பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய இன்றைய அதிபரின் விதப்புரை

முன்னாள் அதிபர் திருவாளர் தா.இராமலிங்கம் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மீசாலையூர் மக்களுக்கு மட்டுமல்ல தென்மராட்சி மக்களுக்கே பயன்பெறும் கல்விமானாக விளங்கினார்.

1968ம் ஆண்டு வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் நான் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம், எனது குருவாக கணித பாட ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். இளமைத்துடிப்பும்,கற்பித்தலில் உள்ள ஆற்றலும், அக்கறையும், திறமையும் எல்லோர்மனத்தையும் தொட்டுக் கொண்டது. தனியார் கல்வி நிலையங்கள் அற்ற அந்தக்காலத்தில் ஊர்ப்பிள்ளைகளை மட்டுமன்றி என்னையும் தனது வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்து, எல்லோரையும் சித்திபெறவைத்து இன்பம் கண்ட பெருமகனார்.

கலைப்பட்டதாரியாகிய இவர் தமிழறிவு, சமயறிவு நிரம்பப் பெற்றவராக விளங்கி உயர்தர வகுப்புக்களில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து உயர் சித்திகளையும் பெறவைத்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் நல்லறிவு பெற்றவர்களாகவும், உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும், மேன்நிலை யடைந்தவர் களாகவும் விளங்குகின்றனர். அந்தவரிசையில் நானும் ஒருவனாவேன். இவரது நற்பணிக்குச் சான்றாக அவரதுபிள்ளைகள் டாக்டர்களாக, பொறியியலாளராக, கலைத்துறை விற்பன்னராக, கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களாக விளங்குவதுடன் தகுதியான பங்காளர்களையும் கொண்ட நல்லதொரு குடும்பமாக விளங்குகின்றார்கள்.

இவர் யா/வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் 14 ஆண்டுகள் ஆசிரியராக, உப அதிபராக அரிய பணியாற்றியமையால் தொடர்ந்து 11 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றும் பாக்கியத்தைப் பெற்று ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் இப் பாடசாலையில் சிறந்த கல்விப் பணியை ஆற்றியுள்ளார். இவர் அதிபராக கடமையாற்றிய காலத்திலும், பல இராணுவ நடவடிக்கையால் பாடசாலை பாதிக்கப்பட்ட போதிலும், இவரது அயராத முயற்சியால் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு மேன்மைப் படுத்திய பெருமை என்றும் இவருக்குண்டு.

இவரது காலத்தில் பாடசாலையானது கல்விப் பெறுபேற்றில் உயர்ந்து இருந்ததுடன் ஏனைய எல்லா இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலையின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். எந்த வேளையிலும் பாடசாலை உயர்ச்சியையே சிந்தனையாகக் கொண்டு செயற்பட்டமையை நாம் நன்கு அறிவோம்.

இவரது கடமையுணர்வால் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி கல்வி அதிகாரிகளிடையேயும் ஏனைய சக அதிபர்களிடையேயும், கல்விமான்களிடையேயும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தார். நேரம் தவறாமை, லீவு பெற்றுக் கொள்ளாமை, சட்ட திட்டங்கள் தவறாது ஒழுங்கு முறையாக நடந்து கொள்ளல் போன்றவற்றால் சிறந்த ஓர் நிர்வாகியாக, உணர்வாளராக, சிந்தனையாளராக, மகத்தான பணிசெய்த ஒருவராக விளங்கியதுடன் ஓர் ஆத்மீகவாதியாகவும், சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும் (நவீன கவிதை) விளங்கி இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவரது ஆத்மா அமைதியடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்.

திரு.கு.சிவானந்தம்,

முதல்வர். யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்.

(இவரது வழி நின்ற மாணவன்)

மறக்க முடியாத நினைவுகள்

திரு. தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அமரத்துவ செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன். பிறப்புண்டேல் இறப்புமுண்டு என்ற உண்மையை யாவரும் அறிந்திருந்தாலும் எம்முடன் நீண்ட நாட்கள் அன்பாகப் பேசிப்பழகிய ஓர் உறவு எம்மை விட்டும், இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றதும் எம்மைத் துன்பம் சூழ்ந்து வாட்டுவதும் இயல்பே!

அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்கள் பற்றிய நினைவுகள் என் எண்ணத்திலே அலைமோத, அவர்பற்றி அறிந்த சில குறிப்புகளை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 1967ம் ஆண்டு நான் இரத்தினபுரியில் பர்குசன் மகளிர் உயர்தர பாடசாலையில் உதவி ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில், அதன் அருகே இருந்த பிரபல்யமான ஒரு கல்லூரியில் திரு. தா. இராமலிங்கம் அவர்களும் உதவி ஆசிரியராகக் கடமைபுரிந்து வந்ததை அறிவேன். பின்னர் 1978ம் ஆண்டு தைமாதம் யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகிச் சென்றபோது, அங்கு ஆசிரியர் குழுவில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பாடசாலையில் உதவி ஆசிரியையாகவும், பின் அமரர் அவர்கள் அதிபராகச் சேவையாற்றிய காலத்தில் உப அதிபராகவும் கடமையாற்றியமையால் ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகள் அவருடன் பழகியதைக் கொண்டு, அவர் பற்றி நேரிலேயே அறிந்துகொண்ட விடயங்களைக் குறிப்பிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தென்மராட்சியிலேயே ஒரு பிரபல்யமான பாடசாலையாக வளர்ச்சி பெற்ற இப் பாடசாலைக்கு ஓர் இருள் சூழ்ந்த காலம்ஏற்பட்டது. 1978ல் இப்பாடசாலைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஓர் அதிபருக்கெதிராக, ஓர் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. அங்கிருந்த ஆசிரியர் குழுவில் சிலரே தாம் பின்னணியில் நின்று, மாணவர்களைக் கருவியாகக் கொண்டு பாடசாலைப் புறக்கணிப்பை செயற்படுத்தினர். மாணவர் வருகை குறைந்தது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் திடீர் என வீழ்ச்சி ஏற்பட்டது. ஆசிரியர் ஓய்வறையில் தங்கியிருக்கும் வேளைகளில், இவ்விடயம் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இதுபற்றித் திருவாளர் இராமலிங்கம் அவர்களின் கொள்கை பற்றி அறிய முடியவில்லை. அவர் அங்கு அமைதியாகவே இருப்பார். அப்பொழுது அவர் ஓர் உதவி ஆசிரியர். உயர்தர வகுப்புகளில் தமிழ், இந்து நாகரிகம், சைவசமயம், கணிதம் ஆகிய பாடங்களே கற்பிப்பார். தனது ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் வாசித்துக்கொண்டே இருப்பார். காலச்சக்கரத்தின் வேகம் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஓடிமறைந்தன. திரு இராமலிங்கம் அவர்கள் உதவி அதிபராக நியமிக்கப்பட்டு, பின் அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டார் என்று கூறுவதைவிட மீண்டும் இப்பாடசாலையைக்கட்டி எழுப்பி, அதன் வளர்ச்சியைக் கவனிக்கும் பொறுப்பும் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டது என்றே கூறவேண்டும். வெளியிலிருந்து பலர் இவ்வதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர். ஆனால் திரு. இராமலிங்கம் அவர்கள் மௌனமாகவே, ஒதுங்கியிருந்தார். ஆனால் பெற்றார் ஆசிரிய சங்கமும், கிராமமக்களும் எடுத்துக்கொண்டமுயற்சியினால், இவர் இப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

"அன்று இப்பாடசாலையின் தரம் வீழ்ச்சியடைவதை என் கண்களாலே பார்த்துக்கொண்டிருந்தேனே! இன்று இதன்வளர்ச்சிக்குரிய பொறுப்பை என் தலையில் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே!" என்று அவர் கூறிய வார்த்தைகளை மறக்கமுடியவிலை. ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் அவர் அதிபராக இருந்து எடுத்துக்கொண்ட முயற்சியின் பயன், நாளடைவில் பாடசாலையின் உயர்ச்சியை நாம் காணக் கூடியதாக இருந்தது. அவருடைய தளரா முயற்சி பற்றிய சிந்தனைகளே, மேற்கூறிய கசப்பான நிகழ்வுகளையும் நினைவு கூரவைத்தது.

