புகழ் பூத்த நண்ப

கல்வி அறிவுமிக்க சான்றோர்கள் வாழும் கல்வயல் மண்ணில் பிறந்த பெருமைக்குரியவர் நீங்கள். நல்லவரையும், நல்லனவற்றையும் நன்கு தெரிந்தவர். கடமையும் சேவையும் உங்களது இரு கண்கள். வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் புகழ்பூத்த அதிபர்களில் நீங்களும் ஒருவர். எமது சமயத்தில் ~சாதி என்ற அரக்கனைத் துரத்தி அடிக்கவேண்டும் என்று கூறுவீர்கள். சொல்லிலும், செயலிலும் வாழ்ந்து காடடியவர் நீங்கள். உங்கள் கல்விக் குடும்பம் உங்கள் பண்பிற்கும், சேவைக்கும் இறைவன் அளித்த பரிசில்.

உங்கள் நலனே தங்கள் நலன் என்ற சுயநலமில்லாத தாயின் அன்பை நான் நன்கு அறிவேன். 'பொன்னும் பொருளும் வேண்டாம். தான் விரும்பிய பெண்ணே மேல்" என்ற தாயாரும் சகோதரர்களும் போற்றுதற்குரியவர்கள். இவர்களின் மேலான அன்பே தங்கள் வாழ்வின் ஆணிவேராகப் பரந்து, அன்பு மனைவியைப் பெற்று, நல்லதோர் குடும்பத்தை உருவாக்கி, பெரும் கல்விவிருட்சமாக வளர்ந்து உலகில் ஓங்கி உயர வைத்ததெனலாம். இவை மட்டுமன்றி நல்லாசான்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், பெற்றமை மேலும் உங்கள் வளர்ச்சிக்கு உரமூட்டியதெனலாம்.

நண்பரே! எமது பட்டப்படிப்புக் காலம் பச்சைப்பசேலென, இன்று போல் மனதில் பதிந்துள்ளது. இருவரது 16, 18 வயதுப்பருவம் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. நாம் நண்பர்களாக இருந்த பொற்காலம். எமது பாதுகாவலர் போலவும், சகோதரர் போலவும்இருந்து எமக்கு உதவி செய்த திரு. ஆ. சின்னையா(நியாயதுரந்தரர்) அவர்கள் அப்போது செரம்பர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தார். அவர்தான் எங்களிற்கு கல்கத்தா'சிற்றிக்கொலிஜ்" இல் இடம் எடுத்து தந்துதவினார். 1952-1957 வரை எமது பட்டப்படிப்புக்காலம். ஓய்வு வேளையில் எமது தாய் தந்தையர், எமது சமயம், சமூகம் பற்றி சிந்தித்த காலம். உங்கள் பகுத்தறிவுக் கொள்கை வளர்ந்த காலம். கவிதை உங்களிற்குள் உதயமான காலம். எமது நட்பும் வளர்ந்த காலம். 1955 இல் நீங்கள் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு B.A.(Final) படிக்கசென்றீர்கள். நான் கல்கத்தாவில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். ஆனாலும் நம் நட்பு வளர்ந்தது. கல்லூரி விடுமுறை நாட்களில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். எனது சகோதரியை காதலித்து கரம்பிடித்தபின் நட்பு ஒருபடி உயர்ந்து, உறவை பலமாக்கிக் கொண்டதெனலாம்.

சுயநலமான, தனக்கு மிஞ்சிய ஆசைகளால் துரத்தப்பட்டு சறுக்கி விழுந்த பல குடும்பங்களை நாம் அறிவோம். சரியானதைப் பற்றிப் பிடித்து ஒங்கி வளர்ந்த பல குடும்பங்களையும் அறிவோம். எல்லாமிருந்தும் ஒன்றும் எஞ்சாமல் அழிந்த நாடுகளைப் பாருங்கள். தெய்வ அன்பை நன்கு புரிந்து கொள்ளாத மனிதர்களும், சமயங்களும் எப்படி அழிந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இன்றைய உலகம் சுயநலவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இறைவன்மேல் கொண்ட பக்தியும், சரியானவற்றை புரிந்து கொண்ட அறிவும், பகுத்தறிவும் உங்களை மேன்மையுறச் செய்தது என்றால் மிகையாகாது.

