கவிஞர் கால்நூற்றாண்டு பணிபுரிந்த மன்றம்

வீரசிங்கம் மகாவித்தியாலய வரலாறு ஸ்ரீமான் வீரசிங்கம் அவர்கள் மீசாலை வடக்குப் பகுதியில் 1840ம் ஆண்டிற்கும் 1915ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீவித்திருந்தார்கள். இவர் மீசாலை வடக்கில் இருந்த வேதாரணியரின் மகன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றவர். நியாய துரந்தரராவற்கான படிப்பும் படித்தவர். அவர் சீவித்திருந்த காலத்தில் இப்பகுதியிலுள்ளவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருந்தார்கள். தம் இளமைப்பருவத்திலிருந்தே இப்பகுதி யிலுள்ளவர்களைக் கல்வி அறிவு உள்ளவர்களாக்க முயன்றார். அந்தக்காலத்தில் அமெரிக்க மிஷனரிமார் அரசினர் உதவியோடு கிராமங்களில் பாடசாலைகளை உண்டாக்கிக் கல்வி கற்பித்து வந்தார்கள். அவர்களுக்கு மீசாலையில் இருந்து புத்தூருக்குப் போகும்தெரு - கண்டித் தெருவைச் சந்திக்கும் இடத்தில் தன்னுடைய காணியைப் பாடசாலை வைத்து நடாத்துவதற்குக் கொடுத்தார். அந்தப் பாடாசாலை மீசாலை முச்சந்திப் பாடசாலை எனக் கிறீஸ்தவ மிஷனறிமாரின் பாடசாலை ஆக 1924ம் ஆண்டு ஆவணி மாதம் முடிய நடைபெற்று வந்தது.

கிறீஸ்தவ மிஷனரிமார் ஆரம்ப கல்வி கற்பிப்பதன் மூலம் கிறீஸ்தவ சமயத்தையும் போதிப்பதையும் அவர் கண்டார். இப்பகுதியிலுள்ளவர்கள் அடிஅடியாகக் கைக்கொண்டுவந்த சைவசமயப்பற்று, கிறீஸ்தவர்களின் கல்வியால் பாதிக்கப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருந்தது. 'தான் வசிக்கும் ஊரவர்களும், தன் பிறந்த வம்சத்தில் உள்ளவர்களும் கல்வியறிவோடு சைவசமயப்பற்று பண்பாடு உடையவர்களாக வரவேண்டும்" என்பது ஒன்றே அவருடைய நோக்கமாக இருந்தது. மகா பராதத்தில் வந்த வீட்டுமா போலத் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் ' விவாகம் செய்வதில்லை" எனவும் விரதம் பூண்டுளார். இப்படியாகச் சைவசமயப் பற்றும், அதை வளர்ப்பதில் அயராத சேவையும் அவருக்கு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமானின் முன்மாதிரியால் வந்தது எனலாம். மரணமாகும் வரை நித்தியப் பிரமசாரியாகவும் கல்விச் சேவையையே முழு நோக்கமாகவும் கொண்டு சேவை செய்து வந்தார். நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 1860ம் ஆண்டளவில் மீசாலை வடக்குப் பகுதியில் உள்ள வேம்பிராய்க் குறிச்சியில் தன்னுடைய ஆதனத்தில் ஓர் சைவப் பாடசாலையை ஆரம்பித்து நடத்தினார். அப்பாடசாலையை தான் தலைமை ஆசிரியராக இருந்து வேறு ஆசிரியர்களையும் நியமித்து நடத்தினார். ஆசிரியர்களுக்கான வேதனத்தை தன் சொந்தச் செலவாகவே செய்து வந்தார். அந்தப் பாடசாலை மீசாலைக் கிராமத்தில் முதலில் வந்த சைவப் பாடசாலை ஆகும். அதில் கல்வி கற்றவர் சிலர் இப்பொழுதும் சீவந்தர்களாக இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் கிறிஸ்தவ மிஷனறிமாருக்கு அரசினர் பணஉதவி கொடுப்பதை அவர் கண்டார். தன்னுடைய வைச சமயப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அரசினர் உதவி பெறப் பாடுபட்டார். அக்காலம் நல்லூர் ஆறுமுக நாவலப் பெருமானின் சைவப் பாடசாலைகள் அரசினர் உதவி பெற்றுவந்தன. அது போலச் சாவகச்சேரியில் விசுவநாதர் தாமோதரம் பிள்ளை சைவசமயப் பாடசாலை உண்டாக்கி அரசினர் உதவியும் பெற்று நடத்திவந்தார். தாமோதரம் பிள்ளை அவர்களது பாடசாலை சைவாங்கில் கலாசாலை ஆக நடந்து வந்தது. 'வீரசிங்கத்தாரும் சாவகச்சேரிச் சங்கத்தானையில் நடைபெறும் தாமோதரம் பிள்ளை அவர்களின் சைவாங்கில் கலாசாலையைப் போல ஒன்று மீசாலையில் நடத்த முயற்சித்தார். மீசாலை முற்சந்தியில் நடந்துகொண்டிருந்த கிறீஸ்தவ பாடசாலைக்கு அருகில் உள்ள தன்னுடைய வேறொரு ஆதனத்தில் ஓர் உறுதியான கற்கட்டிடம் அமைப்பித்தார். அதில் மீசாலை சைவாங்கில் கலாசாலை என ஒரு பாடசாலையைத் தொடங்கினார். அப்பாடசாலைக்குத் தான் தலைமை ஆசிரியராக இருந்து மீசாலைப் பண்டிதர் ஏகாம்பரநாதன் அவர்களைத் தமிழ்ப்பண்டிதர் ஆகவும் சாவகச்சேரியில் உள்ள செல்லத்துரை என்பவரையும், மீசாலை கனகசபை என்பவரையும் ஆங்கில ஆசிரியர் களாகவும் நியமித்தார். இவர்கள் எல்லாருக்கும் வேதனம் அவராலேயே கொடுக்கப்பட்டது.