அமரர் இராமலிங்கம் அவர்கள் மிக எளிமையான தோற்றமுடையவர். பாடசாலைக்கும் உத்தியோக பூர்வ வைபவங்களுக்கும், அவர் அணிவது கறுப்புநிறக் கால்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையுமே (Black Pants & White Shirts). மற்றும் ஏனைய வைபவங்களுக்குத் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளை மேற்சட்டையுமே அணிவார். இதுவே அவரின் எளிமையானதோற்றத்தைத் தெரிவித்து நின்றது.

அவர் அமைதி, நேர்மை, அன்பு, செயற்திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பனவற்றையே அணிகலன்களாகக் கொண்டிருந்தார். எனவே தான் நிர்வாகத்தில் திறமை கொண்டவராகவிளங்கினார். தன்னுடன் சேவை புரிந்த உதவி ஆசிரியர்களின் கல்வித் தராதரத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் திறன்களுக்கும் மதிப்பளித்து, அவர்களுக்கேற்ற பொறுப்பைக் கொடுத்து, நிர்வாகத்திற்குரிய பணிகளை புரிய வைத்தார். அதன் பயன் பாடசாலையும் வளர்ச்சிப் பாதையில் சென்றது. தனக்கும் ஆசிரியர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்த்துக் கொள்ளும் திறன் கொண்டவர். மாணவர்களுடன் கண்டிப்புடன், ஆனால் அன்புடன் பழகி அவர்களை வழி நடாத்தியவர்.

"சமய வாழ்விலிருந்து ஒதுங்கி இருந்தமையால் எனது வாழ்வில் ஆறு வருடங்களை வீணடித்துவிட்டேன்." என்று அவர் கூறிக் கவலைப்பட்டதை அறிவேன். ஆனால் பின்னர் அவர் ஆன்மீகம் பற்றி விளக்கம் தரும் சிறந்த சமய அறிஞராக விளங்கினார். தத்துவ மேதை டாக்டர் இராதா கிருஷ்ணனின் தத்துவக் கருத்துகளை அடிக்கடி கூறுவார். அமரர் இராமலிங்கம் அவர்கள் சிறந்த சிந்தனையாளர். தமிழ்மொழிப்பற்றாளர். சிறந்த சொற்பொழிவாளர். அடுக்குமொழி பேசி அல்லல் படுத்தமாட்டார். சிறந்த ஆழ்ந்த கருத்துக்களை மெதுவாகவே அள்ளித் தந்து கேட்போர் மனதில் பதியவைப்பார். நாடகம், கவிதை கட்டுரைகள் என ஆக்கங்கள் பல அவரின் முயற்சியில் வெளி வந்தவையே. பாடசாலையில் இடம்பெற்ற விழாக்களில் மேடை ஏறிய நாடகங்களின் நெறியாள்கையில் மிகக் கூடிய கவனம் செலுத்துவார். கலை நிகழ்ச்சிகளை பல முறை ஒத்திகை பார்த்தபின்பே மேடை ஏற அனுமதிப்பார். பரிசளிப்பு விழாவில் பரிசுகள் பெறும் மாணவர்கள் ஒழுங்காக மேடை ஏறி பரிசில்கள் வாங்குவதிலும், பின் இறங்கித் தம் இருக்கைக்கு சென்று அமர்வதிலும் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று கண்டிப்பாக இருப்பார். விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நிறைவேறியதும், ஆசிரியர் கூட்டத்தில் தனக்கு ஒத்துழைப்புத் தந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறுவார்.