நீங்கள் தியான வாயிலாக ஞானத்தை தேடினீர்கள். இறுதியில் இறைவனே உங்களை யோகத்தில் பல நாட்களாக அமர்த்தி, உலக வாழ்வின் அநித்தியத்தை நன்கு புரிய வைத்து, இறுதியில் உங்களை நீங்காத் துயிலில் வைத்தார் போலும். வாழ்க உங்கள் நாமம். உங்கள் ஆத்மா இறைவனுடன் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

தங்கள் அன்பன்,
ம. அருணாசலம்,
இளைப்பாறிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி துணைஅதிபர்,
சிலாபம் சர்வதேசப் பாடசாலை அதிபர்.

மதிப்புடன் வாழ்ந்த பெரியார்

சமூகத்தை உயர்நிலைக்கு உருவாக்கும் கல்விக்கூடங்களை முகாமைத்துவம் செய்யும் அதிபர் பணியானது ஏனைய பணிகளிலும் பார்க்க மிகவும் சிறப்பானது. உரிய கல்வி இலக்கை நோக்கிப் பாடசாலைச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் அதிபர் எல்லோரினதும் பாராட்டுதலுக்கு உரியவராகின்றார். இந்த வகையில் யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக, உப அதிபராக 14 ஆண்டுகளும் அதிபராக 11 ஆண்டுகளும் பணியாற்றி அமரத்துவம் அடைந்த திரு. தா. இராமலிங்கம் அவர்களின் சேவையை மக்களும், கல்விச் சமூகமும் நன்கு அறியும்.

கல்வயலைப் பிறப்பிடமாகவும் மீசாலையை வதிப்பிடமாகவும் கொண்ட இவர் அதிபராகக் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தி அதிபர் பணியைச் சிறக்கச் செய்தவர்.

பல்வேறு கஷ்டங்கள், வசதியீனங்கள் என்பவற்றை எல்லாம் எதிர்கொண்டு, பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல காரணமாகத் திகழ்ந்தவர். இவருடைய காலத்தில் கல்வி கற்ற பலர் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உயர்வான பதவிகளை வகிக்கின்றனர்.

இவரின் காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றது. அமரர் திரு. தா. இராமலிங்கம் அதிபராக இருந்த காலத்தில் நான் பிரதி அதிபராகக் கடமையாற்றியுள்ளேன். பாடசாலை தொடங்கு முன் 7:30 மணிக்கே பாடசாலைக்கு வந்துவிடுவார். பாடசாலை விட்ட பின் மாலை வேளைகளிலும், விடுமுறைதினங்களிலும், பாடசாலைக்கு வந்து பணியாற்றி தன் நேரத்தை அர்ப்பணித்து, பாடசாலையின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர்.

போர்ச் சூழல் காரணமாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்த வேளைகளில் பாடசாலையை திறம்பட நிர்வகித்து பாடசாலையின் தரத்தைப் பேணிய பெருமைக்குரியவர்.

நிறைந்த இறைபக்தியும், சேவை மனப்பாங்கும் உள்ளவர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்”
என்பது வள்ளுவர் வாக்கு. இவருடைய நற்பணிகளால் இவரின் பிள்ளைகள், மருமக்கள், யாவரும் கல்வியில் உயர்ந்து பெரும் பதவிகளை வகிக்கின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அன்னாரின் மறைவினால் துயருற்றுக் கலங்கி நிற்கும் அன்னாரது குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை வேண்டிக்கொள்கின்றேன்.

திரு. வே. நாகராசா J.P.
ஓய்வு பெற்ற பிரதி அதிபர்,
யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் அமரரின் கவிதை வரிகள்

கல்விப்பணி புரிந்த ஏற்றமிகு நல்லாசான்

அமரர் தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் மரணச்செய்தியை அறிந்து, நாங்கள் பெரிதும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். அன்னாரின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு 1982ம் ஆண்டு முதல் எங்களுக்குக் கிடைத்தது, இத்தொடர்பு இன்றுவரை தொடர்வதை இட்டு நாங்கள் பெருமை அடைகின்றோம்.

