே தீர்த்தாய். பணிசெய பிள்ளைகள் மருத்துவர் பலரிருந்தும் பக்கம் துணைவி சுற்றம் உறவிருந்தும் பாரடா பூமியில் ஏதுதான் நிலையோடா கோடிட்டாய் குடும்பம் சுடர்விட வேண்டுமென்று. பாடம் சொல்லியா படுக்கையில் இருந்தனை? பாரதப் போரினில் வீஷ்மரைப் போலவே நேரே உம்மை அரனும் அணைத்ததால் நிம்மதி கொண்டீர் இராமலிங்க வள்ளலே! திருமதி தெ.கிருஷ்ணசாமி. இசை ஆசிரியை, யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம். 16



2008 செப்ரெம்பர் 26 ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு. சி.ரமேஷ் தமருகம் வலைப்பதிவில் 2008 செப்ரெம்பர் 26ல் வெளியான கவிஞரின் கவிதைகள் பற்றிய ஆய்வு ஈழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார். 1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிற் பட்டதாரியானார். 1964 இல் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் இவரெழுதிய 38 கவிதைகளைத் தாங்கி “புதுமெய்க்கவிதைகள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1965 இல் “காணிக்கை” என்னும் தொகுப்பு இவரெழுதிய 31 கவிதைகளுடன் வெளிவந்தது இதனைத்தவிர “மரணத்துள் வாழ்வோம் , பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்போன்ற தொகுப்புக்களுக்கூடாகவும் அலை, புதுசு, சுவர் போன்ற சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் நன்கறியப்பட்டன. தா.இராமலிங்கத்தின் பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாண சமூகத்தின் இயல்புநிலை மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. கட்டியதாலிக்காக வறுமைக்குள் தன்னைக் கருக்கும் மனைவி (தூக்கட்டும் தூக்கட்டும்), வயலில் எவரின் உதவியின்றி வியர்வைகக்க தனித்து உழும் உழவன் (நான், விளைநிலம்) போலி ஆசாரங்களுக்குள் கட்டுண்டு செத்தை மறைவுக்குள் செல்லாக்காசாகும் வேளாளத்திமிர (ஆசைக்குவெட்கமில்லை), சமூகக்கட்டுமானத்துக்குள் சிக்குண்டு பார்வையால் பாலியல் வன்புணர்வு செய்யும் வாலிபன் (காமம், கிழியட்டும் முக்காடு) என விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் ஒரு சமூகத்தின் யதார்த்த வாழ்வை இயல்பு நிலை பிறழாது மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கிறது. ஆழமான வார்த்தை பிரமாணங்களுக்கூடாக கட்டுறும் “ஆசைக்கு சாதியில்லை” என்னும் கவிதை மேல்தட்டு வர்க்கத்தின் போலிமுகங்களையும் ஆசார அனுட்டானங்களையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறது. “வேளாளர் குடிப்பிபிறந்து பிறர் ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும்” என்னும் மிகச்சூட்சுமான வீரியவரிக்கட்டுமானம் பிறரில் குற்றம் காணும் மேற்சாதி ஆசார அனுபூதியைக் கட்டவிழ்த்துக்காட்டுகிறது. ஆசையால் தன்பிழையைச் சரிக்கட்டும் போலி நியாயம் “மருந்து நல்லதென்றால் கள் அருந்துவதில் என்ன குற்றம் என்னும் வரிக்கூடாக மிகத்துல்லியமாக வெளிப்படுகிறது ஈற்றில் எவ்வித நியாயமும் சொல்லமுடியாத அப்பட்டமான வாழ்வின் நிலையை தா.இராமலிங்கம் “இன்பம் நுகர்ந்தேன் என ஆசாரமுட்டையிலும், ஆசாரமுட்டையிலும் கறுப்பு மயிர் கண்டேன்” என்னும் வரிகளுக்கூடாக வெகு இயல்பாக வெளிப்படுகிறார். வாழ்தலே கடனெனஅஞ்சி வாழ்ந்து மடியும் நடுத்தரவர்க்கத்தின் இயல்புநிலை “குஞ்சு திரளாதோ” கவிதையில் மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கப்படுகிறது. “சட்டி நிறை கஞ்சி நக்கி உணல் முடிய நாயேன் கழிக்கின்ற காலம் மிகப்பெரிது முந்நூறை நோக்குகிறேன் மூன்றில் ஒன்றைப் பாய்ந்திடனோ? கூழ்முட்டையாகிப் பாழ்பட்டுப் போகாமல் குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ?” பிரதேசத்துக்குரிய கருப்பொருட்களுக்கூடாக நிலைபெறும் இக்கவிதை வழக்காற்று மொழிப் பிரயோகங்களுக் கூடாகவே தன்னைக்கட்டமைக்கிறது. தன்னுடல் பசிநீக்க வலியற்று தினமும் தன்னை சித்திரவதைப்படுத்தும் கணவனைக் கொன்ற மனைவியை சமூகநீதிக்கு முன்னால் நிறுத்தி அவள் செய்த ஆசாரப் புரட்சி சரிதான் எனக்கூறி அதனை நியாயப்படுத்தும் (தூக்கட்டும் தூக்கட்டும்) கவிதை கலாசார மரபுக்குள் பெண்படும் அவஸ்தையை கண்முன் நிறுத்துகிறது. வேலி தாண்டிய பெண்ணின் சுயம் சார்ந்த உரிமைக்குரல் இக்கவிதையெங்கும் ஈரமாய் கசிகிறது. சமூகக்கலாசாரத்தால் மறைக்கப்பட்ட பெண்ணின் மனஉணர்வுகளை முதன்முதலில் அப்பட்டமாக வெளிப்படுத்திய கவிதை இது எனலாம். சாதரண மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழிச் சொற்களை கவிதையின் தேவையறிந்து பயன்படுத்தியவர் தா.