நேரக் கட்டுப்பாட்டில் மிகக் கண்டிப்பானவர். எந்த வைபவமானாலும், பிரதம விருந்தினர் வருகை தருவதற்குப் பிந்தினாலும் இவர் வைபவத்தை தொடங்கி வைத்து நடாத்தும் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் குடும்பப் பின்னணியில் சில துன்பங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கேற்ப சில சலுகைகளை வழங்கி அனுசரித்து நடந்த ஒரு சிறந்த அதிபர்.

அவர் தம் குடும்பத்தில் முற்கோபக்காரர் என்று கணிக்கப்பட்டார். அங்கும் ஒரு தேவையுடனேயே செயற்பட்டார் என்றே கூற வேண்டும். தனது பிள்ளைகளை நல்ல பாதையில் நெறிப்படுத்தியமையால், பிள்ளைகளைக் கல்வியில் பட்டங்கள் பெற வைத்தார். சமுதாயத்திற்கு நற் பிரசைகளைக் கொடுத்த நல்லதொரு தந்தை என்ற பெயரையும் பெற்றுக்கொண்டார்.

அவர் ஒரு தேசப்பற்றாளர். தன்னை விளம்பரப்படுத்தாமலே அமைதியாகத் தன் கருத்துக்களை கவிதைகளாக வெளியிட்டவர். அந்த வகையிலேயே 1985இல் வெளியான 'மரணத்துள் வாழ்வோம்" என்ற கவிதைத் தொகுதியில் அவர் எழுதிய கவிதைகள் மூலம் அவர் ஈழத்தின் நவீன கவிதை படைக்கும் கவிஞர்களில் ஒருவராக, இன்று போற்றப்படுகின்றார்.

அதோ யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் அதன் காரியாலத்தின் முன்பு இருக்கும் முற்றத்தில் அடர்ந்த கிளைகளையுடைய ஒரு பலாமரம். அதன் அருகே ஒரு தேக்கமரம், இவற்றின் நிழலின் கீழ் ஒரு மெலிந்த தோற்றம் தெரிகிறதே! கறுப்பு வெள்ளை ஆடை, முகத்தில் கண்ணாடி, முன்னே கைகள் மடித்து கட்டியபடியே, புன்சிரிப்புடன் நிற்கின்றாரே அவர் யார்? ஆம் அதுவே அதிபர் அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்கள்.

அதிபர் அவர்கள் பாடசாலை நாட்களில் தினமும் காலையில் அம்முற்றத்தில் புன்சிரிப்புடன் நிற்கும் காட்சி, அத்தோற்றம் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. மறக்க முடியவில்லை. அமரர் திரு. தா. இராமலிங்கம் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

திருமதி சுந்தரா சிவபாதசுந்தரம்.
ஓய்வுபெற்ற உபஅதிபர்,
வீரசிங்கம் மகாவித்தியாலயம். Click the image to zoom

நினைவில் நீடு வாழ்வார்

அமரர் தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் “குரு” எனும் பதத்தின் இலக்கணத்துக்கு உதாரணமாக வாழ்ந்த உத்தமர் ஆவார். அறிவும் ஆற்றலும் ஆழ்ந்த புலமையும், அறிவினைத் தொடர்ந்து தேடும் நாட்டமும் கொண்ட பெருந்தகையாக விளங்கினார். நூலொன்று அவர் கரங்களை அலங்கரிக்காத பொழுதினை நாம் கண்டதில்லை. ஆறுதலாக நடந்து அமைதியாகச் செயற்பட்டு, காலத்தைக் கருத்திற் கொண்டு, நோக்கக் கட்டுப்பாட்டிற்கமைய கடமையாற்றிய கர்மவீரன். அவசரம் ஆரவாரம் என்ற சொற்கள் அவரது அகராதியில் இல்லை. இவர் ஒரு வகுப்பில் கற்பிக்கும் வேளை அயல் வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லாதபோதும் வழக்கமான குழப்பநிலையின்றி எல்லா வகுப்புக்களும் அமைதியாக இருப்பது கண்டு நாம் ஆச்சரியப்பட்டதுண்டு. அவர் குரலை உயர்த்திப்பேசுவதோ அன்றிக் கடிந்து கொள்வதோ இல்லையாயினும், மாணாக்கர் அனைவரும் பயபக்தியடன் நடந்து கொண்டனர்.