அமரர் இராமலிங்கம் அவர்கள் சாவகச்சேரியில் உள்ள, கல்வயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தைச் சேர்ந்த பலர், கல்வித்துறையில் முன்னேறி, அளப்பரிய பணி புரிந்துள்ளார்கள்.

இவர் ஒரு நல்லாசிரியனாக, சிறந்த அதிபராக, கவிஞராக, எழுத்தாளராக, குடும்பத் தலைவனாக், தந்தையாக, ஆலோசகனாக விளங்கினார். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் பல வருடங்கள் அதிபராக இருந்து, பணி ஆற்றி, இவ் வித்தியாலயத்தின் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மத்தியில் ஒரு நல்லுறவைப் பேணி வளர்த்தவர். இவ்வித்தியாலயத்தில் இருந்து, பல மாணவர்கள் உயர்தர வகுப்பில் படித்துப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர்.

இவருக்கு கவிதை இயற்றும் ஆற்றல், இயல்பாகவே இருந்தது. தமிழ், சமயம், தமிழர் பண்பாடு முதலியவற்றில் ஊறித்திளைத்தவர். தனது மாணவர்களும், ஆசிரியர்களும், இப்பிரதேசமக்களும், இத்தமிழ் பாரம்பரியத்தினைப் பின்பற்றவேண்டும் என்று விரும்பியவர்.

பவணந்தி முனிவரால் கூறப்பட்ட நல்லாசிரியனுக்கு உரிய பண்புகள் எல்லாம் இவரிடம் காணப்பட்டது. இவரது நேர்மையையும், சிறந்த பண்புகளையும் உயர்ந்த நோக்கங்களையும் நம்மால் மறக்கமுடியாது.

இவர் மீசாலை வடக்கைச் சேர்ந்த, ஆறுமுகம் தம்பதிகளின் மகளை மணந்து, நடத்திய சிறந்த இல்லறவாழ்வின் எச்சங்களாக, அவருடைய பிள்ளைகள் விளங்குகின்றனர்.

'பெறுமவற்றுள் யாமறிவதில்லை
அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற"
என்ற வள்ளுவர் பெருமானின் குறளுக்கு இலக்கணமாக இவரது பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்குகின்றனர். இவரோடு உரையாடும்போது அவர் முதிர்ந்த அறிவு, ஞானம் நிறைந்தவர் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை வேதனையுடன் தெரிவித்து அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

புலவர்மணி,
பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம்,
கொழும்பு

என் தமிழ் ஆசான், கவிஞர் தா.இராமலிங்கம்

இப்பொழுது அடிக்கடி அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதும்படியாகி விட்ட காலமிது. மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. இருந்தும் எனக்குத் தெரிந்தவர்கள், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்கள்அதிகமானோர் இறந்து கொண்டிருப்பது இப்பொழுது அடிக்கடி நிகழுகின்றது போலும்.

மரணச் செய்திகள் என்னை நெருங்கி என் கதவைத் தட்டி அடிக்கடி காற்று வாக்கில் சொல்லிச் செல்கின்றன. மரணம் நித்யம் என்ற உண்மையிலிருந்தே ஆழ்ந்த தத்துவங்கள் எழுந்தன. அவற்றை எழுதுவதால் மரணத்தின் ஒரே பக்கத்தையே திரும்பத் திரும்ப எழுதுகின்றோம் என்ற உணர்வும் வந்து கொண்டிருக் கின்றது. அப்படி வந்து சேர்ந்த செய்திதான் ஆசிரியர் தா.இராமலிங்கத்தின் மரணச் செய்தியும். இறுதியாக, கிளிநொச்சியில் வாழ்ந்திருக்கிறார். அவரும் ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார். அது எல்லா ஈழத் தமிழருக்கும் ஏதோ ஒருவகையில் ஏற்பட்டிருக்கும் பொது விதி. மறதி நோய் என்றும் கேள்வி. பயங்கர நினைவுகளை மறக்க முதியோர்க்குக் வசதியாகக் கிடைத்த பாதுகாப்பு மன அரண் –defense mechanism–போலும் அது.