இராமலிங்கம் ஆவார். தேவையற்ற அடைமொழிகளுக்காகவோ, ஓசைச்சிறப்புக்காகவோ இப்பிரதேச வட்டாரச் சொற்கள் கையாளப்படாது கவிதையின் தெளிவு கருதி தா.இராமலிங்கத்தால் யாழ்ப்பாணப்பிரதேச வழக்காற்றுச் சொற்கள் கையாளப்படுகின்றன. “ ஒளி கூரக்கூர சூடேற ஏற நன்றுதிறனோடு குஞ்சு திரளுது” (குஞ்சு திரளாதோ) “பன்னாட்டு ஒடியற்பிட்டு செவ்வரிசிக் கஞ்சி உயிர்ச்சத்துப் பொருள் யாவும் உண்டிடுறேன் இன்றுதொட்டு” (கடைதீனி வேண்டாம்.) இவ்வாறு தா.இராமலிங்கத்தால் கவிதையில் பயன்படுத்தப்படும் பேச்சு மொழிச்சொற்கள் உணர்வின் வெளிப்பாடாக அமைவதுடன் கவிதையின் இயல்புத்தன்மை விகாரப்படாமல் இருப்பதற்கும் வழிகோருகிறது. குறியீடு, படிமம் என்னும் நுண்பொருள் உத்திக்கூடாக விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் பிரத்தியேக மொழி அமைவுக்குள் கட்டுருபவை இவரின் படிமங்கள் எளிமையானவை. அதேசமயம் குறுகிய எல்லைக்குட்பட்டவை கலக்கம் கவிதையில் இடம் பெறும் “செத்த பகலின் சடலம் எரிமூட்டி விட்டகன்றார் விண்வெளியில் சாம்பல் புதையுண்ட காற்றில் மினுங்கூது” என்னும் வரிகள் மாலைக்காட்சிக் கூடாக, மாறும் மன உணர்வின் பேதைமைகளை எடுத்துரைக்கின்றன. “தேடல், அனுபவம், செந்நா பொரிகிறது, பெருஞ் செல்வம், மனம் வருகுதோ, கழுவு தெரியும், அடைகிடக்கு” போன்ற கவிதைகள் செறிவடர்த்தி கொண்ட படிமங்களுக்கூடாக கட்டுருபவை நுண்ணிய மனவுணர்வுக் கூடாகவும், புறப்பொருட் காட்சிக் கூடாகவும் கட்டுறும் இப் படிமங்கள் நுண்ணிய தளத்துக்கு மொழியை மாற்றிச் செல்கிறது. பொது நிலைக் கவிஞராகவும் அதே சமயம் சார்பு நிலைக் கவிஞராகவும் இனம் காணப்படும் தா. இராமலிங்கம் குறியீட்டு உத்தியை தேவையறிந்து பயன்படுத்துவதில் வல்லாளர் இவரின் கவிதைகள் பெரும்பாலும் பொது நிலைக் குறியீட்டு உத்திக் கூடாகவே தன்னை நிலைப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக அகிலத்துவ குறியீட்டை உள்வாங்கியே இவரின் கவிதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வை காட்சிப்படுத்தும் “பிரயாணம்” என்னும் கவிதை மு.தளையசிங்கம் கூறுவதைப் போல் ‘புகைவண்டி’ என்னும் குறியீட்டுக் கூடாகவே முழுச்சமூகக் கட்டமைப்பையும் காட்சிப்படுத்துகிறது. இதனைப் போன்று அகிலத்துவக் குறியீட்டு உத்தியை உள்வாங்கி “புகை, பாரச்சுமை, விளக்குமாறு என்ன செய்யும், சிறுவரம்பு, நுகர்ச்சி” முதலான கவிதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கவிதைகளில் தா.இராமலிங்கம் பயன்படுத்தும் நுண்பொருள் உத்திகள் பரந்த அளவில் மீள்வாசிப்புக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய தொன்றாகும். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், முருகையன் போன்ற இலக்கிய ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்ட தா.இராமலிங்கத்தின் கவிதைகள் “இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்”, “ஈழத்து நவீன கவிதை” போன்ற நூல்களில் குறிப்பளவிலேயே எடுத்துரைக்கப்படுகின்றன. இக் கவிதைகளை நவீன இலக்கிய ஆய்வாளர்கள் முழுமையான ஆய்வுக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய காலத்தின் அவசியமாகும். அவரின் கவிதைகளை தமிழுலகு நிறைந்த கண்கொண்டு விரிந்ததளத்தில் இலக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை ஈழத்து நவீன கவிதை எந்நாளும் முழுமைத்துவத்தை அடையாது. 17