வீரசிங்கம் மகா வித்தியாலயத்தின் இன்றைய உயர்நிலைக்கு அடித்தளமிட்ட சிற்பிகளில் அமரர் இராமலிங்கம் அவர்கள் முன்னிடம் வகிக்கின்றார். கடமையே கண்னெனும் கொள்கைப் பிடிப்புடன், சமத்துவ அணுகுமுறையை அனுசரித்து செயற்பட்டு வந்தமையினால் நன்றி மிக்கதொரு நல்ல மாணவர் பரம்பரையை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் உருவாக்கினார்.

அதிபருக்குரிய தமது கடமைக் கூறுகளைத் தீர்க்கமாகச் சிந்தித்து செவ்வனே திட்டமிட்டு, பதற்றமின்றிப், பணியாற்றிய பாங்கு பாராட்டுக்குரியது. பல்வேறு காரணங்களை முன்னிட்டு அதிபர்கள் கடமை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் போக்கு நிலவுகின்ற போதும், இவர் அத்தகைய நடவடிக்கையை அறவே தவிர்த்து வந்தார். வளங்களைத் தேடி அவர் கல்வித் திணைக்களத்துக்கு அவர் சென்றதில்லை. கிடைக்கும் வளங்களை கிடைக்கும் போது ஏற்றுக் கொள்வோம். உள்ள வளங்களின் உச்ச பயன்பாட்டினை ஊக்குவித்து மாணவ சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைப்போம் எனும் கொள்கையைக கடைப்பிடித்து வந்தார்.

பல்லாண்டு காலமாக மீசாலைப் பிரதேசத்தின் கல்விச் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து நல்லாசிரியராகவும் சிறந்த அதிபராகவும், பல்லோரும் போற்ற வாழ்ந்த அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்தாலும் தென்மராட்சி மக்களின் மனதில் நீடு வாழ்வார் என்பது உறுதி.

அவரது பிரிவால் துயருறும் உற்றாருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அமரரின் ஆத்ம சாந்திக்காய் எனது பிரார்த்தனைகள்.

திருமதி. புஸ்பவதி கணேசலிங்கம்.
முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்,

இன்புற்று வாழ்க இறைவனிடம்

ஈழத்திருநாட்டின் பசுமை நிறைந்த தென்மராட்சியில் தீந்தமிழும் சைவமும் இசையும் தழைத்தோங்கும் கல்வயல் ஊரில் பிறந்தவர் திரு.இராமலிங்கம் ஆசிரியர். நான் அறிந்தளவில் 1948ம் ஆண்டு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் என்னுடன் 6ம் வகுப்பில் படித்தவர். பின்பு அவர் விஞ்ஞான பீடத்திலும் நான் கலைப்பீடத்திலும் கல்வியைத் தொடர்ந்தோம். பின்பு வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமை ஆற்றும் பொழுதுதான் இவருடன் பழகநேர்ந்தது.

இவர் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் உயர்தர மாணவருக்கு இந்து நாகரீகம், தமிழ், கணிதம், முதலிய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின்பு உப அதிபராகவும், பின் அதிபராகவும் இனிதே கடமையாற்றினார். பாடசாலையின் வளர்ச்சிக்காவும், நாட்டின் நலனுக்காகவும் அரும் பாடுபட்டவர். பாடசாலையில் நடக்கும் என்ன விழாவாக இருந்தாலும் ஆசிரியர்களை ஒன்றுகூட்டி ஆலோசனை செய்து மிகவும் சிறப்பாக நடாத்தும் திறமை கொண்டவர். பாடசாலை களுக்கிடையில் போட்டிகள் நடந்தால் பாட்டுக்கள், நாடகங்களுக்கு கவிதைகள் எல்லாம் மிக அழகாக எழுதி உடனே தரும் ஆற்றல் கொண்டவர்.