தா.இராமலிங்கம் கவிஞராக முகிழ்ப்பதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், முகிழ்த்த போதும் எனக்கு அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரத்தினபுரியில் புனித லூக்கா கல்லூரியில் அவர் கற்பித்துக் கொண்டிருந்த போது, அவரிடம் படித்துக் கொண்டிருந்த மாணவன் சுப்பிரமணியம் என்னை அவரிடம் கூட்டிச் சென்றார். அப்பொழுது தா.இராமலிங்கம் ஆசிரியர் திருமணமாகிய புதிது. இளைஞர். முப்பது வயது மட்டில் இருக்கும். இரத்தினபுரிக்கு அவர் கற்பிக்க வந்தும் கொஞ்சக் காலம் தான். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரி. கணிதவியல் கற்றவர். அதையே கல்லூரியில் கற்பித்துக் கொண்டும் இருந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, மேசையில் திருக்குறள் நூல், சுவரில் வள்ளுவர், பெரியார், அண்ணாத்துரை படங்கள். அவர் சைவஉணவுக்காரர், நாத்திகர் என்றும், திருமணம் கூட அப்படித்தான் நடந்தது என்றும், திராவிடக் கொள்கைகள் கொண்டவர் என்றும் அவரைப் பற்றி சுப்பிரமணியம் எனக்கு ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

மிகவும் அடக்கமான, அமைதியான, கூச்ச சுபாவம் கொண்ட, நளினமும் மென்மையும் கொண்டவர். எனக்குத் தெரிந்த, திராவிடக் கருத்துக்களால் கவரப்பட்ட மாணவர்கள் அதிகம் பேசுபவர்கள், தங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் உரத்துச் சொல்பவர்கள். வேகமும் தீவிரமும் கொண்டவர்கள். பாடசாலையில் தேவாரம் படிக்கும் போது, கும்பிடாமல் கைகட்டிக் கொண்டு நிற்பவர்கள். இவரோ மிகவும் அமைதியாக இருந்தார். பழந் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராகத் தெரிந்தார். தமிழில் எம்.ஏ. பட்டம் எடுப்பதற்கு படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருந்தார் சுப்ரமணியம். அது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது.

சில மாதங்களுக்குப் பிறகு அவர் கற்பித்த அதே பாடசாலையில் நானும் மேல் வகுப்பு மாணவனாகச் சேருவேன் என்பதோ அவர் எங்களுக்குத் தமிழ் கற்பிப்பார் என்பதோ அப்பொழுது எனக்குத் தெரியாது. அந்தப் பாடசாலையில் அதற்கு முன்னர் எச்.எஸ்.சி வகுப்பு இருக்கவில்லை. எங்கள் நாலு பேருக்காகத் தொடங்கப்பட்டதே அந்த வகுப்பு என்றும் கொள்ளலாம். நாங்கள் சித்தியடைந்து சென்றவுடன் அந்த வகுப்பும் மூடப்பட்டது சோகம். அதுவே, மலையகத்தில் இயல்பான நிகழ்வு. மலையகத்தில் அப்படிப் பட்ட நிகழ்வுகள் நடைபெற்றதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. காரணம், மேல் வகுப்புப் படிக்கும் மாணவர்களும் குறைவு. ஆசிரியர்களும் வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி அங்கு சேவை செய்ய வரும் பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாகாணங்களில் வேலை கிடைக்காதவர்கள். முதல் நியமனம் பெறுபவர்கள். வெளி மாகாணங்களில் சில ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற திணைக்களத்தின் நிர்ப்பந்தத்தினால் வந்தவர்கள். பின்னது, பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

