மானாவளை வலைப்பதிவின் அறிவிப்பு

ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி! சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்து வந்தார். மல்லாவி துணுக்காய் பகுதிகள் அரசபடைகளால் சுற்றிவளைக்கப்படும் வேளையில் கிளிநொச்சிக்குப் இடம்பெயர்ந்து வந்த சில தினங்களில் சுகவீனமுற்று இயற்கை எய்தினார். தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார். இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. அடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. தமிழ் சமூகத்துள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் போலியான சம்பிரதாயங்களையும் மிகுந்த எள்ளலோடு கவிதையாக்கியவர். தமிழ்த் தேசியத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் செயலாற்றி, எழுதிவந்த இராமலிங்கம் அவர்களது மறைவு ஈழத்தமிழ் உலகுக்கும், இலக்கியத்துக்கும் பேரிழப்பு ஆகும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நவீன கவிதைகளூடாக இலக்கியப்பணியாற்றி வந்த இராமலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்! 26.08.2008.

Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்