ஓய்வு பெற்ற பின்பும் ஓயாது தமிழையும், சைவத்தையும் ஆய்ந்தவோர் ஒப்பற்ற சிந்தனையாளன். தமிழையும் சைவத்தையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றைக் கடைப்பிடித்து, வீரசிங்கம் மகாவித்தியாலயத்தை வளர்த்த பெரியார்களின் வரிசையில் இவரும் ஒருவராவர். இவர் அமைதியான சுபாவம் உள்ளவர்.

அன்பின் உறைவிடமாய்
பண்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
குடும்ப அகல்விளக்காய்
தரணி போற்றும் தந்தையாய்
தரணி போற்றும் ஆசிரியனாய்
தரணி போற்றும் நல்அதிபராய்
தரணி போற்றும் சமூக சேவையாளனாய்
திகழ்ந்த ஓர் நல்ல மனிதரை இழந்து தவிக்கும் மனைவிக்கும் அன்புப் பிள்ளைகளுக்கும் உற்றார், உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாவு என்பதுதான் நிஜமான வாழ்வு.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

திருமதி ஆச்சிப்பிள்ளை குமாரசுவாமி
ஓய்வு பெற்ற இசையாசிரியர்,
வீரசிங்கம் மகாவித்தியாலயம்,
மீசாலை

இயற்கையின் நியதி.

நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக, அதிபராக திரு இராமலிங்கம் அவர்களைப் பார்த்திருக்கிறேன்.

அவருடைய ஒரே ஒரு முகம் என் கண்களுக்கு இன்றும் தெரிகிறது.

உன் நண்பனாவதற்கு உன் எதிரிக்கு ஆயிரம் சந்தர்ப்பத்தைக் கொடு, ஆனால் உன் நண்பனுக்கு எதிரியாவதற்கு ஒரு சந்தர்ப்பமேனும் கொடுக்காதே. இதுவே அவரிடம் நான் பார்த்த முகம்.

நண்பனாக தோழமையுடன் பழகுவார்.

உறவினனாக பாசத்துடன் பழகுவார்.

ஆசிரியனாக ஆழுமையுடன் பழகுவார்.

அதிபராக ஆற்றல் மிக்கவராக மிக அன்பாகவும் எளிமையாகவும் ஆசிரியர்களுடனும் மாணவர்களிடம் பண்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்வார்.

திரு இராமலிங்கம் அவர்கள் கல்வயலில் பிறந்து வளர்ந்ததால் அந்த ஊருக்கே சிறப்பான சமயப்பற்றும் சைவசமயப் பழக்கவழக்கங்கழும் கொண்டவர். அதுவே இந்துவின் மாணவனானதும் சிறப்புற்று விளங்கிற்று. சென்னைப் பல்கலைக்கழகம் அவரைப் பகுத்தறிவாளன் ஆக்கிற்று.

யார் எவர் என்று பார்க்காது எந்த உதவி கேட்டாலும் தயங்காது மறுக்காது மனமுவந்து செய்வார். கேட்டுவிட்டார்களே என்று யாரையும் தப்பான பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டார். தெளிவு படுத்தும் வல்லமை கொண்டவர்.

மனித நேயம் மிக்கவர், பண்பாளன், தமிழ் ஆர்வமும் ஆழமான தமிழ் சமய அறிவும் கொண்டவர், அறிவாளி, ஆற்றல்மிக்க பகுத்தறிவாளன்.

மாணவர்களுக்கு பெருமை மிக்க கணித ஆசிரியர்.

நண்பர்களுக்கு அறிவான ஆலோசகர்.

பிள்ளைகளுக்கு அன்பாக நெறிப்படுத்தும் தந்தை.

மனைவிக்கு சிறப்பான கணவன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

என்ற குறளுக்கமைய வாழ்ந்து காட்டி புகழ் பெற்று விட்டார் இராமலிங்கம் என்னும் பெரும்தகையோன்.

எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்து வாழ்ந்து காட்டியவர். இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம், குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, மனைவிக்கு ஆற்ற முடியாத துன்பம், எதுவும் எம் கையில் இல்லையே, இதுவே இயற்கையின் நியதி.