தா.இராமலிங்கம் தமிழ் ஆசானாக எங்களுக்குக் கிடைத்தது எனது பாக்கியம் என்றே சொல்வேன். கற்பிப்போர் பலர் மேலும் மேலும் கற்பவர்கள் அல்ல. ஆனால், ஆசிரியர் இராமலிங்கம் மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கற்கும் இயல்புள்ளவர். வேகமாகக் கற்று பல்கலைக் கழகத்திற்குச் செல்ல எண்ணி, பல மணி நேரம் உழைத்த என் போன்ற மாணவர்களுக்கு சளைக்காமல் அவரும் கற்றார். கற்பிப்பதற்காக மட்டும் கற்காமல் அறிவுத்தாகம் கொண்டும் கற்றார், கற்பித்தார் என்றே சொல்ல வேண்டும். மாணவர்களுக்குக் கற்பிப்பதற்குத் தேவையான நூல்களை கொழும்பு சென்று வாங்கி வந்தார். அப்படி வாங்கி வந்த நூல்களால் எங்கள் வகுப்பு நிரம்பி, நூலகம் ஒன்றே ஏற்பட்டது. எல்லாம் புதுப் புத்தகங்கள். நாங்கள் அதுவரை பார்க்காத சங்க நூல்கள் பலவும் அங்கே கிடைத்தன. தொல்காப்பியம், நன்னூல், இலக்கணச் சுருக்கம் போன்றவை கிடைத்தன. இலக்கணத்தை அவற்றிலிருந்தே எங்களுக்குக் கசடறக் கற்பித்தார். திருக்குறள், நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாஞ்சாலி சபதம், இலக்கிய வரலாறு, சங்கப் பாடல்கள், புதுமைப்பித்தன் கதைகள் என்று பலவற்றை எங்களுடன் கூடவே கற்றார். ஆழமாகக் கற்பித்தார். கற்பித்தல் கூட, மாணவர்களுக்கு வழிகாட்டியாகவே. கலந்துரையாடல் முறை. மாணவர் மையம் கொண்ட முறை. ஆழமாக கற்றோம். இரண்டு வருடங்கள் செறிவான, ஆழமும் விரிவும் கொண்ட கற்றல். பல்கலைக் கழகத்தில் நான் கற்ற தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை ஏற்கெனவே இவரிடம் கற்ற அடிப்படையில் எழுப்பப்பட்டதே. இப்பொழுது நினைக்கும்போதும் அது பிரமிப்பாக இருக்கிறது.

அதற்கு முன் அவருடைய நவீன இலக்கிய அறிவு அண்ணாத்துரை, மு.வரதராசன் போன்றவர்களுடன் நின்றிருந்தது என்றே நினைக்கிறேன். எங்களுக்கு இலக்கிய வரலாறு கற்பிக்க வெளிக்கிட்டவுடன் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன்,ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் அவருடைய வாசிப்புப் பரப்பில் சேர்ந்து கொண்டார்கள். ஆனால், புதுக் கவிதைகள் அவருக்கு அறிமுகமாகவில்லை. அத்துடன் அக்காலத்தில் தான் புதுக் கவிதைகள் அறிமுகமாகி பெரும் அலையாக தமிழ் நாட்டில் வேரூன்றத் துவங்கியது. என்னுடன் நெருக்கமாகப் பழகிய கவிஞர் மு.பொன்னம்பலத்தினால் எனக்கு புதுக் கவிதை அறிமுகம் கிடைத்தது. மு.தளையசிங்கத்திற்கு 'எழுத்து' சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் மு.பொ. கவிதை எழுதியிருந்தார். அதை ஆசிரியர் இராமலிங்கத்திற்குக் கொண்டு வந்து காட்டினேன். அவற்றை வாசித்து புதுக் கவிதைகளில் ஆர்வம் கொண்டார். 'அக்கினிக்குஞ்சொன்றை பொந்திடை வைத்தது' போன்றதே அந்த நிகழ்வு. அதில் தீவிரமாக ஈடுபட்டார். ஒவ்வொரு நாளும் பல கவிதைகள் எழுதிக் கொண்டு வந்து எங்களுக்கு கரும்பலகையில் எழுதியும், வாசித்தும் காட்டினார். நாங்கள் பல்கலைக் கழகத் தேர்வு எழுதிய பின்னர் பல மாதங்கள் வகுப்பில் சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த காலம் அது என்று நினைக்கிறேன். ஒரு ஆறு மாதத்திற்குள் பல கவிதைகள் சேர்ந்திருக்க வேண்டும். (அக்காலத்தில் அப்படியான கவிதைகள் இலங்கைப் பத்திரிகையில் வெளிவராத காலம். எமதுகவிஞர்கள் மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள். திறனாய்வாளர்கள் புதுக் கவிதைளுக்கெதிராக விமர்சனம் வைத்துக்கொண்டிருந்தார்கள்.) அது 1964 என்று நினைக்கிறேன். அவற்றைக் கொழும்புக்கு கொண்டு போய் அவர் கிராமத்தைச் சேர்ந்தவரும் அவருக்குத் தெரிந்தவருமான கவிஞர் இ.முருகையனிடம் காட்டி, முன்னுரை வாங்கி அதை அவரே –தா.இராமலிங்கம்- தன் செலவில் வெளியிட்டார். அப்படித் தன் செலவில் வெளியிடுவதும் அப்படியொன்றும் அக்காலத்தில் -இக்காலத்திலும் -புதிய விசயமல்ல.

