மங்கா உயிரோவியம்

அ டு த் த வீட்டு நிகழ்வு , அ டுத்த கண்டம் அவுஸ்திரேலியாவிலிருந்து அறிந்த போது, தகவல் பரிமாற்ற நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியாது. செய்தியறிந்து செய்வதறியாது நின்றோம். துயர்தோய்ந்த அச்செய்தி ஒரு முடிவின்ஆரம்பம்.(BIGINNING OF AN END)

நிழலை நிஜமென்று மயக்க நிலையில் மிகவேகமாகச் சுழலும் பூம்பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மெய் எனும் பொய்த் தோற்றத்தை மெய்யாக நினைத்து எத்தனை செயற்பாடு. இந்த அரங்கில் நில்லாதனவற்றை நிலை என நினைப்பு. அழகிய ஒவியம்போன்றது அவரது வாழ்வு மங்குவாரின்றி மறையார் செயல்வீரர். (THEY SIMPLY FADE AWAY)தன்னைத்தான் காதலன் ஆவார். ஆகையால் அவரது வாழ்க்கை பிறருக்கு மனத்தாலும் தீங்கறியாது. ஆய்ந்தோய்ந்து எடுத்த கருமத்தைக் கச்சிதமாக முடிக்கும்ஆற்றல்அவருக்கு கைவந்த கலை. தான் சரியென உணர்ந்ததை எந்த சந்தர்ப்பத்திலும் காய்தல், உவத்தல் இன்றி துணிந்து சொல்பவர், செய்பவர். தான் பிழையெனக் கண்டதைச் செய்யவே மாட்டார். ஆதனால் அவரோடுநன்றாகப் பழகியவர்கள் கூட பிழையானதைச் செய்யுமாறு கேட்கத் தயங்குவர்.

நான் அவருடன் 34 ஆண்டுகள் பழகியும் அவரை முற்றுமுழுதாக அறிய முடிய வில்லை. “தோள்கண்டார் தோளேகண்டார்” அவர் ஒரு பல்பக்க பட்டை தீட்டப்பட்ட வைரம். ஓவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அழகு. அவரது வாழ்வும் அவ்வண்ணமே.(MULTIFACETED LIFE)அவர் எத்தனையோ பேருக்குப் படிப்பித்தார்.ஆயினும் அவர் வாழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்களோ அதிகம். எங்கள் குடும்பத்திற்கு மதிப்பு மிகு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.

நல்லது செய்தோரை நேரில் பாராட்டும் பண்பு இவரிடம் உண்டு. அப்படிப் பாராட்டப்பட்ட ஆசிரியை ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த அந்நிகழ்ச்சியை என்னிடம்கூறி மட்டிலா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இவரது வாழ்வு ஒரு பற்றற்ற துறவியினது போன்று தூயது. இவர் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். பிறர் இவருக்குத் துன்பம்செய்த போதெல்லாம் தானே வருந்துவார். பிறர்நோய் தன்நோய்போல் உணர்ந்தவர். இவர் பொறுப்புணர்ச்சி மிக்க தந்தை கணவர், நண்பர், ஆசிரியர், அதிபர், முகாமையாளர், கவிதாவிலாசம்மிக்க கவிஞர் ஆகிய பல பாத்திரங்களை இந்நாடக உலகில் ஏற்று திறம்பட அவற்றிற்கு நியாயம் வழங்கி உள்ளார்.

இவர் ஒரு பிறவிக்கவிஞர். இவரது வெளிவந்த இரண்டு கவிதைநூல் கள் இதற்குச் சான்று. இவருடன் பழகிய இனிய நிகழ்வுகள் மீட்பது துக்கத்துள் எல்லாந்தலை. “SORROWS´ CROWN OF SORROWS IS THE REMEMBRANCE OF HAPPIER THINGS" பிறருக்கு விழுந்து விழுந்து உதவி செய்யும் இவரது எச்சங்கள்-பிள்ளைகள். தந்தையார் எத்தகைய தக்கார் என்பதற்கு வாழும் உதாரணங்கள்.

கலையருள் தமிழிசையொடு கவின்பெறு
முருகென குழவிகள் ஐந்தும்
அருமைமிகு இல்லக்கிழத்தியும்
அமையப் பெற்றோன்,
பலரும் உவந்தேத்தும் பல்கலை மருமக்கள்
அவர்தம் கண்மணி பத்துடன்
நல் சுற்றத்துடனும் “ங” போல்வளைந்து
வாழ்ந்தே நின்நாமம் நிலமிசை நீடு வாழ்க.