இந்த, வீரசிங்கத்தாருடைய சைவாங்கில கலாசாலை அவர் மரணபரியந்தம் அரசினர் உதவி யின்றியே நடைபெற்றது. இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் மீசாலை, அல்லாரை, கச்சாய், மந்துவில் கிராமங்களில் இப்போதும் சீவந்தர்களாய் இருக்கிறார்கள். 1965ல் இலங்கை சாகித்திய மண்டலத்தாரின் இலக்கியப் பரிசு பெற்ற கச்சாயூர்ப் புலவர் சினனையா அவர்கள் இப் பாடசாலையின் பழைய மாணாக்கர் ஆவர். இப் பாடசாலைக்கு அரசினர் உதவிப் பணம் பெற அவர் பலவாறு முயன்றார். அரசினரின் அக்காலக் கொள்கை கிறிஸ்தவ மிஷனறிமாருக்கு உதவியாய் இருந்தது, 1915ம் ஆண்டளவில் சாவகச்சேரிச் சங்கத்தானையில் நடைபெற்ற சைவாங்கில கலாசாலையிலும் ஆங்கிலப் பிரிவை அரசினர் மூடச் செய்தார்கள். அதன் பின்னர் அப்பாடசாலையும் தமிழ்ப்பாடசாலை ஆகவே நடைபெற்றது.

வீரசிங்கத்தார் தன்னுடைய வயோதிபத்தை உணர்ந்தார். தனக்குப் பின்பும் இந்தப் பாடசாலை சைவத்தையும் கல்வியையும் வளர்க்கத்தான் ஏற்பாடு செய்தார். அவர் தன்னுடைய ஆதனங்களின் வரும்படிகளிலிருந்தே இப்பாடசாலையை நடத்தி வந்தார். அந்த ஆதனங்களை யெல்லாம் இப்பாடசாலைக்குத் தரும சாதனஞ்செய்தார். அவற்றைப் பராமரித்துப் பாடசாலையை நடத்த ஓர் பரிபாலன சபையையும் சட்ட திட்டங்களுடன் நியமித்தார். 'மீசாலையில் தன்னுடைய பாடசாலை எக்காலமும் நன்கு நடைபெற்று அயல் கிராமவாசிகள் யாவரையும் சைவப் பண்பாடு உடையவர்கள் ஆகவும், கல்வி அறிவு உடையவர்கள் ஆகவும் ஆக்குதல் வேண்டும்." என்னும் ஒரே தியானத்துடன் 1916ம் ஆண்டு அளவில் சிவபதம் அடைந்தார். அவர் கண்டது கனவாகவில்லை. அவரது உறுதியான நினைவே வீரசிங்கம் வித்தியாசாலை.

(யாழ். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது பற்றிய தகவல்கள் இங்குமறுபிரசுரமாகிறது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்