வாழ்க்கைச் சுவடுகள் பெயர்: ....................தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் தோற்றம்:................. 16.08.1933 பிறந்த இடம்:............ கல்வயல் வடக்கு, சாவகச்சேரி தந்தைபெயர்:............. தாமோதரம்பிள்ளை தாய் பெயர்:............... சின்னப்பிள்ளை ஆரம்ப, இடைநிலைக்கல்வி:..... யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பல்கலைக்கழகக்கல்வி:............கல்கத்தா சிற்றி கொலிஜ் பட்ட மேற்படிப்பு(B.A.-Hons) .......சென்னை பச்சையப்பன் கல்லூரி திருமணம்:.............. 1959ம் ஆண்டு புகுந்த இடம்:.......... மீசாலை வடக்கு, கொடிகாமம் மனைவி பெயர்: ...... மகேஸ்வரி கல்விப்பணி: இரத்தினபுரி புனித சென்லூக்கா கல்லூரி ......ஆசிரியர்.............................1959முதல் 1968 வரை யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் ......ஆசிரியர், உபஅதிபர் .......... 1968 முதல் 1982 வரை ......அதிபர் .............................. 1982முதல் 1993 வரை கல்விச் சேவையில் இருந்து இளைப்பாறல்-1993 இலக்கியப்பணி இவருடைய "புதுமெய்க் கவிதைகள்" (1964), "காணிக்கை" (1965) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தவிரவும் 1984இல் வெளியான "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" , 1985இல் வெளியான "மரணத்துள் வாழ்வோம்" கவிதைத்தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி இருக்கின்றன 18



நீ ங் கா த நி னை வு க ள்



! கனடாவில் வெளியிடப்பட்ட நினைவுமலரின் முதல் மூன்று பக்கங்களின் தோற்றம். 19



Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்