ஓம்சாந்தி ! சாந்தி ! சாந்தி !

க.நாகலிங்கம்,
திருகோணமலை வடக்கு, கிழக்கு மாகாணசபை,
தலைமைச்செயலாளர் அலுவலகத்து
முன்னாள் நிருவாக அலுவலரும்
அரசாங்க அதிபரின்அந்தரங்க செயலாளரும்.

ஆத்ம சாந்தி


காலை எழுந்தவுடன்படிப்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
உன்னை வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
என்னும் பாரதிதாசன் கனவை நனவாக்கிட

நல்லாசான் எனும் பெயர்தனைத்தாங்கி
வீரசிங்கம்மகா வித்தியாலயம்தனில்
பாரதியின் கனவே முழுமூச்சாய்
முயன்ற முதல்வன் எங்கள் இராமலிங்கம்

காலம் எதுவும் கருதாது கண்ணும் கருத்துமாய்
மாணவர் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு
மகிழ்வுடன்மற்றவர் மனம் கோணாது
சலனமில்லாதுழைத்த முதல்வன் எங்கள் இராமலிங்கம்

மலையது எதிரே வந்திடினும்
மகிழ்வுடன்எதிர்த்தே வென்றிடணும்- என
மாணவர்ஸ்டம் அத்தனையும் களைப்பின்றி
களைந்த முதல்வன் எங்கள் இராமலிங்கம்

ஒழுக்கம் விழுப்பம் தருமென்று
ஒழுக்கம் அதனை மாணவருக்கு
ஒழுங்காய் அதனை எடுத்தியம்பி
ஒழுக்கசீலராக்கிய முதல்வன் எங்கள் இராமலிங்கம்

எங்கள் நல்எதிர்காலம ஒன்றே குறிக்கோளாய்
தங்கள் வாழ்நாள் அதனை அர்ப்பணித்து
தங்கள் காலம் முழுதும்சேவை செய்த
தவசீலன் முதல்வன் எங்கள் இராமலிங்கம்

ஆசான என்னும் அழகுமொழி கொண்டு
அன்புடன் அழைத்த எங்கள் இராமலிங்கம் ஆசான்
இன்று எமைவிட்டு பிரிந்த செய்தி மடுத்து
துன்பக்கடலில் துவண்டு நிற்கின்றோம்

காலம்அது செய்த விதிதானோ
காலம் அதை வென்றார் உலகிலுண்டோ
காலத்தால் நீவீர்செய்த உதவி தனை
நம்காலம்உள்ளளவும் மறக்கமாட்டோம்

சுக்கிலம்அது மறைந்தாலும்
நீவீர்செய் நல்தருமத்தால்
சூட்சுமம் என்னும் உனதருமை ஆத்மாவை
இறைவன் தன்வயப்படுத்திடவே
இறைவனை நாமும் இறைஞ்சுகின்றோம்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

வீரசிங்கம்பழைய மாணவர் சங்கம்
- கனடா

மீளும்நினைவுகள்


எம்இனிய அத்தானே!
காலமே கனிவாகி
கவிதையே மொழியாகி
ஞாலத்தில் வாழ்ந்தவரே!
மௌனமாய் விழிசிந்தும் நீருடன்
நீள்தொலைவில் இருந்து எழுதுகின்றோம்!

அந்த இனிய நாட்கள் இன்றும் எம்மனதில்!
மணவாள கோலத்தில் உன்மிடுக்கான தோற்றம்
உதிரான உன்அன்புப்புன்னகை
வற்றாத உன் அறிவுக்கடல்
உதவத்துடித்திடும் உன்இரு கரங்கள்
பாசமான இளகிய மனம்
இன்னும்
எத்தனை எத்தனை………………
அத்தனையும் பசுமரத்தாணியாக எம்நினைவில்!

உலகனந்த பெருமாளுக்கே தசாவதாரம்
ஆனால்…….. உனக்கெத்தனை அவதாரங்கள்ஐயா!
அன்புக் கணவனாய்
அறிவுத் தந்தையாய்
பார்போற்றும் பாவலனாய்
அறிவூட்டும் ஆசானாய்
நல்லதிபராய்
எமக்கெல்லாம் ஆசை அத்தானாய்
இல்லை, இல்லை உடன்பிறவா அண்ணனாய்
வாழ்ந்து காட்டிய கலங்கரை விளக்கு நீ!