அதுவே 'புதுமெய்க் கவிதைகள்' என்ற தொகுப்பு. யாழ்ப்பாண வாழ்க்கையில் காணப்படும் போலிப் பண்பாடு, சாதியப் போலித்தனங்கள் ஆகியவற்றை, இதுவரை ஈழத்து இலக்கியங்களில் காணப் பெறாத யாழ்ப்பாணக் கிராமிய மொழியில், இலக்கண விதிகளைப் பின்பற்றாமல், வித்தியாசமான, புதிய புதுக் கவிதை நடையில் எழுதப்பெற்ற கவிதைகளை உள்ளடக்கியது அது. அதில் ஒன்று 'ஆசைக்குச் சாதியில்லை' என்ற கவிதை.

வேளாளர் குடிப்பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே
மயிர் பிடிக்கும்
மேற்சாதி நான்
என்றாலும்
மருந்துக்கு நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்? ...
இன்றுங் கூட, அப்படியான புதுக்கவிதைகள் தனித்துவமானவை. மரபார்ந்த செய்யுள் யாப்பை உடைத்த புதுக் கவிதைகள் தாம் அவை. ஆனால், புதுக் கவிதைகள் போல் புரியாத் தன்மையோ சூக்குமமானதோ, படிமங்கள் நிரம்பியதோ, ஓங்கி விழும் சொல் அடுக்குகளோ, பொய்யான சோடிப்புகளோ இல்லாத, மெய்யான உள்ளுறைகளுடன் இயல்பாகவே வெளிப்பட்டவை அவை. அவருடைய கவிதைகள் நகல் எடுக்க முடியாதவை. அதற்கு முயன்றால் போலியாகவே ஆகி விடும் ஆபத்து ஏற்படும். அதன் தனித்தன்மை அவை அவர் அகத்திலிருந்து வருபவை. போலியானவை அல்ல. அவருடைய அகம் அவருடையதே. அவர் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் சமூக ஏற்றத் தாழ்வுகளையே மையமாகக் கொண்டவை. யாழ்ப்பாணத்தவரின் போலிப் பண்பாடுகளையே சாடியவை.

அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'காணிக்கை' அடுத்த ஆண்டே வந்தது. அதற்கு மு.தளையசிங்கம் முன்னுரை அளித்தார். அக்காலத்தில் அவருக்கு மு.த., மு.பொ. ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களும் அக்காலத்தில் இரத்தினபுரியில் இருந்தவர்கள். அக்காலத்தில் தா.இராமலிங்கம் மிக மும்முரமாகத் தன் ஞானத்தேடலை ஆரம்பித்தும் விட்டார். மு.த.,மு.பொ, நான் என்று ஏழு பேர் ஞான குருவிடம் தீட்ஷைபெற்றோம். தியானம், சத் சங்கக் கூட்டம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இயங்கத் துவங்கினோம். அதில் தியானத்தில் மிக வேகமாகவும் ஆழமாகவும் நீண்ட பல மணித்தியாலங்கள் ஆழ்ந்தவர் இவரே. இயல்பாகவே தீவிரமான உழைப்பாளி. கல் பூமியையே தன் புய வலியாலும் அலவாங்காலும் உடைத்து கிணறு வெட்டி காய்ந்த, வரண்ட பூமியையே செழுமையாக்கி பயிர் உண்டாக்கி வாழ்ந்த யாழ்ப்பாணக் கமக்காரனின் உழைப்புப் போன்றதே அவருடைய ஞானத் தேடலும். கண் துஞ்சாத, கருமமே கண்ணானவர். பகுதி நேர ஞானத் தேடல் அவருடையது அல்ல. தியானத்தில் ஒடுங்கி ஆழ்ந்து இருந்து விடுவார். அவருக்குள் இருந்த தேடலை அவர் வெளிக்காட்டியது சில கவிதைகளாலும், அவர் எழுதிய சில குறிப்புக்களாலும் என்றே நினைக்கின்றேன். அக்குறிப்புக்களை அவர் தனக்காகவே எழுதி வைத்தார். அவற்றை அவர் வெளியிட்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

அவரை அதன் பிறகு ஒருமுறை சந்தித்தபோது, ரமணரின்'நான் யார்?' என்ற விசாரத்தில் ஆழ்ந்து போயிருந்தார். ரமணரைப் போலவே அவரும் தனியாக தன்னிலை உணர்ந்தவராக இருந்தார். அக்காலத்தில் அவர் ஆரம்ப ஞான குருவின் செயல்களில் ஏமாற்றமடைந்து தன்னுள் ஆழ்ந்து போய் இருந்தார்.

பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகிச் சென்று விட்டார். அவர் அக்காலத்தில் எழுதினாலும் கூட, வெளியிடுவதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. அவரிடம் தேடிச் சென்று சில கவிதைகளை வாங்கிப் பிரசுரித்தவர் 'அலை' ஆசிரியர் அ.யேசுராசா. அவருடைய சில கவிதைகள் அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் தொகுத்த 'பதினொருஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பிலும், 'மரணத்துள் வாழ்வோம்'தொகுப்பிலும் வெளிவந்தன. அவருடைய இன்னொரு கவிதைத் தொகுப்பை வெளிக் கொணர பத்பநாப ஐயர் சில முன்னெடுப்புக்கள் செய்ததாகவும், அது வெளிவரவில்லை என்றும் அறிகிறேன். பிற்காலத்தில் அவர் கவிதை எழுதியது அவரின் உள்ளார்ந்த உந்துதலாலேயே. அவை அவரின் தேடலின் வெளிப்பாடுகள் அல்ல. மற்றவர்களின் தேவைக்காகவோ பிரசுரத்திற்காகவோ அவர் எழுதியவர் அல்ல. அவருடைய மனநிலை பின்னர் இயல்பாகி விட்ட யோக நிலையில் அப்படி எழுத முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் பின்னர் வெளிவந்த அவருடைய கவிதைகளில், அசுரர்களின் யுத்தத்தின் பாதிப்பும் காரணங்களும் தூக்கலாகவே உள்ளன. ஆனால் அதுவல்ல அவருடைய உள்மனத் தேடலின் படைப்புக்கள் என்றே நினைக்கின்றேன். அவருடைய உண்மை ஒளியிலிருந்து எழுதியவை வெளிவந்தால் அவர் வேறு ஒளியில் கணிக்கப்படுவார்.

மு.த.வின் மரண செய்தி அறிந்து அந்த நிகழ்வுக்கு அவர் வந்திருந்தார். (1973) அப்போது அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'தளையசிங்கம், மரணத்திற்கு மிக அருகாமையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நன்றாகவே உணர்ந்தவர்' என்று எங்கோ ஆழத்திலிருந்து தனக்குத் தானே சொல்வது போல மெதுவாகச் சொன்னார். அவர் எக்காலமுமே அணிந்திருந்த ஆழமான கண்ணாடி அவருள் ஆழ்ந்து போயிருந்த அகத்தைக் காட்டும் பளிங்கு போல காலை வெளிச்சத்தில் மின்னியது.