நட்புமுறையாலும் உறவு முறையாலும் தொழில் துறையாலும் துன்பத்தில் பங்குகொள்ளும்,

திருமதி செல்லையா யோகரத்தினம்.
ஓய்வு பெற்ற ஆசிரியை

இராமலிங்க வள்ளலே

புதுமெய்க் கவிதைகள் எழுதிய புலவனாய்
பதமாய்ப் பாடம் சொல்நல் ஆசிரியனாய்
பின்னாள் வீரசிங்கத்து நல்ல அதிபனாய்
தன்னாலே பணி செய்தாய் யோகியாய், ஞானியாய்.

உமைத்தினம் வாழ்த்தும் உமது மாணவர்கள்
தமையறியா பணி செய்யும் ஆசிரியர் அதிபர்கள்
எத்தனை பேர் இன்றும் வீரசிங்கத்தில்
சத்தியத்தை நீ விதைத்தே தத்துவமாய் ஒளிர்ந்தாய்.

அதிபர் லாச்சியில் ஆயிரமாய் குவிந்திருக்கும்
அவையெல்லாம் வசதிக் கட்டணங்கள் அல்லவா?
தொடமாட்டாய் ஐந்துரூபா ஆசிரியர் சந்தாவப்போ
அதனையும் மதியத்தில் வீட்டிருந்து தருவாயே.

அடக்கமாக எத்தனையோ விழாக்கள் முன்னெடுத்தாய்
அவை சிறக்க அறிவுடைப் பெரியோர் பலர்வந்தே
அருந்துவார் சிற்றுண்டி மூக்கைத் துளைத்தெடுக்கும்
ஆனாலும் நீ யாவுமே தவிர்ப்பாய்
உப்பு உறைப்பு எண்ணெய் இல்லா உண்டி
உளமறிந்து செய்தால் அதனை ஏற்பாய்.

அறுபதாம் வயதில் பரிசளிப்பு இறுதி விழா
அரங்கத்தை நாம் வர்ணம் தீட்டவா?
ஆசிரியர் நாம் சேர்ந்து கேட்டோம் உம்மிடம்
ஆசிரியர் பண நிலை எனக்குத்தான் தெரியும்
ஐந்து சதமும் செலவழிக்க விடமாட்டேன்
அடம்பிடித்தே வெற்றி பெற்றாய் நீ பெரியன்!
அந்த மாதிரி விழாவின் நிகழ்ச்சிகள்
அருமையாய் அமைந்தன கலை நிகழ்வுகள்
அடுத்தநாள் நீ சொன்ன வார்த்தைகள் பெருமனதாய்
எடுத்திடக் குறைவிலா இன்பமாய் நிறையுதடா.

அன்பனாய், அதிபனாய், அறிஞனாய், அண்ணனாய்,
அத்தனையும் என் சித்தத்துள் நிறைந்ததடா
ஏழு பிறப்புக்கள் மனிதருக்கு உரியதாம்
ஏழாவதுக்குள் இணைந்திட வேண்டுமாம்
இதுதான் இரகசியம் இதுதான் உண்மையும்
அதனால் இங்கு மீதம் இன்றியே
அத்தனை அல்லலும் அனுபவித்தே தீர்த்தாய்.

பணிசெய பிள்ளைகள் மருத்துவர் பலரிருந்தும்
பக்கம் துணைவி சுற்றம் உறவிருந்தும்
பாரடா பூமியில் ஏதுதான் நிலையோடா
கோடிட்டாய் குடும்பம் சுடர்விட வேண்டுமென்று.

பாடம் சொல்லியா படுக்கையில் இருந்தனை?
பாரதப் போரினில் வீஷ்மரைப் போலவே
நேரே உம்மை அரனும் அணைத்ததால்
நிம்மதி கொண்டீர் இராமலிங்க வள்ளலே!

திருமதி தெ.கிருஷ்ணசாமி.
இசை ஆசிரியை,
யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்.

Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.