விதி சொன்ன கதை கேட்டு
விழிவற்றிப் போனோம்நாம்
அத்தான், அத்தான் என்று
நாளுக்கு நாற்பது தடவை உச்சரித்த நா
வரண்டு கிடக்கிறது இன்று
நீவிர்நடந்த வழி முழுவதும்
நீஎங்கே என கேட்கவிழிசிந்தும் நீருடன்
உன் இருப்பிடம் தேடுகின்றோம்
எம்இதய அறையுள்இரண்டற கலந்தவரே
எம்இனிய அத்தானே
மண்ணும் விண்ணும்
உள்ளவரை அழியாது உன்நாமம்
மறவோம் நாம் உம்மை.

-மைத்துனிமார்

கல்வயலின்சொல்லேர்உழவா!



மூத்தவனாய் வந்தெங்கள் குடும்ப முதுசொத்தே
அத்தானென்ற சொத்தான வார்த்தையின் ஆண்டவனே
எத்தாலும் மறவாது மனதுள் நினைக்கவைத்து
சத்தான கல்வி கேள்விகளில் எம்மை நிறைக்க
நித்தம் எங்கள் வாழ்வின் நிழல்மரமாய்
வையத்துள் எமையெல்லாம் வாழ்வாங்கு
வாழவைத்த தெய்வமே இராமலிங்க ஐயனே
அழவைத்து எம்மை விட்டு ஏன்அகன்றாய்

சப்பிரகமுவா மாகாணத்தலை நகராம்
இரத்தினபுரியிலே ஆசானாய்சேவை செய்தீர்
சிவனொளிபாத மலை முகட்டில்சூரியனை
எமக்கெல்லாம் காட்டி மகிழ்வித்தீர்
அன்பால் ஆசையாய் அள்ளி அணைத்து
பண்பால் பாசத்தால் பகுத்தறிவால் நிறைத்து
இன்பமாய் நீங்கள் எம்மோடு வாழ்ந்த நாளினை
துன்பம் மறக்க துணையாக கொள்வோமே

மறக்க முடியலையே ஓடி மறைகிறதே
உறக்கம் எல்லாம் உன்நினைவால்
கடல்கடந்து வாழ்ந்தாலும் கலக்கம் அடையும்
உடலுணர்வில் எம்தேச உறவுக்குள் வேறுபாடில்லை
ஓடிவந்து பார்க்கவும் உன்முகத்தில் விழிக்கவும்
தேடி வழிபார்த்தோம் தேசநிலை மாறவில்லை
போரின்பிடிக்குள் போக்கிடமற்று மக்கள்
போக்கு வரவில்லா ஏக்கம்தடுக்கிறது

கல்வயலின் சொல்லேர் உழவா
கால்காட்டும் நிலத்தை கவி காட்டும் தரத்தை
இலக்கியத்தின் பெரும்பரப்பில் உன்புதுக்கவிதை
இலங்கும்ஈழத்தின் தமிழ்புதுக்கவிதை நாயகனே
மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய
ஆசானே, அதிபனே, கவிஞனே, கருத்தாளனே
சீராளா சிவதமிழ்தொண்டா சமயப்
பேராளாபெரு அருளாள பெறுவாய்முத்தி

மைத்துனர் விஜயபாலன்குடும்பம்,
லண்டன்

ஆத்ம இசை



அரசியலையும்
ஆத்மீகத்தையும்
இணைத்துப் பார்த்தவர் - இராமலிங்கனார்
ஈதல் இசைபட வாழ்தல்
உயிர்க்கு
ஊதியம் என்றே கருதி வாழ்ந்தவர்
எல்லா உயிரும் தன்னுயிர் போன்றே
ஏற்றி மகிழ்ந்தவர்
ஒற்றுமை ஒன்றே நமது பலம் என்று
ஓதியே தெரிந்தவர்
ஒளவை சொல் மந்திரம் - மற்றவை தலை பிய்க்கும்
தந்திரம் என்ற அன்றே சொன்னவர்
அத்தி பூத்தார் பேசுவதும்
சிரிப்பதும் அவரியல்பு – அவரை அறிந்தோர்
இதனை அறிவர்
செல்வச்சந்நிதி அமர்ந்த அருளொளி
கடவுள் சுவாமியின் திருவடி நிழலிடை
ஆத்ம சாந்தி அடையப்பெறுக
பிரார்த்திப்போம் நாமே ….

கடவுள் சுவாமியின் வாழையடி
வாழையென வந்த திருக்கூட்டம்

Comments

Popular posts from this blog

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

புகழ் பூத்த நண்ப