பசுமையான உயர்ந்த மலைகளால் சூழப்பெற்ற இரத்தினபுரி நகரிலுள்ள பாடசாலையில் அவரிடம் படித்த காலம், சில நண்பர்களுடன் சத் சங்கத்தில் இணைந்து, ஞானத் தேடலில் அவருடன் ஒரே தடத்தில் நடந்த கடந்த காலம், தீவிரம் நிறைந்த இனிமையான நிகழ்வுகள், அவரை நினைத்தபோது, நினைவில் மீண்டும் மீண்டும் அலை மோதுகின்றன. நித்ய யோகத்தில் நின்ற என்ஆசிரியர் தா.இராமலிங்கம் கேவல ஞானத்தை –பூரண ஞானத்தை- தேடிச் சென்று கொண்டிருந்த சாதகர். அவருக்கு மரணம் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு வாய்த்தவர் அவர்.

என். கே. மகாலிங்கம்,
பழைய மாணவன்,
சென்லூக்கா கல்லூரி.

கூடத்துக் கவி விளக்கு

'கவிதை எழுத்தாளர் காலமானார்' என்ற 'வலம்புரி' பத்திரிகைச் செய்தித்தலைப்பு என்னிடத்தில் ஏற்படுத்திய உணர்ச்சிகள் பல. தா.இராமலிங்கம் கிளிநொச்சியில் காலமான செய்தி அதன் மூலமாகவே முதல் அறியக்கூடியதாக இருந்தது.

இருவருமே பிறந்த இடம் கல்வயல் தான் அதனால் அவர் பற்றி என்னால் நிறையவே கூற முடியும். தலைசிறந்த ஆசிரியராகவும் அதிபராகவுமே பலரும் அவரை அறிவார்கள். அவர் ஓர் அற்புதமான – தனித்துவம் மிக்க கவிஞன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகில் அறிந்தவர் கூட மிகமிகச் சிலரே. 'அலை' என்ற ஏடு மட்டும் அதனைச் சரியாக அளந்து அடையாளம் கண்டு கொண்டது.

அமைதியும் அடக்கமும் நிறைந்த பண்பாளர். புதுமெய்க் கவிதைகள், காணிக்கை ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் மூலம் தன்னை இனங்காண வைத்தார். தத்துவ ஆழத்தையும் சூழலையும், சூழல் பாதிப்பையும், கலை வடிவத்தையும் மிகமிருதுவாக இழைத்து நிழலாடும் அர்த்த மிகு அழகோடு சுயமான மொழி உருவில் பிறப்பெடுக்க வைக்கும் ஆற்றல் அவரிடத்தே காணப்பட்ட தனிச்சிறப்பு.

சமூகவியல் சிந்தனையும், தமிழ்தேசிய விடுதலைச் சிந்தனையும் அவர் எண்ணக் கருக்களாக விளங்கிய அதே வேளை அவை கவித்துவ வீச்சு மிக்கனவாகவும் விளங்கின.

“குடத்து விளக்கு” என்று அவரைச் சொல்வதை விட “கூடத்துக் கவி விளக்கு” என்றால் மிகையன்று. விமர்சகர்களால் அவர் பற்றிய மதிப்பீடு சரியாக முன்வைக்கப் படவில்லை. அவரது படைப்புக்கள் அனைத்தும் ஒரு முழுமையான தொகுப்பாக்கப்பட வேண்டும்.

அவர் பிரிவால் கலங்கும் குடும்பத்தார்க்குக் கூறக்கூடிய ஆறுதலும் அசல் உண்மையும் இது தான். அவரது எழுத்துக்கள் அவரை நிச்சயம் வாழவைக்கும்.

பெரிய அரசடி,
கல்வயல்,
சாவகச்சேரி,
வே. குமாரசாமி.

Comments

Popular posts from this blog

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.